மனதை ஒருமுகப்படுத்தும் விளையாட்டான மல்லர் கம்பம்', சோழர்கள் காலத்திலேயே பிரபலமாக விளங்கியது. காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இந்தக் கலையை செழிக்கச் செய்தான்' என கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்காலத்தில் கிராமக் கோயில் திருவிழாக்களில் விளையாடப்படும் வழுக்கு மர விளையாட்டை மல்லர் கம்பத்துக்கு முன்னோடியாகக் கருதலாம்.
நடப்பட்ட மரக் கம்பத்தில் ஆசனங்களைச் செய்யும் நிலை மல்லர் கம்பம், கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் கயிறு மல்லர் கம்பம், தொங்கியபடி இருக்கும் கம்பத்தில் சாகசங்களைச் செய்யும் தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய பிரிவுகளில் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. இதில் ஆண்கள் மூன்று விதமான போட்டிகளிலும், பெண்கள் நிலை, கயிறு மல்லர் கம்பப் போட்டிகளிலும் பங்குபெறுவர்.
இந்த நிலையில், பிகார் மாநிலம் கயாவில் மே 4 -ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான 7-ஆவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டு அணி சிறப்பிடம் பெற்றுள்ளது.
இந்தச் சாதனை குறித்து மல்லர் கம்பம் தேசிய பயிற்சியாளர் எஸ். ராமச்சந்திரன் கூறியது:
பண்டையத் தமிழர்களின் வீர விளையாட்டான மல்லர் கம்பமானது, போட்டி ரீதியாக மகாராஷ்டிர மாநிலத்தவர்களால் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மல்லர் கம்ப விளையாட்டை பரப்பி வருகிறோம். இதற்காக துரோணா அகாதெமி மூலம் 100-க்கும் மேற்பட்ட மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகளைத் தயார்படுத்துகிறோம்.
2000- ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள நாங்கள், குழு மற்றும் தனிநபர் பிரிவுகளில் வெள்ளி வரை மட்டுமே வென்றிருந்தோம்.
கயாவில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் 24 மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் ஆர். தியோதத், கே.வி. ரோஹித் சாய் ராம், எம். தரணிதரன், ஆர். அமிர்தீஷ்வர், எஸ். மிதுன், எல். மணிதர்ஷன், ஆகிய ஆண்கள் அணியும், கே. பூமிகா, இ. பிரேமா, பி. பிந்துஸ்ரீ, வி. சங்கீதா, எம். மேகனா, வி. லேனாஸ்ரீ ஆகிய வீராங்கனைகள் அணியும் பங்கேற்றது. இதில் குழு பிரிவில் தமிழ்நாடு மகளிர் அணி மூன்றாமிடம் பிடித்து, வெண்கலம் வென்றது. ஆண்கள் அணி குழு பிரிவில் நான்காமிடத்தை பிடித்தாலும், தனிநபர் பிரிவில் (கயிறு மல்லர் கம்பம்) முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அந்த சாதனையை தமிழக அணியின் கே.வி. ரோஹித் சாய் ராம் என்ற மாணவர் படைத்தார்.
தற்போதைய நிலையில் மல்லர் கம்பம் விளையாட்டு போதுமான அளவில் அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரவில்லை என்றே கருதுகிறோம். இதனை சரிப்படுத்த தமிழக அரசு, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பத்தையும் இணைத்து நடத்த வேண்டும். உலகளவில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மல்லர் கம்பத்தை சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
திறமையான பயிற்சியாளர்கள் பற்றாக்குறையை களைய மத்திய, மாநில அரசுகள் அரசு மற்றும் தனியார் விளையாட்டுக் கல்லூரிகளில் மல்லர் கம்பம் பட்டயப் படிப்புகளை தொடங்க வேண்டும்'' என்கிறார் ராமச்சந்திரன்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கே.வி. ரோஹித் சாய் ராம் கூறியது:
குழு பிரிவில் குறிப்பிடத்தக்க இலக்கை அடைய முடியாத வருத்தத்தில் இருந்த நிலையில், தனிநபர் பிரிவில் கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தனிநபர் மல்லர் கம்பம் கயிறு பிரிவில் களமிறங்கினேன். பல்வேறு விதமான ஆசனங்களைச் செய்து, மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றேன். முதல் முறையாக தங்கம் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது'' என்கிறார்.
வெண்கலம் வென்ற தமிழ்நாடு அணியின் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய எம். மேகனா, இ. பிரேமா உள்ளிட்டோர் கூறியது:
மகளிர் பிரிவில் ஏற்கெனவே நான்கு முறை தங்கம் வென்ற மகாராஷ்டிர அணியிடம் வெறும் 1.85 புள்ளிகள் வித்தியாசத்திலும், மத்திய பிரதேசத்திடம் 2.25 புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில் தற்போது வெண்கலம் வென்றுள்ளோம். கடந்தாண்டு வெள்ளி வென்ற நிலையில், தற்போது வெண்கலம் வென்றது சற்று சறுக்கலை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழகத்துக்காக பதக்கம் வென்றதை மனநிறைவாகவும், பெருமிதமாகவும் உணர்கிறோம். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்.
சிறுவயது முதலே ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதின் விளைவாக தற்போது பதக்கங்களை வெல்ல முடிந்திருக்கிறது. இதற்கு எங்களுக்குப் பயிற்சியளித்த ராமச்சந்திரன், சங்கீதா உள்ளிட்ட பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்புமே காரணம். அடுத்தடுத்து தொடர் பயிற்சிகளின் மூலம் உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு. தமிழர்களின் வீர விளையாட்டான மல்லர் கம்பமானது அனைத்து மக்களிடம் சென்று சேர தற்போது வென்ற பதக்கங்கள் உதவும் என நம்புவோம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.