கணவனை இழந்த பெண்ணை விதவை என்று கூறுவர். இதற்கான தமிழ்ச்சொல் "கைம்பெண்'. இச்சொல் பேச்சு வழக்கில் கைம்பெண்டாட்டி என்று நீண்டு, பின்னர் மருவி "கம்மனாட்டி' என்று மாறிவிட்டது. திட்டுவதற்குக்கூட இந்தச் சொல்லை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தின் மிகச் சிறிய பகுதிகளில் மட்டுமே இச்சொல் வழக்கில் உள்ளது.
÷கணவனை இழந்த மனைவிக்குக் "கைம்பெண்' என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். மனைவியை இழந்த கணவனுக்கு அவ்வாறு ஏதும் பெயர் கிடையாதா என்றால், இருக்கிறது. கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "கைம்(பெண்)பயல்.
÷தமிழ் மொழியின் பொருள் இலக்கணத்தை விளக்குகின்ற "புறப்பொருள் வெண்பா மாலை' என்னும் நூல், மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழும் நிலையை "தபு-தார நிலை' என்கிறது. "தபு' என்றால் "இறத்தல்' என்றும், "தாரம்' என்றால் "மனைவி' என்றும் பொருள். தபுதாரன் என்பவன் மனைவியை இழந்தவன். சான்றாக,
""பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த
மைந்தன் குரிசில் மழைவள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி''
எனும் பாடல் அமைகிறது. இப்பாடல், தன் மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல், அவள் நினைவால் வருந்திப் புலம்பும் நிலை பண்டைக்கால ஆடவரிடம் நிலைபெற்றிருந்ததை எடுத்துரைக்கிறது. பின்னர் நிகழ்ந்த கால மாற்றத்தின் காரணமாக அந்நிலை மாறி, ""பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்'' என்ற பழமொழிக்கேற்ப ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் "தபுதாரன்' என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "தபுதாரன்' என்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.