சவூதி அரேபியாவில் 2034-ஆம் ஆண்டில் எப்.ஐ.எப்.ஏ. கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக சுமார் 350 மீட்டர் (1,150 அடி கிட்டத்தட்ட 115 மாடி கட்டட உயரம்) உயரத்தில் 'ஹைடெக்' மைதானம் உருவாக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
உலகின் முதல் வான்வெளி (ஸ்கை) மைதானமான இதற்கு 'நியோம் ஸ்டேடியம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சவூதியின் வடமேற்குக் கடற்கரையில் உருவாகிவரும் 170 கி.மீ. நீளமுள்ள நேரியல் நகரமான தி லைனில் அமையும்.
சுமார் 46,000 பார்வையாளர்களை அமர வைக்கலாம். மைதானத்தின் அனைத்து தேவைகளுக்கும் சூரிய ஒளியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்த மைதானத்துக்கு வந்து செல்ல ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தரைமட்டத்திலிருந்து வந்து போக அதிவேக லிஃப்ட்டுகள் அதிக அளவில் இயக்கப்படும். காலிறுதி கால்பந்துப் போட்டிகள் வரை இந்த வான்வெளி அரங்கில் நடக்கும்.
வான்வெளி விளையாட்டு அரங்குடன் மேலும் 8 புதிய விளையாட்டு அரங்கங்கள் சவூதியில் கட்டப்படவுள்ளன. 5 விளையாட்டு அரங்கங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. இதற்கான செலவு 20 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,76,471 கோடி).
2027-இல் கட்டுமானத்தைத் தொடங்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. பணிகள் 2032-இல் நிறைவடையும்போது, அது உலகளாவிய பொறியியல் அற்புதமாக நிமிர்ந்து நிற்கும். இந்த அரங்கைப் பார்க்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அதனால் சவூதியின் பொருளாதாரம் மேம்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.