சொல் வேட்டை- 41
இரண்டாம் உலகப்போர், மனித குலத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் கொண்டுவந்து கொட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், சாதனங்களும் ஏராளம்.
இரண்டாம் உலகப்போர், மனித குலத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் கொண்டுவந்து கொட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், சாதனங்களும் ஏராளம். அவற்றில் ஒன்றுதான், கார்டுலெஸ் தொலைபேசி. இரண்டாம் உலகப்போரில் வானொலி இயக்குபவராகப் (Radio Operator) பணிபுரிந்த ஜார்ஜ் ஸ்வீகர்ட் (George Sweigert) என்பவர்தான், போர்க்களத்தில் போராளிகளுக்கிடையே தொடர்புகளை உருவாக்கும் சாதனத்தை உருவாக்கி, 1966-இல் அச்சாதனத்திற்கான பேடன்ட் உரிமையை அமெரிக்க அறிவுசார் சொத்துரிமை இயக்ககத்தில் பெற்றார். அதே நேரத்தில், ஜாஸ் இசைக்கலைஞர் டெரி பால் (Teri pall) என்பவரும் கார்டுலெஸ் தொலைபேசியின் ஒரு வடிவத்தை உருவாக்கினார். ஆனால், அது ஆகாய விமானங்களுக்கு வரும் நேரலைகளைத் தடுக்கும் விதமாக அமைந்ததனால், அவரால் அச்சாதனத்தை வெற்றிகரமாகச் சந்தையில் கொண்டுவர முடியவில்லை.
பின்னர், 1980களில் மிகப்பெரிய நிறுவனங்கள், கார்டுலெஸ் தொலைபேசிகளை சந்தைகளில் பெருமளவில் கொண்டுவந்து வெற்றி பெற்றன. இதனால், தொலைபேசி மணியடித்தால், அதனருகிலேயே அமர்ந்து பேச வேண்டிய அவசியம் அற்றுப்போய், வீட்டில் எந்த மூலையிலும் எந்த நிலையிலும் பேசும் வசதி உருவானது. இனி இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
பா. ஜம்புலிங்கம், கார்டுலெஸ் என்ற சொல்லுக்கு கம்பியில்லா, கம்பித் தொடர்பில்லா, மின்கம்பித் தொடர்பில்லா உள்வாங்கி ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
கோ. மன்றவாணன், இழையறல் (இழையற்றல் என்பதன் சுருக்கம்), இழைதவிர், இழையில்லா, கம்பியில்லா, தொடுப்பில்லா, நாணில்லா, மின் இழையில்லா, மின்னிழைதவிர் ஆகிய பெயரடைச் சொற்கள் உள்ளன என்றும், அந்தச் சொற்களோடு, புதிது புதிதாக வரும் கருவிப் பெயர்களை இணைத்து Cordless Mouse என்பதற்கு இழையறல்சுட்டி, Cordless phone என்பதற்கு இழைதவிர் தொலைபேசி, Cordless Mike என்பதற்கு இழையில்லா ஒலிவாங்கி, இழையறல் போன்ற சொற்களைப் பெயரடைச் சொற்களாகவும், பெயர்ச்சொற்களாகவும் பயன்படுத்தலாம் என்கிறார். மேலும், கார்டுலெஸ் என்ற சொல்லின் செயல்பாட்டைக் குறிக்க வேண்டுமானால், இழையறல், இழைதவிர், இழையில்லா, கம்பியில்லா போன்ற பெயரடைச் சொற்களோடு, மின்னோட்டம், மின்னூட்டம், மின்கடத்தி, அலைகடத்தி ஆகிய சொற்களை இணைத்து இழைதவிர் மின்கடத்தி, இழையில்லா அலைகடத்தி மற்றும் இழையறல் மின்னூட்டம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
என்.ஆர். ஸத்யமூர்த்தி, இச்சொல், குறிப்புப் பெயரெச்சமாக வரும்போது, கம்பியில்லாத, நாணில்லாத, தொடுப்பில்லாத போன்ற பொருள்களில் வரும் என்றும், குறிப்புப் பெயரெச்சச் சொல்லைப் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தும் ஆங்கில மரபு தமிழில் இல்லை; எனவே, கம்பியில், நாணில், தொடுப்பில் எனவும், பெயர்ச்சொல்லாக வரும்போது, இல்நாண், இற்கம்பி எனவும் பொருள் கொள்ளலாம் என்கிறார்.
ஹரணி, கம்பியில்லாத் தொடர்பு, கம்பியில்லா மின்தொடர்பு, காற்றிழைத் தொடர்பு, அருவமின்னிழை, காட்சியறியா மின்தொடர்பு, கட்புலனறி மின்னிழை, காற்றுவழி இயங்கு மின்னிழை என்றும், வெ. ஆனந்தகிருஷ்ணன், மின் நாண் அற்ற தொலைபேசி என்றும், டி.வி. கிருஷ்ணசாமி, நரம்பு இல்லா, சரியான கட்டு இல்லாத என்றும் கூறியுள்ளனர்.
இவற்றுள் எது பொருந்தும் என்று ஆராயும் முன், ஒரு செய்தியை உணர்தல் நலம். Cord, Cordless என்னும் சொற்களுக்கும், Wire, Wireless என்னும் சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிகமாக மின்னணு அறிவியலுக்குள் (Electronics) செல்லாமல் இவ்வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஓர் அடிப்படைச் செய்தியை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களுக்குள் ஒரு மின் ஊடுகடத்தி (Electrical Conductor) இல்லாமலேயே தகவல்களை மின்காந்த அலைகள் மூலம் பரிமாறச் செய்வது Wireless Communication ஆகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடம் வரை தகவல்களை ஓர் இழை அல்லது கம்பிகள் மூலம் கொண்டு வந்து சேர்த்து, அந்த இடத்தில் அமைந்திருக்கும் Base Station-னிலிருந்து இழைகள் மூலம் தொடர்பு படுத்தப்படாத ஒரு சாதனம் மூலமாக குறிப்பிட்ட எல்லைக்குள் தகவல் தொடர்பைப் பெறுவது கார்டுலெஸ் ஆகும்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில்,Wireless என்ற சொல்லுக்கு சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத, கம்பிகளற்ற, கம்பியில்லாத் தொலைபேசி ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், கார்டுலெஸ் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை. இருப்பினும், கார்டு என்ற சொல்லுக்கு நூல்கயிறு, மணிக்கயிறு, கட்டுதளை, கட்டிழை, திண்ணிய நாளம், மணியிழை ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, Wire என்ற சொல் கம்பி என்ற பொருளிலும், கார்டு என்ற சொல் இழை என்ற பொருளிலும் அமைந்திருக்கிறது. ஹரணி பரிந்துரைத்துள்ள அருவ மின்னிழை, கட்புலனறி மின்னிழை ஆகிய இரண்டும் அருமையான சொற்கள். ஆனால், அவை இழையற்றுப் போகும் ஒன்றைக் குறிக்கமாட்டா. எனவே, இழையற்ற என்ற சொல் பொருத்தமான மொழிபெயர்ப்பாகும். ஆனால், அச்சொல், தனித்து இயங்கும்போது தொக்கி நிற்கும் காரணத்தால் இழைதவிர் என்ற சொல்லே மிகப் பொருத்தமாகும். எனவே, கார்டுலெஸ் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இழைதவிர்.