தமிழ்மணி

சங்க இலக்கியங்களில் இசைத்தமிழ்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம். சங்ககாலத்து மக்களின் அன்றாட வா

முனைவர் வெ.வரதராசன்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.

சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில் "இசை' பெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,

""ஆறலைக் கள்வர் படைவிட அருளின

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை'' (21-22)

எனப் பாலை யாழின் சிறப்பை, "வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்' என்று கூறியுள்ளார்.

ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், "தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றது' என்பதை, ""நரம் பார்ந்தன்ன தீங்கிளவி'' (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,

""காழ்வரை நில்லாக் கருங்களிற்று ஒருத்தல்

யாழ்வரைத் தங்கியாங்கு'' (கலி.1)

என்று சொல்கிறது. வலிமையான கட்டுத்தறியையே பெயர்த்தெடுத்துவிடும் மதயானையையும் தன் இசையினால் அடக்கிப் பணியச்செய்யும் ஆற்றல் யாழிசைக்கு உண்டு என்பது இதன் பொருள். நற்றிணைப் பாடல் ஒன்று, யாழிசையைக் கேட்டு ஊர்வனவும் புத்துணர்ச்சி பெற்றது என்கிறது.

அது ஒரு பொட்டல் காடு. பச்சோந்தி ஒன்று நெடிய யாஅ மரத்தில் ஏறுகிறது. ஒரே மூச்சில் அதனால் ஏறமுடியவில்லை. சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கிறது. அப்போது அந்த மரத்தின் நிழலில் தங்கியிருந்த பாணர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் யாழ் எடுத்து வாசிக்கிறான். அந்த இசையைக் கேட்டு பச்சோந்தியும் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் மரத்தில் ஏறத்தொடங்கியதாம். இதை விளக்கும் பாடல் வருமாறு:

""கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை

வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துப்

பாண் யாழ் கடைய வாங்கிப் பாங்கர்

நெடுநிலை யாஅம் ஏறுந்தொழில'' (186)

அகநானூறு, புறநானூற்றுப் பாடல்களிலும் இசைக்கருவிகள் பல பயன்படுத்திய செய்திகள் கிடைக்கின்றன. மேலும், பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படையின் தொடக்கத்திலேயே பலவிதமான இசைக்கருவிகளின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT