இரு சக்கர வாகனங்களின் சாகசப் போட்டிகளில் சாதித்துவருகிறார் பெங்களூரைச் சேர்ந்த முப்பது வயதான ஐஸ்வர்யா பிஸ்ஸே. இவர் சர்வதேச டபிள்யூ . ஆர்.ஆர்.சி. பந்தயத்தின் 'அல்டிமேட் ரேலி-ரைடு' போர்ச்சுகல் 2025 பிரிவில் பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2025 செப்டம்பர் 22 முதல் 28 வரை போர்ச்சுகலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆறு நிலைகளில் கடக்க வேண்டிய தூரம் 2 ஆயிரம் கி.மீ. ஆகும். கார், பைக், டிரக் வாகனங்களுக்கு தனித்தனியாக ரேஸ் நடக்கும். போர்ச்சுகல், ஸ்பெயின் வழியாக 100 சதவீதம் சரளைக் கற்கள் உள்ள பாதையில் பைக்கை செலுத்த வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும் விபத்து ஏற்படும்.
இந்த வெற்றியை அடையும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையுடன் முதல் ஆசியர் என்ற சாதனையையும் படைத்துள்ளா ஐஸ்வர்யா பிஸ்úஸ. இதோடு, சர்வதேச முதல் தர வாகன ஓட்டிகள் பட்டியலில் உலக தர வரிசையில் 27-ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.
அவர் கூறியது:
'இளம் வயதில் பைக்கை வேகமாக ஓட்டுவேன். அந்த மோகம்தான் என்னை அதிவேக பைக் பந்தயத்துக்கு அழைத்து வந்தது. சாதனை வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக, 'டி.வி.எஸ். ரேஸிங்' அமைப்புக்கும் நன்றி.
சர்க்யூட், ஆஃப்-ரோடு மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையாக இருக்கும் நான், தொடக்கத்தில் 'டி.வி.எஸ். மேதாவி', 'எப்.ஐ.எம். பஜாஜ்' உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று பெண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றேன்.
2017 முதல் தொடர்ச்சியாக 6 இரு சக்கர வாகன தேசிய ரேலி சாம்பியன்ஷிப் உள்பட ஏழு தேசிய பட்டங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியும் நான்தான்.
2018-இல் ஸ்பெயினில் நடைபெற்ற 'பாஜா அரகான்' உலகப் போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றேன். 2019-இல் ஜூனியர் பிரிவில் 2-ஆவது இடத்தைப் பெற்றேன். சர்க்யூட் ரேசிங்கில், 'ஹோண்டா ஒன்-மேக்', 'டி.வி.எஸ். ஒன்-மேக்' பட்டங்களையும் வென்றேன்.
தரமாக சீராகப் போடப்பட்டிருக்கும் தார் தடங்களில் அதிவேகமாக நான்கு, இரண்டு சக்கர வாகனங்கள் சீறிப் பாயும் ரேஸ்களிலிருந்து டபிள்யூ. ஆர்.ஆர்.சி. பந்தயங்கள் மாறுபட்டன. வாகனம் ஓட்டக் கடினமான மணல் பாங்கான பாலைவனம், மேடு பள்ளங்கள் நிறைந்த நிலப்பரப்புகள், சரளைக் கற்கள் சகஜமாகச் சிதறிக் கிடக்கும் பாதைகளில் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
2025-க்கான 'ரேலி டு மரோக் 2025' போட்டிகள் அக்டோபர் 12 முதல் 18 வரை மொரோக்கோவில் நடைபெற்றது. இதற்கான போட்டியின் தடம் சஹாரா பாலைவன மணல் குன்றுகள், பாறைப் பாதைகள், பண்டைய வர்த்தகப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகள் வழியாக சுமார் 2,500 கி.மீ. அமைந்திருந்தது.
இந்தப் போட்டி 2025 உலக 'ரேலி - ரைடு' சாம்பியன் தேர்வுக்கான இறுதிச் சுற்றாகும். இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய, ஆசியப் பெண்மணி என்ற பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது.
அடுத்த 'டக்கார் பந்தயம் 2026' ஜனவரியில் சவூதி அரேபியாவில் நடைபெறும். 8 ஆயிரம் கி.மீ. தூர கரடு முரடுபாதையில் பைக் ஓட்ட வேண்டும். அதிலும் கலந்து கொள்வேன்'' என்கிறார் ஐஸ்வர்யா பிஸ்úஸ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.