ஞாயிறு கொண்டாட்டம்

இந்திய கலாசார ஆன்மா... ஆரோவில்லின் பாரத் நிவாஸ்

அரவிந்தரின் ஆன்மிக வழியில் ஸ்ரீஅன்னையின் கனவுநகர் ஆரோவில்.

வ. ஜெயபாண்டி

அரவிந்தரின் ஆன்மிக வழியில் ஸ்ரீஅன்னையின் கனவுநகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.

இங்கு வசிக்கும் பிற நாட்டு மக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்காக பிரான்ஸ், ஆப்பிரிக்கா, திபெத், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 12 முனையங்கள் உள்ளன. இதன்வாயிலாக, உலகக் கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும், அந்தந்த நாட்டு தற்காப்புக் கலைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

பண்பாட்டு முனையங்களில் மிகப் பெரியதாக சுமார் 50 ஏக்கரில் 'பாரத் நிவாஸ்' எனப்படும் இந்திய கலாசாரப் பண்பாட்டு முனையம் அமைந்துள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட கலாசார மைய அரங்கங்கள் உள்ளன. சிறந்த கல்வி, சமூக அக்கறை, கலாசார பாதுகாப்பு, நவீன இயற்கையுடன் இயைந்த உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை, முழுமையான கலாசார வெளிப்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 'பாரத் நிவாஸ்' செயல்படுகிறது.

மாத்ரி மந்திர் யோகா மையத்துக்கு இணையான கலாசார மையமாக, 'பாரத் நிவாஸ்' பாரம்பரியமிக்க பழமையானதாக வளாகமாகத் திகழ்கிறது. இங்கு தமிழ்க் கலாசார மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரிக்கு அன்னை வந்த தினமான ஏப்ரல் 24-இல் கேரளத்தின் பாரம்பரிய வீரதீர கலையான களரிபயட்டு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி தொடக்கிவைத்தார். அதில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, களரியை நிகழ்த்திய கலைஞர்களைப் பாராட்டினர்.

களரிபயட்டு பயிற்சிக்காக அரபிந்தோ களரி கலையரங்கம் அமைக்கப்பட்டு, 20-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஆர்வத்துடன் கற்றுவருகின்றனர். கேரள பாரம்பரிய வீரமிக்க கலையான களரிபயட்டுவில் கலைஞர்கள் சிவப்பு ஆடையுடன், கையில் அதற்கான ஆயுதங்களை ஏந்தியபடி, நேர்த்தியாக களரிபயட்டுவை நிகழ்த்திக் காட்டும்போது பார்வையாளர்களின் மெய்சிலிர்க்கிறது.

'தற்காப்புக் கலையான களரிபயட்டு கலைபண்பாட்டு பயிற்சி 120 பேருக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது' என்று கூறுகிறார் 'பாரத் நிவாஸ்' பொறுப்பாளரான நாற்பத்து ஒன்பது வயதான ஜென்மஜெய் மொகந்தி.

ஒடிஸ்ஸாவைப் பூர்விகமாகக் கொண்ட இவர் எம்.பி.ஏ.பட்டதாரி. அவர் ஒடிஸாவின் கலாசார பண்பாட்டு மையம், இந்திய கலாசார நடன மையங்களை நடத்திவந்த நிலையில், அரவிந்தரின் ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் ஆரோவில்லுக்கு வந்து பாரத் நிவாஸின் பொறுப்பாளராகத் தங்கியுள்ளார். ஆரோவில் செயலராக குஜராத் அரசு மூத்த செயலர் ஜெயந்தி ரவி பொறுப்பேற்றவுடன் தேசிய கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளை அதிகம் நடத்திவருவதாகக் கூறும் மொகந்தி, அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 124 கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் கூறுகிறார்.

அவர் மேலும் கூறியதாவது:

'பாரத் நிவாஸ் கலாசார மையங்களில் நடைபெற்ற கலாசார நிகழ்வுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் பார்வையிட்டு பாராட்டியுள்ளார். பாரத் நிவாஸ் மூலம் ஹிந்தி இசை, கலாசார கலை நிகழ்ச்சிகள், நாடகம், சுபி நடனம், வெளிநாட்டு டாங்கோ நடனம் என பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், அவற்றை இளம்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

களரிபயட்டு பாரம்பரிய கலையானது இந்தியத் தற்காப்புக் கலையாகும். கி.மு.3 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்தக் கலையானது அதைப் பயிற்சியாக மேற்கொள்பவருக்கு சுறுசுறுப்பு, வலிமை, உடல் நலம், உள்ள தூய்மை ஆகியவற்றை கொடுப்பதாக அமைகிறது.

வர்மச் சிகிச்சையின் ஒரு பகுதியாகவும் களரிபயட்டு விளங்குகிறது. களரிபயட்டு தற்போது உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற தற்காப்புக் கலையாகிவிட்டது. உடற்பயிற்சி, நடனமுறைகள், சிகிச்சை என நவீன காலத்துக்கு ஏற்ப செயல்மாற்றம் பெற்று வெளிநாட்டவரால் விரும்பி கற்கப்படுகிறது.

பாரத் நிவாஸில் பயிற்சி பெற்ற சிலர் அருகேயுள்ள கிராமங்களிலும் களரிபயட்டு உள்ளிட்ட கலாசார வீர விளையாட்டு பயிற்சியை இளைஞர்களுக்கு அளித்துவருகிறது.

களரிபயட்டு கலாசார பயிற்சியுடன் சிலம்பம், ஒடிஸாவின் மால்கம், வாள்வீச்சு, யோகா என பல்வேறு பாரம்பரியப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. பாரத் நிவாஸில் ஆண்டு தோறும் அனைத்து மாநில கலாசார நிகழ்வுகளை நடத்தவும், அதனைத் தொடர்ந்து சார்க் 7 நாடுகளின் கலாசார நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி நடத்துவதன் மூலம் அன்னையின் கனவு நனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என்கிறார் மொகந்தி.

'பாரத் நிவாஸில், தற்காப்புக் கலைகளுடன் தமிழ் மாதமான மார்கழியின் கலாசார நிகழ்வு கிராமத்து மக்களை மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் கவர்கிறது' என்கிறார் அந்தப் பயிற்சியில் பங்கேற்ற ஆரோவில் வாசி.

'ஆரோவில்லின் பாரத் நிவாஸ் வளாகத்தில் பாரம்பரியப் பொருள்கள், அரியவகை மூலிகை உள்ளிட்ட ஓவியங்கள், கலைப் படைப்புகள், தெய்வீக மரச்சிற்பங்கள் என காணக்காண வியப்பூட்டும் கலைப் பொருள்கள் கண்காட்சியாக உள்ள கலாகேந்திரமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கு பஞ்ச தெய்வ வழிபாடும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. ஆன்மிகம், கலை, விளையாட்டு என உலக மனிதர்களுக்கான ஒட்டுமொத்த பண்பாட்டு மையமாகவும் பாரத்நிவாஸ் திகழ்ந்துவருகிறது' என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆரோவில் அறிவியல் பூர்வ இயற்கையை பாதுகாக்கும் ஆன்மிகப் பூமியாக மட்டுமல்ல; சாலை மழைநீர் சேமிப்பு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டச் செயல்பாடு என அறிவியல் பூர்வமான இடமாக மட்டுமின்றி இந்தியாவின் ஆன்மாவாகத் திகழும் கலை, பண்பாடுகளை காக்கும் மையமான பாரத் நிவாûஸயும் தன்னுள்ளே அடக்கியதாகவும் உள்ளது.

படங்கள்-கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT