பிரதமர் நரேந்திர மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் 
ஞாயிறு கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவர்கள் இதுவரை...

நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக 1950-இல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

பாரத்.தி.நந்தகுமார்

நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக 1950-இல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர். தற்போது 15-ஆவது துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். ஜெகதீப் தன்கர் பதவி விலகலால் நடைபெற்ற இடைத்தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருக்குப் பின்னர், துணைத் தலைவர் பதவியை வகிக்கும் மூன்றாவது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

1969- இல் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மறைவுற்றதைத் தொடர்ந்து, வி.வி. கிரி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். கிருஷ்ண காந்த் தனது பதவிக் காலத்திலேயே மறைவுற்றார்.

துணைத் தலைவராக இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் இருமுறை அந்தப் பதவியை வகித்துள்ளனர். 1952-ஆம் ஆண்டு முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும், 2007-ஆம் ஆண்டு முதல் 2017 வரை எம். ஹமீத் அன்சாரியும் பதவி வகித்துள்ளனர். பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இருந்தபோதிலும் புதியதாக ஒருவர் தேர்வு செய்யப்படும்வரை அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியும்.

முப்பத்து ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களே தேர்தலில் போட்டியிட முடியும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படும் குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுவார்.

குடியரசுத் தலைவராக இருப்பவர் திடீரென மறைவுற்றாலோ, ராஜிநாமா செய்தாலோ, நீக்கப்பட்டாலோ புதிய தலைவர் தேர்வு செய்யப்படும்வரை குடியரசுத் துணைத் தலைவரே அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவார். அப்போது அவர் மாநிலங்களவையை வழிநடத்த முடியாது.

குடியரசுத் துணைத் தலைவருக்கு ஊதியம் கிடையாது. அவரே மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவதால் அவர் அந்தப் பொறுப்புக்கான ஊதியம் 4 லட்சம் ரூபாயைப் பெறுவார். அரசு இல்லம், ஊழியர்கள் போன்ற சலுகைகளும் உண்டு. குடியரசுத் துணைத் தலைவர்கள் ஓய்வு பெற்றவுடன் பங்களா, ஒரு செயலர், சில பணியாளர்கள் ஆகியோர் அரசின் சார்பில் வழங்கப்படுவார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர்களாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகிர் ஹுசைன், வி.வி. கிரி, ஆர். வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகிய ஆறு பேரும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பையும் பெற்றனர்.

இதுவரை துணைத் தலைவர்களாக இருந்தவர்களைப் பற்றி அறிவோம்:

முதலாமவர் தத்துவப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். சென்னை மாநில கல்லூரி, நாட்டின் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காங்கிரஸ் சார்பில் முதல் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் 1957-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பதவிக்காலம் முழுவதும் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்தின் கீழ் பணியாற்றினார்.

கல்வியாளரான ஜாகிர் ஹுசைன்:

தில்லியில் தொடங்கப்பட்டு நாட்டின் மிக முக்கிய மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறிய 'ஜாமியா மில்லியா இஸ்லாமியா' வின் நிறுவனர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் 1962-இல் மூன்றாவது துணைத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொழிற்சங்கவாதியான வி.வி.கிரி:

1967-இல் சென்னைவாசியும் பிரபல வழக்குரைஞரும், தொழிற்சங்கவாதியுமான வரககிரி வெங்கட கிரி என்கிற வி.வி.கிரி நான்காவது துணைத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நீதிபதியிலிருந்த கோபால் ஸ்வரூப் பாதக்:

1969-இல் குடியரசுத் தலைவராக இருந்த ஜாஹிர் ஹுசைனின் அகால மரணத்தையடுத்து, அந்தப் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வி.வி.கிரி வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் மத்திய சட்ட அமைச்சராகவும் பதவிகளை வகித்த கோபால் ஸ்வரூப் பாதக் வெற்றி பெற்றார்.

உள்ளாட்சி மன்ற உறுப்பினராக இருந்து உயர்ந்த பி.டி.ஜாட்டி:

1974-இல் நடைபெற்ற தேர்தலில் கர்நாடகாவின் ஒரு சிறிய மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பி.டி.ஜாட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உருதுக் கவிஞரான ஹிதாயத்துல்லா:

1979-இல் நடைபெற்ற தேர்தலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் உருதுக் கவிஞர் என பன்முகம் கொண்ட ஹிதாயத்துல்லா, போட்டியின்றி வெற்றி பெற்றார்.

தஞ்சையில் இருந்து தில்லிக்கு:

1984-இல் நடைபெற்ற தேர்தலில் தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவரும், தமிழகத் தொழில்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவருமான ஆர்.வெங்கட்ராமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்ட நிபுணர் சங்கர் தயாள் சர்மா:

ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜிநாமா செய்து விட்டு குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இதனால், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் முன்னரே 1987-இல் நடைபெற்றது. முதல்வர், ஆளுநர் என பல பதவிகளை வகித்தவரும், சட்ட நிபுணருமான சங்கர் தயாள் சர்மா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த கே.ஆர்.நாராயணன்:

வெங்கட்ராமனை போலவே சங்கர் தயாள் சர்மாவும் தனது பதவிக்காலம் முன்பே ராஜிநாமா செய்து விட்டு, குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1992-இல் நடைபெற்ற தேர்தலில் கே.ஆர்.நாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி இவர்.

இளம் துருக்கியரான கிருஷ்ணகாந்த்:

கே.ஆர்.நாராயணனைத் தொடர்ந்து, 1997-இல் நடைபெற்ற தேர்தலில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் காங்கிரஸின் 'இளம் துருக்கியர் படை' என்று பாராட்டப்பட்ட அணியைச் சேர்ந்தவரான கிருஷ்ணகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ராஜஸ்தானின் சிங்கம் செகாவத்:

கிருஷ்ண காந்த்தின் மறைவைத் தொடர்ந்து, 2002-இல் நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், மூன்று முறை ராஜஸ்தானின் முதல்வராக இருந்தவருமான பைரோன் சிங் செகாவத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

துணைவேந்தராக இருந்த ஹமீத் ஹன்சாரி:

2007-இல் நடைபெற்ற தேர்தலில் வெளியுறவுத் துறை அலுவலராக இருந்தவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவருமான ஹமீத் அன்சாரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012-இல் நடைபெற்ற தேர்தலிலும் இவரே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு:

2017-இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைவர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு பதவிகளை வகித்த வெங்கய்ய நாயுடு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர்:

2022-இல் நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்க ஆளுநர், ராஜஸ்தானில் எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற பதவிகளை வகித்த ஜெகதீப் தன்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2027-ஆம் ஆண்டு வரையில் இவரது பதவிக்காலம் இருந்த நிலையில், உடல்நலக்குறைவால் 2025 ஜூலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT