தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

நாடாளுமன்ற வரவேற்பு வளாகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகங்களில், மக்களவைச் செயலகமும், மாநிலங்களவைச் செயலகமும் வெளியிடும் உறுப்பினர்கள் யார், எவர், உறுப்பினர்கள் கையேடு என்பன மட்டுமல்லாமல் அவர்கள் வெளியிடும் பல புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

கலா ரசிகன்

நாடாளுமன்ற வரவேற்பு வளாகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகங்களில், மக்களவைச் செயலகமும், மாநிலங்களவைச் செயலகமும் வெளியிடும் உறுப்பினர்கள் யார், எவர், உறுப்பினர்கள் கையேடு என்பன மட்டுமல்லாமல் அவர்கள் வெளியிடும் பல புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இந்திய அரசியல் சட்டம், பிரதமர்கள் ஆற்றிய உரைகள், முன்னாள், இந்நாள் மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் பற்றிய குறிப்புகள், உரைகள் என்று பல அரிய பதிவுகள் காணக்கிடக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது வழக்கம்போல நாடாளுமன்ற வளாகத்திற்குள் போன நான், மக்களவைச் செயலக அலுவலகத்தில் வாங்கிய புத்தகம் "நேதாஜியும் இந்திய தேசிய ராணுவமும்'.

அண்மையில் ஜப்பான் சென்று திரும்பி இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரன் சூர்ய குமார் போஸ் விரைவில் நேதாஜி பற்றிய இணையதளம் ஒன்றை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தொடங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். நேதாஜி பற்றிய பல அதிகாரபூர்வ குறிப்புகள் ஜப்பானிய அரசிடம் இன்னும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதாகவும், அவை பொதுமக்கள் பார்வைக்குத் தரப்பட வேண்டும் என்றும் கோரும் இந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் நேதாஜி பற்றிய குறிப்புகள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்தவுடன், தில்லி நாடாளுமன்ற வரவேற்பு வளாகத்தில் வாங்கிய ஆங்கிலப் புத்தகம் நினைவுக்கு வந்தது. எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

பிரான்சுக்கு ஒரு நெப்போலியன், ரஷ்யாவுக்கு ஒரு லெனின் போல, நவீன இந்திய சரித்திரத்தின் நிரந்தரக் கதாநாயகன் (எவர்கிரீன் ஹீரோ), நேதாஜி சுபாஷ்சந்திர போஸாகத்தான் இருப்பார். மகாத்மா காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்து வெற்றிபெற்றுக் காட்டும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக விளங்கியவர் அவர்.

1938-ஆம் ஆண்டு நேதாஜி போஸ் லண்டனில் இருக்கும்போது, அவர் முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் ஹரிபுரா காங்கிரசுக்கு வரும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு போல ஓர் எழுச்சியான வரவேற்பை இந்தியாவில் எந்தத் தலைவரும் இதுநாள் வரை எதிர்கொண்டதில்லை. "உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை இனியும் அடிமைப்படுத்தி வைக்க முடியாது' என்று அவர் தனது எழுச்சி உரையில் குறிப்பிட்டபோது ஏற்பட்ட கரகோஷ அதிர்வு, லண்டனையே உலுக்கியது என்பார்கள்.

சுபாஷ் போஸ் தலைவராக இருக்கும்போது பிரிட்டிஷ் இந்தியாவில் 11 மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது அவர் காங்கிரஸ் அரசுகளுக்கு, குறிப்பாக அமைச்சர்களுக்கு, விடுத்த கட்டளை என்ன தெரியுமா? ""முதலில் நிர்வாக இயக்கத்தின் செயல்பாடுகளையும் குறிக்கோள்களையும் மாற்றுங்கள். அவர்களை ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகளாக இல்லாமல் மக்கள் தொண்டர்களாக மாற்றுங்கள். தொழிலாளர் நலம், மதுவிலக்கு, சிறைச்சாலை சீர்திருத்தம் இவைதான் நமது காங்கிரஸ் அரசுகளின் செயல்பாடுகளில் முன்னுரிமை பெறவேண்டும்!'' என்றார். இவ்வாறு தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்த தலைவர் சுபாஷ் போஸ்.

1939 திரிபுரா காங்கிரசில் காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமய்யாவைத் தோற்கடித்த நேதாஜியால் மீண்டும் தலைவராக அதிக காலம் காங்கிரசில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவரது வேகம் காந்திஜியின் அஹிம்சாவாதத்துடன் ஒத்துப் போகவில்லை. அவர் காங்கிரசிலிருந்து விலகினார் என்பதைவிட, அவர் விலக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. காங்கிரசிலிருந்து வெளியேறி ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார்.

