மழை எல்லா இடங்களிலும் உண்டு. குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாக மழை பெய்யும் பகுதியை 'பாலைவனம்' எனக் கூறுவர். சில இடங்களில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும். மழையிலேயே கின்னஸ் சாதனை செய்த நகரங்களும் உண்டு. அந்தப் பெருமை இந்தியாவையே சாரும். உலகில் மிக அதிக மழை பெய்யும் பத்து நகரங்கள்:
மெளசின்ராம், இந்தியா:
மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள இந்த நகரமானது ஷில்லாங்கிலிருந்து 69 கி.மீ. தொலைவில் உள்ளது. மிக அதிகபட்சமாக 11,872 மி.மீ. ஓராண்டில் இங்கு பெய்து கின்னஸ் சாதனை செய்துள்ளது. 1985-இல் மிக அதிகபட்சமாக 26,000 மி.மீ. மழை பெய்தது.
2022 ஜூன் 17அன்று 24 மணி நேரத்தில் 1003.6 மி. மீ. மழை பெய்து, கதி கலக்கியது. இந்தப் பகுதி அசாதாரணமான மழை, நீண்ட பருவ மழை, குறுகிய வறண்ட பருவம் கொண்டது.
சிரபுஞ்சி, மேகாலயா:
சிரபுஞ்சி பூமியில் மிக அதிக மழை பெய்யும் இடம். இந்தப் புகழைப் பெறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சில நேரங்களில் பகலிலும் இரவிலும் இடைவிடாமல் பெய்யும் மகத்தான மழையைப் பற்றிய ஒரு யோசனையை பெற ஒருவர் அதனை அனுபவிக்க வேண்டும். தலை முதல் கால் வரை நனைய வீட்டிலிருந்து சில படிகள் இறங்கினாலேபோதும். ஒரு குடை எந்த நோக்கத்துக்கும் உதவாது.
மே-அக்டோபர் வரை அதிக மழை ஆர்ப்பரிக்கும் இங்கு 1960-61இடையே ஒரு ஆண்டுக்குள் 26,461 மி.மீ. மழை பதிவானது. இது உலக சாதனை. 1861 ஜூலையில் ஒரே மாதத்தில் 9,300 மி. மீ. மழை பெய்து உலக சாதனை படைத்தது.
சிரபுஞ்சியில் வறட்சியும் நிலவும். இதனை 'தமிழக வறட்சி' என அழைப்பர்.காரணம் நீலகிரி பகுதியில் இப்படி வறட்சி ஏற்படுவது உண்டாம்.
டூடூடெண்டோ, கொலம்பியா:
கொலம்பியாவின் சோகோ பகுதியில் உள்ளது. ஆண்டுக்கு 11,770 மி.மீ. மழை பெய்யும். கடல் மட்டத்திலிருந்து 46.74 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டில் 350 நாள்கள் மழை பெய்யும். ஆகஸ்டில் மிக அதிக மழை. பிப்ரவரியில் குறைவு.
மில்பார்டா சவுண்ட், நியூஸிலாந்து:
நியூஸிலாந்தில் தெற்குத் தீவில் தென் மேற்கில் உள்ள ஒரு நகரம். மழை பெய்த சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான நீர்வீழ்ச்சிகளைக் காணலாம். ஆயிரக்கணக்கான மலைகளின் மீது ஏராளமான ஏரிகள் உள்ளன. ஆண்டுக்கு 6,813 மி.மீ. மழை பெய்யும். ஆண்டில் குறைந்தது 182 நாள்கள் மழை நிச்சயம். 24 மணி நேரத்தில் 250 மி.மீ. மழை சகஜம்.
டெபெண்ட்சா, கேமரூன்:
கேமரூன் குடியரசின் தென் மேற்குப் பகுதியில் உள்ளது. கேமரூன் கடற்கரையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நேரடியாக எதிர்கொள்ளும் தென் மேற்கு மூலையில் கேமரூன் மலைடிவாரத்தில் உள்ளது.ஆண்டுதோறும் 12,390 மி.மீ. மழை பெய்யும் மிக ஈரமான காலநிலை கொண்டது. மிக நீண்ட மழைக் காலம், குறுகிய வறண்ட காலம் கொண்டது.
ஹிலோ, ஹவாய்:
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஒரு மாவட்டம். கீழ்க் காற்று வீசும் பக்கத்தில் உள்ளது. ஏராளமான மழைப் பொழிவு உண்டு. அமெரிக்காவின் மிக ஈரமான இடம். மாதத்துக்கு 12அங்குலம் மழை சகஜம். டிசம்பரில் 19 அங்குலம் வரை மழை. உயரம் ஏற, ஏற மழை கூடும். 3,220-5,100 மி.மீ. வரை மழை பெய்யும்.
யகுசிமா, ஜப்பான்:
ஜப்பானின் கோஷிமா மாகாணத்தில் உள்ள ஓசுமி தீவுகளில் ஒன்று. யாகுஷிமா தேசிய பூங்காவின் எல்லைக்குள் உள்ளது. மழைப் பொழிவு மிக அதிகம். ஒவ்வொரு மாதமும் 250 மி.மீ. பெய்யும். ஜூனில் அதிக பட்சமாக 773 மி.மீ. மழை பெய்தது. இங்கு 4,000-10,000 மி.மீ. வரை வருடம்தோறும் மழையளவு மாறும்.நிலச்சரிவுகளும் உள்ள பகுதி.
டுல்லி, ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள ஒரு கடற்கரையை ஒட்டிய கிராமம். மிகவும் ஈரப் பதமான நகரங்களில் ஒன்று. சராசரி ஆண்டு மழைப் பொழிவு 4,000-7,000 மி.மீ. ஆகும். 2011-இல் இங்கு 300 கி.மீ. வேகத்தில் புயல் அடித்து நகரின் 90% கட்டடங்கள் காலி. காற்றின் தாக்கமும்,மழைத் தூறலும் சகஜம்.
பிரின்ஸ் ரூபர்ட், கனடா:
கனடாவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது அலாஸ்கன் பன்ஹென்டின் கெய்ன் தீவில் உள்ளது. மிகவும் ஈரப் பதமான இடம் என்பதால், 'வானவில் நகரம்' என அழைப்பர். கோடைகாலத்திலேயே குளிரும். ஆண்டுக்கு 240 நாள்கள் மழை என்பதால் 3,066 மி.மீ. மழை நிச்சயம். இந்தப் பகுதியில் பனி உருகும். பனிப் புயலும் உண்டு.
ஹோகிடிகா, நியூஸிலாந்து:
நியூஸிலாந்தின் தென் ஆல்ப்ஸ் பகுதியில் இருப்பதால் எப்போதும் மழைத் தூறலாவது விழும். மிக ஈரமான பகுதி. தெற்கு தீவின் மேற்குக் கடற்கரை பகுதியில் உள்ளது. லேசான கோடை காலம். குளிர்ந்த குளிர்காலம். ஆண்டுக்கு 2,364மி.மீ. மழை பெய்யும். ஆண்டுக்கு 195 நாள் மழை நிச்சயம். இங்கு மரத்தின் மீது நடக்கலாம். கிவி பறவையைப் பார்த்து, அதற்கு உணவளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.