(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் கோதையார் ஆற்றிலிருந்து வருகிறது. சுமார் 15 மீட்டர் உயரமும் சுமார் 300 மீட்டர் அகலமும் கொண்டது. வயதான மலையரசி நரைமுடியை விரித்துப் போட்ட வாறு அருவி குன்றிலிருந்து சறுக்கியவாறு இறங்குகிறது. திற்பரப்பு நீர்வீழ்ச்சியைச் செல்லும் வழியெல்லம் கிராமப்புறங்களை ரசித்தவாறே பயணிக்கலாம்.
ஏப்ரல், மே மாதங்களிலும் கோடை மழை காரணமாக, மிதமான தண்ணீருடன் விழும். ஜூலை முதல் பிப்ரவரி வரையில் நீர் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் விழும். அப்போது குளிக்க முடியாது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் படகு சவாரி, நீச்சல், கோயில் வழிபாடு செய்யும் வசதிகள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரை திற்பரப்பு அருவிக்கு வருகை தருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்போது நீரோட்டம் கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால், பார்வையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மழைப்பொழிவு அதிகமாக இருப்பதினால், வந்து போவதில் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிரமம் இருக்கும்.
திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் மே மாதத்தில் செய்யக் கூடிய மிகவும் பிரபலமான, சிலிர்ப்பூட்டும் செயல்களில் ஒன்று படகு சவாரி. நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள படகு மையத்திலிருந்து படகை வாடகைக்கு எடுத்து, கோதையார் ஆற்றில் ஓட்டலாம். சுற்றுப்புறத்தின் அழகையும் அமைதியான சூழலையும் ரசிக்கலாம். வழியில் சில பறவைகள் கிங்ஃபிஷர்கள், ஹெரான்கள், குரங்குகள் மற்றும் மான்களையும் காணலாம்.
திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள குளத்தில் நீச்சல் அடிக்கலாம். தண்ணீர் ஜில்லென்று இருப்பதோடு, கோடை வெயிலுக்கு படு இதமாக இருக்கும்.
நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாறையில் வெட்டப்பட்ட கோயிலான திற்பரப்பு மகாதேவர் கோயிலின் கட்டடக்கலை, சிற்பங்களை ரசிக்கலாம், பூஜையையும் செய்யலாம். திங்கள் தவிர இதர நாள்களில் மட்டுமே திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு வருகை தர வேண்டும்.
பத்மநாபபுரம் அரண்மனை:
திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. திருவிதாங்கூர் மன்னர்களின் வசிப்பிடமாக இருந்தது. பாரம்பரிய கேரள கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மரத்தால் கட்டப்பட்டுள்ள அரண்மனையில் நுணுக்கமான சிற்பங்கள், ஓவியங்கள், சுவரோவியங்களைக் கொண்டுள்ளது. ராஜாவின் படுக்கையறை, ஆலோசனை அரங்கம், தர்பார் மண்டபம், அருங்காட்சியகம், கடிகாரக் கோபுரம் போன்ற அரண்மனையின் பல்வேறு பகுதிகளை பார்க்க வேண்டியவை. அரண்மனை திங்கள்கிழமையைத் தவிர, மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு. இந்த அரண்மனை தமிழ்நாட்டில் இருந்தாலும், கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாத்தூர் நீர்வழி (கால்வாய்):
மாத்தூர் நீர்வழிப்பாதை - ஆசியாவின் மிகப் பெரிய நீர்வழிப்பாதைகளில் ஒன்று. திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான மகேந்திரகிரி மலைகளில் உற்பத்தியாகும் ஒரு சிறிய நதியான பரளி ஆற்றின் குறுக்கே இந்த நீர்வழிப்பாதை கட்டப்பட்டுள்ளது . பட்டணம்கல் கால்வாயின் நீரை ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு, சுமார் 1 கி.மீ தூரத்துக்கு மாத்தூர் நீர்வழிப்பாதையே கொண்டு செல்கிறது. இந்த நீர்வழி 1240 மீ. நீளமும் தரையிலிருந்து 115 மீ. உயரமும் கொண்டது, கால்வாய் பாலத்தை 28 தூண்கள் தங்கி நிற்கின்றன.
வட்டக்கோட்டை கோட்டை:
18 -ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர்களால் கடலோரத்தில் இந்தக் கோட்டை, திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை பாறைகளை வெட்டி கட்டப்பட்டு, வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அகலமான கோட்டை சுவர்கள், பீரங்கிகள் , கண்காணிப்பு கோபுரங்கள் போன்றவை இங்குண்டு. கோட்டையின் ஒருபக்க சுவரை கடல் அலைகள் எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன.
-தென்றல்
எப்படி செல்வது...
திற்பரப்பு நீர்வீழ்ச்சியின் சுற்றுப்புறப் பகுதிகளில் உணவு, தங்கும் விடுதிகள் உள்ளன. கன்னியாகுமரி உட்பட அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க மூன்று நாள்கள் போதும்.
திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும், திற்பரப்பு கிராமத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ரயில் மூலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு வர, அருகிலுள்ள ரயில் நிலையம் குளித்துறை ஆகும், திருவனந்தபுரம் விமானமானது: திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.