ஞாயிறு கொண்டாட்டம்

மாட்டு வண்டியில் நூலகம்

நூறாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர்.

வி.என். ராகவன்

நூறாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19- ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்

களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது.

இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டியின் மாதிரி வடிவம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நூலகத் துறைத் தலைவர் முனைவர் சி. வேல்முருகனிடம் பேசியபோது:

'நாட்டில் நூலக இயக்கம் மலருவதற்காக இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலத்தில் மதுரை கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற பொருள்காட்சியில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய ஓவியத்தை அவர் காட்சிப்படுத்தினார். இது அங்கு சென்ற மன்னார்குடி கெளமார குருகுலத்தைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.வி. கனகசபை பிள்ளையின் கண்ணில் பட்டது.

முதியோர் கல்விக்கான குருகுலத்தை நடத்திய கனகசபை பிள்ளை, மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டியில் நடமாடும் நூலகத்தை இலவசமாகத் தொடங்கினார். இதை 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் எஸ்.ஆர். ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.

கூடார வடிவிலான மாட்டு வண்டியில் இருவர் பக்கங்களிலும் நூல்களை அடுக்கி வைக்க அலமாரிகள் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள், பக்தி இலக்கிய நூல்கள், சித்த மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, கணிதம், வரலாறு, சமூகவியல், ஆன்மிகம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தத்தில் 3,782 நூல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மாட்டு வண்டியின் பக்கவாட்டில் கல்வி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் படங்களும் இடம்பெற்றன.

அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற தன்னார்வலர்கள் இரு மாடுகளுடன் கெளமார குருகுலத்துக்குச் சென்று, கனகசபை பிள்ளையிடம் முன்பதிவு செய்து, நூல்களுடன் கூடிய மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாயக் கூடம் என்கிற சாவடியில் சில நாள்களுக்கு நிறுத்தப்படும் இந்த நடமாடும் நூலகத்திலிருந்து மக்கள் நூல்களைப் பெற்று, வீடுகளுக்கு எடுத்துச் சென்று படித்து, மீண்டும் கொடுத்தனர். சிலர் வண்டி நிறுத்துமிடத்தில் நூல்களை வாங்கிப் படித்து திரும்ப ஒப்படைத்து சென்றனர். இதுபோல, 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறை நூல்கள் கொடுத்து, திரும்ப வாங்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 75 கிராமங்களுக்கு 275-க்கும் அதிகமான முறை நூலகம் பயணம் செய்தது.

இதன்பின்னர்தான் கடலூர் மாவட்டம் வில்வராயநத்தத்தில் சைக்கிளில் 1932- ஆம் ஆண்டிலும், தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆண்டிப்பட்டியில் மாட்டு வண்டியில் 1936 ஆம் ஆண்டிலும் நடமாடும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட குண்டூர் மாவட்டத்திலுள்ள பெத்தபாலம் பகுதியில் படகு நூலகம் 1935-ஆம் ஆண்டு அக்டோபர் 25-இலும் தொடங்கப்பட்டது.

கும்பகோணத்தில் 1933 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாமகத் திருவிழாவிலும் கனகசபையின் மாட்டு வண்டி நடமாடும் நூலகம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, வில்வராயநத்தம் சைக்கிள் நூலகமும் இயக்கப்பட்டது. பின்னர், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற நூலக மாநாட்டுக்கும் கனகசபையின் மாட்டு வண்டி நூலகம் கொண்டு செல்லப்பட்டு, நடமாடும் நூலகப் பணியின் முறையையும், பயனையும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பல நடமாடும் நூலகங்கள் உருவாகின.

கனகசபை பிள்ளையின் நடமாடும் நூலகத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டி சிதிலமடைந்து, கண்டறிய முடியாத நிலையில், அதே போன்ற மாதிரி மாட்டு வண்டி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட நூல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன'' என்கிறார் வேல்முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT