ஞாயிறு கொண்டாட்டம்

பொய்க்காத பொய்க்கால் குதிரை...

வி.என். ராகவன்

நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா - ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர். ஒரு அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, பொம்மையில் செய்யப்பட்ட பொய்க் குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் தோள்பட்டையிலிருந்து தொங்கவிட்டு, இடுப்பில் பொருத்திக் கொண்டு குந்தளம், பேண்டு இசைக் கருவி அல்லது நையாண்டி மேள இசைக்கேற்ப ஆடப்படும்.

இந்தக் கலை கேரளம், ஒடிஸ்ஸா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை தஞ்சாவூரில்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மராட்டிய மன்னர்கள் காலத்தில், இக்கலை இங்கு வந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கலையில் பெங்களூரைச் சேர்ந்த மறைந்த டி.சி. சுந்தரமூர்த்தி - அனுசுயா பாய், சென்னையைச் சேர்ந்த கணேச ராவ் - இந்திராணி உள்ளிட்டோர் புகழ்பெற்றிருந்தனர். தஞ்சாவூரில் மறைந்த கிருஷ்ணய்யா, என்கோஜி ராவ், ராஜி ராவ் - சரஸ்வதி பாய், டி.ஏ.ஆர். நாடி ராவ் - காமாட்சி ஆகிய தலைமுறைகளின் வரிசையில் ஐந்தாவது தலைமுறையாக வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என். சிவாஜி ராவ், என். ஜீவா ராவ் பொய்க்கால் குதிரை ஆடி வருகின்றனர்.

இதுகுறித்து சிவாஜி ராவ், ஜீவா ராவ் கூறியது:

'பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் ராஜா - ராணி வேடம் போடப்படும். தொடக்கக் காலத்தில் ஆண்களே ராணி வேடம் போட்டு ஆடுவர். பெரும்பாலும் அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் எனக் குடும்பமாக ஆடப்பட்டு வந்தது. காலப்போக்கில் கணவன் - மனைவி ஆடத் தொடங்கி இப்போதும் தொடர்கிறது.

தஞ்சாவூர் அரண்மனையில் தசரா பண்டிகை, பெரிய கோயில் சதய விழாவில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினோம். அந்தக் காலத்தில் கோயில் திருவிழாவின்போது, கூட்டம் சேருவதற்காகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு எந்த ஆடல், பாடல் நிகழ்வும் இருந்ததில்லை.

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் தங்களது விழாக்களில் மக்களைக் கவருவதற்காக, பொய்க்கால் குதிரை ஆட்டத்தைப் பயன்படுத்தினர். மின் விளக்குகள் வருவதற்கு முன்பு தீப்பந்த வெளிச்சத்தில் ஆடப்பட்டது.

இதற்கு 'குந்தளம்' என்ற மேளக் கருவி வாசிக்கப்படும். பின்னர், பொய்க்கால் குதிரையாட்டத்துடன் பேண்டு வாத்தியம் சேர்க்கப்பட்டு இசைக்கப்பட்டதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், பேண்டு இசைக் கலைஞர்களுக்கு வெவ்வேறு வகைகளில் வாய்ப்புகள் குவிந்ததால், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கு வரவில்லை. இந்த ஆட்டத்துக்கு ராமநாதபுரத்திலிருந்து வந்த நையாண்டி மேளம், பின்னாளில் நாகசுரம் - மேளம் சேர்க்கப்பட்டது. காலப்போக்கில் திருவிழாக்களில் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டன.

தற்போது மக்களின் விருப்பத்துக்கேற்ப குந்தளத்துடன் பேண்டு வாத்தியம், நையாண்டி மேளம் சேர்த்து பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காளியாட்டம், காளையாட்டம் உள்ளிட்டவற்றை ஆடுகிறோம். ஒரு நிகழ்ச்சியில் குறைந்தது 15 பேர் பங்கேற்று ஆடி வருகிறோம். தை மாதம் தொடங்கி, ஆறு மாதங்களுக்கு கோயில் விழாக்களிலும் நிறைய வாய்ப்பும் கிடைக்கிறது. மாதத்துக்கு 10 நிகழ்ச்சிகளாவது கிடைத்துவிடும். நியாயமான ஊதியமும் கிடைக்கிறது. விவசாயப் பணிகள் தொடங்கிவிட்டால், எங்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும்.

இந்தக் கலையில் முன்னொரு காலத்தில் 100 குடும்பங்கள் இருந்தன. ஆனால், தற்போது பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளனர்.

கால் கட்டை ஆலம் விழுதில் செய்யப்படுகிறது. ஆலம் விழுதுதான் தேயாமல் நீடித்து வருவது மட்டுமல்லாமல், எடை குறைவாகவும் இருக்கும். இந்தக் கட்டையைக் காலில் நாடா மூலம் கட்டிக் கொள்ள வேண்டும். தோளிலிருந்து இடுப்பில் தொங்க விடப்படும் குதிரைக் கூடுடன், ஆடையைச் சேர்த்தால் மொத்த எடை 25 கிலோ இருக்கும். ஆட்டம் ஆடும்போது வியர்வை சேருவதால், எடை கிட்டத்தட்ட 40 கிலோவாக அதிகரிக்கும். இவ்வளவு எடையுடன் ஆடுவது கடினம் என்பதால், இக்கலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இதைக் கற்றுக் கொள்வதும் மிகவும் கடினம். முதலில் காலில் கட்டயைக் கட்டிக் கொண்டு 48 நாள்களுக்கு பயிற்சி எடுக்க வேண்டும். கீழே விழாமல் சமாளித்து நிற்பது, நடப்பது, இசைக்கேற்ப நடனமாடுவது போன்றவற்றைக் கற்க வேண்டும். அதன் பின்னர், காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு, குதிரையைத் தூக்கி மாட்டி ஆட வேண்டும். 'கால் கடுமையாக வலிக்கும்' என்பதால், இக்கலையைக் கற்றுக் கொள்ள யாரும் முன் வருவதில்லை. அந்தக்காலத்தைப் போல உணவுப் பழக்கம் இப்போது இல்லாததால், இன்றைய தலைமுறையினருக்கு உடலில் வலுவும் இல்லை. இந்தக் கலைக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.

தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சுற்றுலாத் துறை போன்றவற்றின் மூலம் பெரிய நிகழ்ச்சிகள் உள்பட தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளி மாநிலங்கள், அயல் நாடுகளிலும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. கலைக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதோடு, கலைஞர்கள் மிகுந்த மரியாதையுடன்தான் நடத்தப்படுகின்றனர். அரசு தரப்பில் முக்கியத்துவம் அளித்தால், இதைக் கற்பதற்கு இளைய தலைமுறையினர் நிறைய பேர் முன்வருவர்' என்றனர் சிவாஜி ராவ், ஜீவா ராவ்.

-வி.என். ராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT