முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

'வீரதீர சூரன்' படத்துக்குப் பிறகு 'சீயான் 63' ஆக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமாரின் படம் உருவாகும் என்ற தகவல் பரவியது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:23 AM
பகிர்:

'வீரதீர சூரன்' படத்துக்குப் பிறகு 'சீயான் 63' ஆக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமாரின் படம் உருவாகும் என்ற தகவல் பரவியது. இப்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது. அவரது படம் தள்ளிப்போகிறது.

இந்நிலையில் விக்ரம் 'இருமுகன்' ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், நெகிழ்ந்ததுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார். படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. முதன் முறையாக இந்நிறுவனத்தோடு கைகோர்க்கிறார் விக்ரம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கவனிப்பாரெனத் தெரிகிறது. இதற்கு முன் 'பீமா', 'இருமுகன்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவை இரண்டுமே விக்ரமுக்குப் பிடித்த படங்களாகும்.

Advertisement

பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக விடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ' பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவு செய்தியை அறிந்து, நான் மிகவும் துயரமுற்றேன். இது ஒரு சாதாரண இரங்கல் அல்ல. என் மனதுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு பெரும் இழப்பு.

அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும், அதே நேரத்தில் ஒரு பின்னணிப் பாடகியான அவர் என்னை மதித்து நடந்து கொண்ட விதமும் என்றும் மறக்க முடியாதவை. அவரது நினைவுகள் என் வாழ்நாளில் எப்போதும் என்னுடனேயே இருக்கும். என் வாழ்க்கையில் அழியாத இடத்தைப் பெற்றவர் ஆஷா போஸ்லே.

அவரது திறமைக்கு அளவே இல்லை. வேறு எந்த குரல்களுடனும் ஒப்பிடமுடியாத தனிக்குரல். தனித்திறமை வாய்ந்த குரலும்கூட. அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்' என்று உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

'ஜனநாயகன்' படம் இணையத்தில் வெளியானதுக்கு எதிராக அந்தப் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவும் குரல் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் , ' நமது படம் இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மட்டுமல்ல, இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இது வெறும் வசூல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகருக்கும், தொழில்நுட்பக் கலைஞருக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையைப் பறிப்பதாகும்.

அதுமட்டுமல்லாமல், விஜய் சாரை கடைசி முறையாக ஒரு திருவிழாவைப் போல நாம் அனைவரும் ஒன்றாகக்கூடி, பெரிய திரையில் கொண்டாடி மகிழ வேண்டாமா? திருட்டுத்தனமாகப் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம். அப்போதுதான் சினிமாவும் கலையும் வாழும்' என்று பதிவிட்டிருக்கிறார்.

'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக 'ஆனந்தன்காடு' படத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் - மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-ஆவது படத்தை மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரணய விலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.

இந்த ராம் - காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.

சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்தப் படம் எழுதப்பட்டிருக்கிறதாம். 'மதராசபட்டினம்', 'ராஜா ராணி', 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதையடுத்து பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்துக்குத் தயாராக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.