மேலைநாடுகளில் பிரகாசமான விளக்கொளியில் மகிழ்ச்சியுடன் கூச்சல் கும்மாளமிட்டு பிறந்த நாள் விழா எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இது நம்மிடையேயும் பரவிவிட்டது. கேக் வகைகள், வண்ண பலூன் அலங்காரம், பரிசுப் பொருள்கள், பிறந்த நாள் தலைப்பாகை, வயது எண்ணிக்கையில் மெழுகுவர்த்திகள், விளையாட்டுப் போட்டிகள், வாழ்த்துப் பாடல் என அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.
ஆரம்பக் காலத்தில் மன்னர்கள், பிரபுக்கள், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே கோலாகலமாகத் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். எகிப்து ஃபாரோ மன்னர்கள், அரசன் ஹெராட் ஆகியோரின் படாடோபப் பிறந்த நாள் விழாக்கள் பற்றிய சரித்திரச் சான்றுகள் பல உள்ளன.
இந்த விழாக்களில் முக்கியப் பங்கு வகிக்கும் 'கேக்' வெட்டும் பழக்கம் முதன் முதலில் யவனர்களால் (கிரேக்கர்) தான் அறிமுகமானது. விதவிதமான பிறை வடிவிலான, தேன் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக் வகைகளை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர். இதைப் பார்த்து ரோமானியர்களும் அவ்விதமே செயல்பட்டனர். பழங்கால ஸ்கான்டினேவியன் (நார்வே) மொழியின் 'காகா' என்ற வார்த்தையிலிருந்து தான் 'கேக்' என்ற சொல் உருவானது. அதன் மீது வயதுக்கு ஏற்ப மெழுகுவர்த்திகளை ஏற்றி, அவற்றை வாயால் ஊதி அணைத்து, பிறகு கத்தியால் வெட்டும் வழக்கத்தை ஏற்படுத்தினர். ஒரே ஊதலில் எல்லா மெழுகுவர்த்திகளையும் அணைத்துவிட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. மெழுகுவர்த்திகள் வாழ்வை ஒளி மயமாக்கும் எனக் கருதுகின்றனர் ஜெர்மானியர்!
விழா மேடைக்கு அலங்கரிக்கப்பட்ட 'கேக்' கொண்டு வரும்போது 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடல் இசைக்கப்படும். கின்னஸ் புத்தகத்தில் இந்தப் பாடல்தான் எல்லாராலும் விரும்பிக் கேட்கப்
படும் பாட்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து 'ஃபார் ஹி இஸ் எ ஜாலி குட் ஃபெலோ' பாடல் இடம் பிடித்துள்ளது. முதல் பாடலை 1893-இல் எழுதிய பேட்டி ஹில், மில்ரெட் ஜேஹில் எனும் இரு அமெரிக்கச் சகோதரிகளும் பள்ளி ஆசிரியர்கள். பேட்டி ஹில் பாட்டெழுத, மற்றொருவர் அதற்கு இசை அமைத்தார். முதன் முதலில் அது 'குட் மார்னிங் டு ஆல்' என்று காலையில் வகுப்பில் பாடப் பெற்று வந்தது.
1935-இல் 'சம்மி' கம்பெனி இதற்குப் பதிப்புரிமைப் பெற்றது. 1963-இல் அது மேலும் 2030 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்பு, பிரபல 'வார்னர்' சினிமா கம்பெனியின் அதிபர் வார்னர் சாப்பல் இதன் உரிமையை 1990-இல் 15 மில்லியன் டாலர் கொடுத்துப் பெற்றார். அந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலின் மதிப்பு 5 மில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்றும் ஆண்டுக்கு ஏறக்குறைய சுமார் 2 மில்லியன் டாலருக்கும் மேல் ராயல்டி தொகையாக அள்ளிக் கொடுக்கிறது 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடல்.
-தில்லி பா.கண்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.