ஞாயிறு கொண்டாட்டம்

அசத்திய அனுபமா

ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளால் 19-ஆம் நூற்றாண்டில் ஆடப்பட்ட விளையாட்டு ஸ்னூக்கர் ஆகும்.

தினமணி செய்திச் சேவை

சென்னை எம்.ஓ.பி. கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் இருபத்து மூன்று வயதான அனுபமா ராமச்சந்திரன், ஐ.பி.எஸ்.எஃப். உலகப் பெண் ஸ்னூக்கர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எஸ்.எஃப். உலகப் போட்டியில் 15 ரெட் மகளிர் பிரிவில் அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றார். ஹாங்காங்கின் என்ஜி ஆன் யீயை வீழ்த்திப் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், மீண்டு வந்தார். ஹாங்காங் வீராங்கனை 3 முறை உலக சாம்பியன் ஆவார். அவரை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அனுபமா.

2002-இல் பிறந்த அனுபமா சென்னை வித்யா மந்திர் பள்ளியில் படித்தவர். அவர் தனது பதிமூன்று வயதில் பில்லியர்ட்ஸ் ஆட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தீவிர பயிற்சியைப் பெற்று ஆடி வருகிறார். 15 வயது முதல் 8 முறை ஜூனியர் தேசிய சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். 2017 -ஆம் ஆண்டுமுதல் யு16 மகளிர் ஸ்னூக்கர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார். பின்னர் யு21-இல் உலகக் கோப்பையில் வெள்ளி வென்றிருந்தார். 2024-இல் ஆசிய ஸ்னூக்கர் மகளிர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் அனுபமா.

தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்ட அனுபமா நிகழாண்டு இந்தியன் சிக்ஸ் ரெட் சாம்பியன்ஷிப்பில் கீர்த்தனா பாண்டியனிடம் கடும் போட்டிக்குப் பின்னர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது அவர் உலக சாம்பியனாகியுள்ளார்.

ஸ்னூக்கர் விளையாட்டு எப்படி?

ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளால் 19-ஆம் நூற்றாண்டில் ஆடப்பட்ட விளையாட்டு ஸ்னூக்கர் ஆகும். பச்சைநிறத் துணியால் மூடப்பட்ட மேஜையில் மொத்தம் ஆறு துளைகள் இருக்கும். இதில் ஒரு வெள்ளைப் பந்து, 15 சிவப்புப் பந்துகள் மற்றும் மஞ்சள், பச்சை, நீலம், பிங்க், கறுப்பு நிறம் கொண்ட 6 பந்துகள் என மொத்தம் 22 பந்துகள் பயன்படுத்தப்படும். தனிநபர், அணிகள் பிரிவில் ஆட்டங்கள் நடைபெறும்.

இங்கிலாந்திலேயே பெரும்பாலும் விளையாடப்பட்ட ஸ்னூக்கர் ஜென்டில்மேன் ஆட்டமாகக் கூறப்பட்டது. 1919-இல் 'பில்லியர்ட்ஸ் அசோசியேஷன்' அமைக்கப்பட்டு விதிகள் வகுக்கப்பட்டன. தொழில்முறை விளையாட்டாக மாறியவுடன் உலக தொழில்முறை பில்லியர்ஸ் & ஸ்னூக்கர் அசோசியேஷன் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

முதல் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 1927-இல் நடைபெற்றது. ஜோ டேவிஸ் முதல் உலக சாம்பியன் ஆவார். 1946 வரை தொடர்ந்து 15 உலகப் பட்டங்களை வென்றிருந்தார்.

இந்தியாவிலும் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆட்டத்துக்கு வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தை ஆட மிகுந்த தொகை தேவைப்படும் என்பதால் குறைந்த அளவிலான வீரர், வீராங்கனைகளே ஆடி வருகின்றனர். பங்கஜ் அத்வானி, செüரவ் கோத்தாரி, கீத் சேத்தி ஆகியோர் பிரபலமான பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் வீரர்கள் ஆவர். தற்போது தமிழ்நாடு அரசின் உதவியால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

-பா.சுஜித்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

சன்டே ஜிம் கேர்ள்... மஹிமா குப்தா!

உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?

வடகிழக்கு பருவமழை - நீர்நிலைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

SCROLL FOR NEXT