மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
வடவேங்கடம் - இமயமலை ; தென்குமரி - குமரிக்கண்டம்! ""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்
தமிழ்மணிமாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
வடவேங்கடம் - இமயமலை ; தென்குமரி - குமரிக்கண்டம்! ""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்
வடவேங்கடம் - இமயமலை ; தென்குமரி - குமரிக்கண்டம்!
""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?
ழந்தமிழர்கள், பெரும் தேசிய இனமாக "நாவலந்தேசம்' எனப்படும் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
""தென்குமரி வடபெருங்கல்
குணகுட கட லாவெல்லை'' (புறம்-17)
என்று குறுங்கோழியூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியிருக்கிறார். மேலும்,
""வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி'' (சிலம்பு-11:19-22)
என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார். மேலும், ""வங்கத் தலைநகருக்கு இன்னும் "காளிக்கோட்டம்' என்னும் தூய தமிழ்ச்சொல் வழங்குவதே பண்டைக் காலத்தே தமிழர், பனிமலைவரை அல்லது கங்கை வரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாகும்'' என்று தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, "மொகஞ்சதாரோ, ஹரப்பா சிந்துசமவெளி நாகரிகத்தில் தமிழர் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளன' என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டைத் தமிழினமாகிய குமரி நாட்டிலும் மேல்கோடியிலிலேயே ஒரு பன்மலையடுக்கத்துப் பெருமலை தொடரிருந்தது. அது குமரியென்னும் காளியின் பெயரால் குமரிமலை எனப்பட்டது. அதன் தென்கோடியில் பஃறுளி என்னும் கங்கையைப் போன்ற பேராறும், வடகோடியில் குமரி என்னும் காவிரியைப் போன்ற பேராறும் இருந்ததால், குடதிசை (மேற்கு) என்றும், குணதிசை (கிழக்கு) என்றும் பெயர்பெற்றன. இவ்விரு ஆறுகளுக்கிடையே,
""ஏழ்தெங் நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணக்கரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்று 49 நாடுகளும், காடும், நதியும், பதியும் தடனீர் குமரி வடபெருங்கோட்டின்காறும், கடல்கொண்டழித்தாற் குமரியாகிய பெüவமென்றா ரென்றுணர்க'' என்று கூறியுள்ளார் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார்.
மேலும், லெமூரியா எனும் குமரிக்கண்டமே மாந்தன் என்பவன் தோன்றிய முதலிடமென்றும், இதிலிருந்த தமிழ் நிலம் 13 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது.
""வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெüவத்தின் குடக்கும்'' (புறம்-6)
என்ற பாடலுக்கேற்ப, இமயத்தின் முதல் மன்னன் சேரனே என்றும், ஆகவேதான், அவன் "இமயவரம்பன்' எனப் புகழப்பட்டான் எனவும் சான்றுகள் கூறுகின்றன.
"குணகடல் குமரி குடகம் வேங்கடம்' என்னும் நன்னூல் சிறப்புப் பாயிரத்தில், தமிழ் எல்லையை "திசைகள்' குறிக்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், "வட வேங்கடம் தென்குமரி' என்று தொல்காப்பியப் பாயிரத்தில், திசைகளுடன் சேர்த்துக் குறிக்கும்பொழுது ஓர் ஐயம் தோன்ற வாய்ப்பிருக்கிறது.
தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்ததால், பொதுவாக மலைப்பகுதியை "வேங்கடம்' எனக் குறித்து இமயமலையை "வடவேங்கடம்' என்றும், திருப்பதியை "தென் வேங்கடம்' என்றும் குறிக்க வாய்ப்புண்டு.
அதைப்போலவே, இன்றைய குமரியை "வடகுமரி' என்றும், கடல்கோளால் அழிந்த பகுதியை "தென்குமரி' என்றும் அழைத்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இன்றைய மதுரையை வடமதுரை என்றும், முதல்சங்கம் தோன்றிய பகுதியைத் தென்மதுரை என்றும் இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆரியர் வருகைக்குப் பிறகே தமிழர் எல்லைகள் சுருங்கி திருப்பதி மலையை (வேங்கட மலை) வட பகுதியாகச் சொல்லப்பட்டாலும், வடவேங்கடம் என்று இமயமலையையும், தென்குமரி என்று கடல்கொண்ட குமரியையுமே சொல்லியிருக்கக் கூடும் என்பது தெளிவு.
மேலும், தொல்காப்பியமே தமிழின் மூத்த நூல் - முதல் நூல் என்கிறோம். அதற்குப்பிறகு தோன்றிய சங்க நூல்களே பழந்தமிழர்களின் எல்லையை விரித்துக் கூறுகிறபோது, தொல்காப்பியம் தமிழ்கூறு நல்லுலகைச் சுருக்கிக்கூற வாய்ப்பே இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.