இத்தனைக்குப் பிறகும் நேதாஜிக்கு அண்ணல் காந்தியடிகளிடமிருந்த மதிப்பும், மரியாதையும் எள்ளளவும் குறையவில்லை. 1944 ஜூலை 6-ஆம் தேதி ஒரு தன்னிலை விளக்கக் கடிதத்தை அவர் காந்திஜிக்கு அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் அண்ணல் காந்தியடிகளை அவர் "தேசப்பிதா' என்று குறிப்பிட்டது முதல்தான் காந்திஜி "தேசப்பிதா' என்று அழைக்கப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

பல அரிய புகைப்படங்கள், ஆவணங்கள், நேதாஜியின் உரைகள், இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்ட விதம் - இப்படி ஒரு தகவல் பெட்டகமாக விளங்குகிறது மக்களவைச் செயலகத்தில் கூடுதல் செயலராக இருந்த முனைவர் ஆர்.சி.பரத்வாஜ் தொகுத்திருக்கும் அந்தப் புத்தகம்.

இதுபோன்ற புத்தகங்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் வெளியிட்டால் போதுமா? இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டாமா?

-------------------------------------

சாவி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அறிமுகமான பெயர் உஷாதீபன். நேரில் சந்திக்கவில்லையே தவிர அவரது எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருபவன்தான் நான். அது மட்டுமல்ல, "தினமணி கதிர்' சிறுகதை எழுத்தாளர்களில் உஷாதீபனும் ஒருவர் என்பதால், நான் சொல்லி "தினமணி' வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

படிக்க வேண்டும் என்று எடுத்து அலமாரியில் நான் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஏராளம். படித்து முடித்து அடுக்கி வைத்திருப்பவை அதைவிட ஏராளம். இரண்டாவது பட்டியலில் ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகம் உஷாதீபனின் "தனித்திருப்பவனின் அறை' என்கிற சிறுகதைத் தொகுப்பு.

"உணர்வுகளின் விளிம்பில்' கதையில் தொடங்கி, "பெண்ணே நீ' வரை 21 கதைகள். உஷாதீபனின் கதைகளில் தத்துவங்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இருக்காது. மிகவும் எளிமையான கதைகள். சிக்கலான உறவுகள், எதிர்மறைச் சிந்தனைகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால், யதார்த்தம் இருக்கும். ஒரு சராசரி நடுத்தரவர்க்க சிந்தனை அவரது கதைகளின் அடித்தளம். அதை சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கதைசொல்லி உஷாதீபன்.

21 சிறுகதைகளிலும் அவர் காட்டியுள்ள அத்தனை கதாபாத்திரங்களும், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறார்கள். சம்பவங்களும் சரி, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர்கொண்ட நிகழ்வாக இருக்கும். அதைத் தேவையில்லாத வார்த்தை ஜாலங்களில்லாமல் யதார்த்தமாகச் சொல்லும் லாகவம் அவருக்குக் கைவந்திருக்கிறது.

ஆமாம் உஷாதீபன், அந்தந்தச் சிறுகதைகளுடன், அது எந்த இதழில் எப்போது பிரசுரமானது என்பதை ஏன் குறிப்பிடாமல் விட்டுள்ளீர்கள்?

-------------------------------------

ஓவியனுக்கும் கவிஞனுக்கும் அடிப்படை, ரசனை. ஓவியன் கவிஞனாகும்போது அவனது கவிதை ஓவியமாகப் புத்தக வடிவம் எடுக்கிறது. விமர்சனத்திற்கு வந்திருந்த வே.விவேக்கின் "வா... கடவுள் செய்வோம்?' கவிதைத் தொகுப்பில் கவிதைகளைப் போட்டிக்கு அழைக்கின்றன புகைப்படங்களும் ஓவியங்களும்!

ஏ கடலே!

உன்

அடிவாரத்தில் ஏற்படும்

அரை நிமிட அதிர்வுக்கு

அடியோடு பயந்துகொண்டு

ஆட்களின் இடம்தேடி

அலையோடு குதிக்கிறாய்!

தந்தையையும் தாயையும்

சுனாமி சுருட்டிவிட

தனியாளாய் தரணியிலே

தன்தடங்கள் பதித்திடும்

பயம் வென்ற பிள்ளையினும்

எங்ஙனம் சிறந்து விட்டாய் கடலே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT