முகப்பு
தமிழ்மணி

குறுந்தொகைச் சிக்கல்களும் தீர்வுகளும்

 3. பெயர் மாறிய தொகுப்பு!  அகப்பாடல் மரபுகளை விரிவாக விளக்கும் நூல்களுள் ஒன்று நாற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப்பொருள். அதில்  ""இவளே நின்னலது இலளே; யாயும்  குவளை உண்கண் இவள்அலது இலளே;  யானும் ஆயிடை ய

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:05 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:18 PM

 3. பெயர் மாறிய தொகுப்பு!

 அகப்பாடல் மரபுகளை விரிவாக விளக்கும் நூல்களுள் ஒன்று நாற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப்பொருள். அதில்

 ""இவளே நின்னலது இலளே; யாயும்

 குவளை உண்கண் இவள்அலது இலளே;

 யானும் ஆயிடை யேனே;

 மாமலை நாட! மறவாது ஈமே''

Advertisement

 என்னும் பாட்டொன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. வித்துவான் இராஜ சிவ. சாம்பசிவ சர்மா தமது குறுந்தொகைச் சொற்பொழிவில், ""இது, குறுந்தொகைச் செய்யுள் என்று பாங்கி (கை)யடை கொடுத்தலுக்கு மேற்கோளாகச் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளையின் நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் நூற்பதிப்பில் காணப்படுகிறது. குறுந்தொகைப் பதிப்புகள் எதிலும் அச்செய்யுள் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.

 ÷இப்பாடல் குறுந்தொகையில் உள்ளதாகத் தவறாக அப்பதிப்பில் அச்சிடப்பட்டுள்ளது. பாங்கி கையடை கொடுத்தற்கு எடுத்துக்காட்டாகப் "பறந்திருந்து' (திருக்கோவையார்-13) "நீள்கடல் உண்ட' (திருவாரூர்க் கோவை-226) நனைமுதிர் ஞாழல் (குறுந்தொகை-397) "இவளே நின்னலது' ஆகிய நான்கு பாடல்கள் தரப்பட்டுள்ளன.

 ÷அகப்பொருள் உரையில் ஒரு துறைக்குப் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டாலும் ஒரு நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டே பிற இடங்களில் எல்லாம் தரப்பட்டுள்ளது. இங்கு மட்டும் ஒரு துறைக்குக் குறுந்தொகையிலிருந்து அடுத்தடுத்து இருபாடல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன என்று கொள்வது பொருந்தாது.

 ÷அகப்பொருள் கழகப் பதிப்பில் "இவளே நின்னலது' என்னும் பாடல் வருமிடம் சுட்டப்படவில்லை. ஆயினும், பாண்டித்துரைத் தேவரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பாக 1913-இல் வெளிவந்துள்ள "அகப்பொருள் விளக்க மூலமும் உரையும்' நூலில், இது தொல்காப்பியப் பொருளதிகாரவுரையில் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது. "தொல், பொருள் பக்கம் 65' என்பது அந்நூலில் உள்ள குறிப்பு.

 ÷இது தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா 39-இன் உரையில் "தோழி கையடை கொடுத்தற்கு' நச்சினார்க்கினியரால் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளதையே சுட்டுவதாகும். ஆனால், அங்கும் இப்பாட்டு எந்நூலில் உள்ளது என்னும் குறிப்பு இல்லை. இதனால் "இவளே நின்னலது' எனத் தொடங்கும் செய்யுள் குறுந்தொகைச் செய்யுள் அன்று என்பதும், வேறு ஏதோ ஒரு நூலைச் சார்ந்தது என்பதும் தேற்றம்.

 ÷அகப்பொருள் விளக்கத்தின் உரையில் மேற்கோள் பாடல்கள் எந்த நூலைச் சார்ந்தவை என்னும் குறிப்பு அந்நூலாசிரியரால் தரப்படவில்லை. பதிப்பாசிரியர்களே முயன்று தேடிப் பல பாடல்களின் முகவரியைக் கண்டு பதிப்பித்துள்ளார்கள். ஆனால், நம் நல்வாய்ப்பாக அவ்வாசிரியர் 251-ஆம் நூற்பாவுரையில் மட்டும் "உரைத்திசின் தோழி', நாளும் நாளும், சுறவுப்பிறழ் இருங்கழி என்னும் மூன்று பாடல்களை அவை வருமிடங்களோடு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். அப்பாடல்கள் "சிற்றட்டகம்' என்னும் நூலில் இருப்பதாகக் குறித்துள்ளார்.

 ÷அப்பாடல்கள் மூன்றும் நேரிசை ஆசிரியப்பாக்களாக உள்ளன. மூன்று முதல், எட்டடிவரையிலான இருபத்து நான்கு இடந்தெரியா நேரிசை ஆசிரியப்பாக்கள் அகப்பொருள் விளக்கத்தில் காணப்படுகின்றன. அவற்றில், மேற்குறித்த மூன்று பாடல்களோடு "கண்ணும் சேயரி எம்மூர் அல்லது அடும்பமல் நெடுங்கொடி' என்னும் தொடக்கத்தை உடைய மூன்று பாடல்களும் சிற்றட்டகத்தைச் சார்ந்தன என்பது தொல்காப்பிய உரைகளால் தெரியவருகிறது.

 ÷சிற்றட்டகம் என்னும் பெயர் சில இடங்களில் சிற்றெட்டகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அப்பெயர் சிறிய எட்டுத்தொகை என்னும் பொருளைத் தருமானால், அகப்பொருளில் இடம் தெரியாமல் இருக்கும் எல்லாப் பாக்களும் சிற்றட்டகத்தைச் சார்ந்தன என்று கொள்ளலாம். சிறிய எட்டடிக்குட்பட்ட அகப்பாடல் என்னும் பொருளைத் தருமானால், அதில் காணப்படும் 24 பாக்களைச் சிற்றட்டகப் பாக்கள் என்று துணியலாம்.

 ÷இதனால் "இவளே நின்னலது' என்னும் அழகிய பாடல், குறுந்தொகையைச் சார்ந்ததன்று என்பதும்; சிற்றட்டகப் பாட்டு என்பதும்; தமிழர்கள் தவக்குறையால் இழந்த நூல்களுள் ஒன்று சிற்றட்டகம் என்பதும் தெளிவாகும். மேலும், குறுந்தொகை சேர்க்கவோ விடுக்கவோ வேண்டாமல் தொகுக்கப்பட்ட 400 பாடல்களைக் கொண்ட முழுமையான நூல் என்பதும்  விளங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.