ஞாயிறு கொண்டாட்டம்

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி நட்சத்திரம்

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் ஒலி, ஒளி பரப்பும் நிகழ்ச்சிகள் அங்கு வசிக்கும் தமிழர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு நேயர்கள் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்றிருந்தன.

எஸ். சந்திரமெளலி

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் ஒலி, ஒளி பரப்பும் நிகழ்ச்சிகள் அங்கு வசிக்கும் தமிழர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு நேயர்கள் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்றிருந்தன. இலங்கை வானொலியின் நூற்றாண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் நூறு பெண்மணிகளுக்கு பெண் ஆளுமைகள் விருது அளித்து கெளரவிக்கப்பட்டது. அவர்களில் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் நாகபூஷணி கருப்பையாவும் ஒருவர். நாகபூஷணி கருப்பையா தனது அனுபவங்கள் குறித்து கூறுகிறார் :

வானொலி, தொலைக்காட்சித் துறைக்கு வந்தது எப்படி?

குழந்தை பருவம் முதல் இன்று வரை எல்லா பருவங்களுமே எனக்கு திருப்தியான மகிழ்ச்சியான பருவங்கள்தான். குறிப்பாக இளம் பருவம் முதலே எனக்கு வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் நிறைய உண்டு. எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். அம்புலி மாமாவிலிருந்து அத்தனையும் இதழ்களையும் வாசிப்பேன். ஆர்வத்துடன் நடனமும், இசையும் கற்றேன். அந்த நட்புகள் எல்லாம் இன்னும் கூட தொடர்கின்றன.

எங்கள் வீட்டில் எப்போதுமே வானொலி ஒலித்தபடி இருக்கும். வானொலி எங்கள் வாழ்க்கையின் அங்கம். வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ள எனக்கு வானொலியும், பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன. வானொலிக்கு அதிகமாக எழுதுவேன்.

எனது வானொலித் துறை முன்னோடிகளான அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா போன்றவர்கள் என்னுடைய படைப்புகளை வானொலி மூலமாகத் தங்கள் குரலால் நேயர்களிடம் எடுத்துச் செல்வதைக் கண்டு பெருமிதமாக உணர்வேன். கண்டியிலும் ஒரு வானொலி நிலையம் உண்டு. கொழும்புக்கு செல்ல வீட்டில் அனுமதி கிடைக்காது என்பதால் கண்டியிலாவது அறிவிப்பாளராக இருப்போம் என்று விண்ணப்பித்தேன். ஆனால் பயிற்சிக்கு கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது.

எனக்குப் பயிற்சி தந்தவர்கள் எல்லோருமே ஒலிபரப்புத் துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களிடம் பயிற்சி பெற்றது நான் பெற்ற பெரும் பேறு.

முதலில், கொழும்பில்தான் பணி அமைந்தது. இலங்கை வானொலி கல்வி சேவையில் தயாரிப்பாளர் பணியாற்றுவதற்குதான் வாய்ப்பு. மிகுதி நேரத்தில் நான் அறிவிப்பாளராக பணியாற்றினேன். அப்படியே செய்தி வாசிப்பாளர், தொடர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பணிகள் விரிவடைந்தது.

பிரமுகர்களை வானொலி, தொலைக்காட்சிக்காக சந்தித்த அனுபவங்கள்?

வானொலிக்கு வருகை தந்த டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோரிடம் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. நடிகர் எஸ்.வி.சேகர், பாடகர் மலேசியா வாசுதேவன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன். இன்னும் பிரபல படைப்பாளிகள், எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் நீளும். கவிஞர் அப்துல் ரகுமானை தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

இப்போதெல்லாம் ஏராளமான வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டன. ஆனால் நான் ஊடகத்துறைக்கு வந்த புதிதில் எங்கள் நாட்டில் இலங்கை வானொலியை செங்கோலோச்சியது.

வானொலி நேயர்கள் அன்பு ரசிகர்களாக எங்களை ஆர்வத்துடன் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். எங்கள் குரலில் ஒரு சின்ன மாற்றம் வந்தால் கூட "ஜலதோஷம் வந்து விட்டதா? உடல் நலத்தை கவனியுங்கள்' என்று கரிசனத்துடன் கடிதம் எழுதுவார்கள். தொலைக்காட்சிக்கு வந்தபோது "இந்த நிறத்தில் சேலை கட்டுங்கள்' என்று கேட்டுக் கொள்வார்கள்.

சிலர் தபால் உறையில் அழகான நெற்றி பொட்டுகளை வைத்து அனுப்புவார்கள். தமிழ்நாட்டு ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று எனக்காக கோவில்களில் அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் அனுப்பி வைப்பார்கள். நேயர்களது அன்பில் நாங்கள் மனம் நெகிழ்ந்து போவோம். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த சமயத்தில் முகம் கழுவி விட்டு வந்த போது புத்தம் புதிய டவல் ஒன்றைத் தந்து துடைத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். நானும் துடைத்துக் கொண்டு, அந்த டவலை அவர்களிடமே கொடுத்து விட்டேன். வெகுநாள் கழித்து அதே ஊருக்குச் சென்ற போது அதே டவலை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என அறிந்தபோது, இன்ப அதிர்ச்சி அடைந்தேன். சிலருக்கு இது அபத்தமாக கூட தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை அந்த அன்பு என்னை வியக்க வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT