ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்னர். இங்குள்ள 90 சதவீத ஆண்கள் சமையல் பணியில் ஈடுபட்டுவருவதால், 'சமையல் கிராமம்' என்றே அழைக்கின்றனர்.
இதுகுறித்து கே. வேளூர் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜி. சீனிவாசன் கூறியது:
'எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சீதாபதி முதலியார் என்பவர் முதலில் உணவுகள் தயாரிக்கும் சமையல் பணியில் ஈடுபட்டு பிரபலமாக இருந்தார். அவரை சார்ந்தவர்களே சமையல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது தலைமுறையாக எங்கள் கிராமத்தில் உள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் கிராமத்தில் நல்ல முறையில் இருந்தாலும், சமையல் பணியில் எங்கள் கிராமத்தினர் அதிக அக்கறை செலுத்துகின்றனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பகுதி நேரமாக மாணவர்கள், இளைஞர்கள் உணவுகள் தயாரிப்புப் பணிகளிலும், பரிமாறும் வேலைகளிலும், ஈடுபட்டு தங்களுக்கான வருமானத்தைப் பெறுகின்றனர். படித்துக் கொண்டே சமையல் பணியில் ஈடுபட்டு அரசு பணிக்குச் சென்றவர்களும் உண்டு. அவர்களே ஓய்வு நேரங்களில் மீண்டும் சமையல் பணியில் பங்கேற்று எங்களுக்கு ஆதரவை அளிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி மாநாடுகள், கூட்டங்கள், திருவிழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்று, விழா ஏற்பாட்டாளர்கள் விரும்பும் வகையில் சுவையான, தரமான உணவுகளைத் தயாரித்து அளிக்கின்றனர். சைவ- அசைவ உணவுகள், இனிப்பு- கார வகைகள் என எந்த உணவுகளாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப சிறப்பாகச் சமைத்துத் தருகிறோம்.
இதுதவிர, வாடிக்கையாளர்கள் கேட்கும் விரும்பும் வகையில் உணவுகளை எங்கள் வீடுகளிலேயே தயாரித்து, அவர்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று பரிமாறுவதும் உண்டு என்கிறார் சீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.