நாட்டுப்புறக் கலைகளில் புலியாட்டம் முக்கியமானதாகும். புலி வேடமிட்டு மனிதர்களால் ஆடப்படும் இந்தக் கலையில் மஞ்சள், வரிப் போல கருப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுகளால் உடலில் பூசிக் கொள்வர். இதனுடன் காது, வால் போன்றவையும் பொருத்தப்படும். பண்டைய தமிழ் மரபிலிருந்து இந்தப் புலியாட்டம் தெருக்கூத்துக் கலையில் ஒரு பகுதியாக உள்ளது.
அறுவடை பருவத்துக்குப் பின்பு மக்கள் தங்களது ஓய்வு நேரத்தில் சிலம்பம், புலியாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகளை அக்காலத்தில் கற்கும் வழக்கம் இருந்தது. இவை ஊர் திருவிழாக்களின்போது மக்களின் மகிழ்ச்சிக்காக அரங்கேற்றப்பட்டன. சிலம்பத்தில் உள்ள கை, கால் அசைவுகளே புலியாட்டத்திலும் கிட்டத்தட்ட இருக்கும். ஆனால், கையில் கோல் இல்லாமல், சிலம்பத்தில் உள்ள அசைவுகள் இடம்பெறும்.
காலப்போக்கில் திரைப்படம், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மேலோங்கியதால், நலிவடைந்து வரும் புலியாட்டக் கலையை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தஞ்சாவூர் வடக்கு வாசலைச் சேர்ந்த தமிழ்நாடு அரசின் கலை வளர்மணி விருது பெற்ற டி. துளசிராமன்.
அவரிடம் பேசியபோது:
'புலிகள் செய்யும் சேட்டைகள்தான் புலியாட்டமாக உருவெடுத்தது. ஒரு புலி மற்ற புலிகளுடன் உருண்டு புரளுவது, குட்டிக்கரணம் அடிப்பது, தாய் புலிகளுடன் குட்டிப் புலிகள் விளையாடுவது, இரைக்காகப் பதுங்குவது, பாய்வது என புலிகள் என்னென்ன செய்யுமோ, அதைத்தான் அடவுகளாகப் புலியாட்டத்தில் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஆட்டத்தில் மொத்தம் 16 அடவுகள் இருக்கின்றன. மேள இசைக்கு தகுந்தவாறு அடவுகள் இருக்கும்.
முன்பெல்லாம் புலியாட்டக் கலைஞர்கள் ஏராளமானோர் இருந்தனர். காலப்போக்கில் ஒவ்வொரு கலைஞரும் மறைந்ததால், இந்தக் கலையும் மறைந்துவிட்டது.
தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் நகரில் வசித்த காலஞ்சென்ற கலைப்புலி கோவிந்தராஜன் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பேருக்கு பயிற்சி அளித்தார். இவர்களில் பயிற்சி பெற்ற நானும், எனது நண்பர் கே. குமாரும் இணைந்து, இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக இளம் தலைமுறையினருக்கு பயிற்சியை அளித்து, மேடைகளில் அரங்கேற்றி வருகிறோம்.
தஞ்சாவூரிலுள்ள இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மாணவர்கள் உள்பட ஏறத்தாழ 50 பேருக்கு பயிற்சி அளித்தோம். இவர்களில் 30 பேர் தொடர்ந்து இக்கலையை ஆர்வத்துடன் நிகழ்த்தி வருகின்றனர்.
புலி வேடத்துக்கு நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் கொரில்லா பவுடரை தண்ணீரில் கலந்து உடல் முழுவதும் மஞ்சள் நிறம் பூசி, இடையிடையே வரி போல கருப்பு வர்ணத்தில் வரைய வேண்டும். முகம், வாய்க்கு சிவப்பு, வெள்ளை நிறத்தில் பூச வேண்டும். இதுபோல வரைவதற்கு ஒரு கலைஞருக்கு 2 மணிநேரமாகிவிடும். இந்த வேடம் 5 மணிநேரத்துக்கு நீடித்து இருக்கும்.
மேடையில் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை இக்கலையை நிகழ்த்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். குறைந்தது 15 கலைஞர்களாவது இருந்தால்தான் அந்நிகழ்ச்சி நன்றாக இருக்கும். காசி தமிழ்ச் சங்கமம், தென்னகப் பண்பாட்டு மையம், குடியரசு தின நிகழ்ச்சி, ராஜஸ்தான், பெங்களூரு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று இக்கலையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்.
உடல் முழுவதும் வர்ணம் பூசுவதற்கு இப்போதைய இளைஞர்கள் முன் வருவதில்லை. குளித்தால் கூட அவ்வளவு சீக்கிரத்தில் வர்ணப்பூச்சு மறையாது. இதனால் கற்க விரும்பும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இக்கலையில் ஒரு முறைக்கு ரூ. 1,000 மட்டுமே ஊதியம் கிடைக்கும். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பங்குனி மாதம் தொடங்கி 3 மாதங்களில் நிகழும் கோயில் திருவிழாக்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால், மாதத்துக்கு 2 நிகழ்ச்சிகள்தான் ஒரு கலைஞருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, பெரும்பாலான கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகக் கூலி வேலை பார்த்துகொண்டு, பகுதி நேரமாக இக்கலையைக் கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக ஈடுபடுகின்றனர். பள்ளிப் பாடத்திட்டத்தில் புலியாட்டக் கலையை இடம்பெறச் செய்தால், மாணவர்கள் மூலம் இதை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகும்'' என்கிறார் துளசிராமன்.
'வீர விளையாட்டுகளில் ஒன்றாகப் போற்றப்படும் புலியாட்டம், அக்காலத்தில் புலி வேட்டையை நினைவுபடுத்தும் விதமாக நடைமுறைக்கு வந்தது. அப்போதெல்லாம் பொழுதுபோக்குக்காக இதுபோன்ற கலைகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கலை தமிழகத்தில்தான் அதிகமாக நடைமுறையில் இருந்தது'' என்கிறார் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் முன்னாள் காப்பாட்சியர் ப. பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.