முகப்பு
தமிழ்மணி

சொல் வேட்டை- 37

முதன் முதலில் 1888-ஆம் ஆண்டில் ஜெர்மானிய இயற்பியல் அறிஞர் ஹென்ரிக் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) என்பவர்தான் மின்காந்த அலைகள் இருப்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்டெனாக்களை உருவாக்கி ஜேம்ஸ் க்ளார்க் மாக்ஸ்வெல்-ன் (James clark Maxwell) கோட்பாடுகளை நிரூபித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

முதன் முதலில் 1888-ஆம் ஆண்டில் ஜெர்மானிய இயற்பியல் அறிஞர் ஹென்ரிக் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) என்பவர்தான் மின்காந்த அலைகள் இருப்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்டெனாக்களை உருவாக்கி ஜேம்ஸ் க்ளார்க் மாக்ஸ்வெல்-ன் (James clark Maxwell) கோட்பாடுகளை நிரூபித்தார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை அவர் அன்னலன் டெர் ஃபிசிக் உன்ட் கெமி (Annalen der physick und Chemie) என்ற நூலில் 1889-இல் பதிப்பித்தார். ஆனாலும், இதன் பயன்பாடு உலகளவில் உருவாவதற்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் மான்ட் ப்ளான்க் பகுதியில் மார்க்கோனி நடத்திய பரிசோதனைகளே காரணமாக இருந்தன. கம்பம் என்ற பொருள் கொண்ட இத்தாலிய மொழிச் சொல்லாகிய ஆன்டெனா என்ற சொல்லை மார்க்கோனி பயன்படுத்தினார். அதன் பின்னால் மின் சக்தியை வானொலி அலைகளாகவும், வானொலி அலைகளை மின் சக்தியாகவும் மாற்றுவதற்குப் பயன்படும் மின் கருவிக்கு ஆன்டெனா என்ற பெயர் வழக்கத்திற்கு வந்தது. இத்தகவல்களோடு இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்கறிஞர் கோ.மன்றவாணன் "ஆன்டெனா' என்ற சொல்லுக்கு அலைத்தொடர்பி, அலையுணர்வி, அலையுணரி, அலைவாங்கி, உணர்கொம்பு ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

பேராசிரியர் பி.மாரியப்பன், "ஆன்டெனா' என்ற சொல் விலங்கியலிலும் பூச்சி, இறால் போன்ற விலங்குகளில் உள்ள மீசை போன்ற உணர் உறுப்பைக் குறிக்கப் பயன்படுவதால், அது "உணர்கொம்பு' என்று ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.அன்பழகன், "வானலை பரப்பி' என்றும், செ.சத்தியசீலன் புற உணர்வு உறுப்பு, உணர்ச்சிக் கொம்பு, உணர் சினை, வான் அலைவாங்கி, ஒலிஒளிக் குவியல், ஒலிஒளி மின்மாற்றி என்றும், டி.வி.கிருஷ்ணசாமி ஒளிஒலி கிரகிப்பான் அல்லது கதிர்வீச்சு அலைகளை மாற்றும் அமைப்பு என்றும், சோம.நடராசன் "அலை ஈர்ப்புக் கோல்' என்றும், ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் "அலைவாங்கி' என்றும், தெ.முருகசாமி "வான் அலை வாங்கி' என்றும், சோலை.கருப்பையா "உணர் சாதனம்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், வானலைக் கம்பம், விண்ணலை ஈர்க்கொடி, விண்ணலை உள்வாங்கி என்றும், பெ.கார்த்திகேயன் மின்காந்த அலைபரப்பி, நுண்ணலை ஏற்பி, அலைபெறு கருவி என்றும், ஹரணி மின்னலையுணர்வி, உணர்வுறுத்தி, உருவிலி உணர்வுறுத்தி என்றும் எழுதியுள்ளனர்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, அலைக்கோல், அலைமாற்றி, அலையேற்பான், அலைமாற்றுக்கோல், அலையேற்புக்கோல் முதலிய பல சொற்களையும், வெ.ஆனந்தக்கிருஷ்ணன் உணர்கொம்பு, வான்கம்பி, வானலைக்கொடி, அலை வாங்கி ஆகிய சொற்களையும் எழுதியுள்ளனர்.

மான்விழி, உணர்வு அறிவிப்பான், உணர்விப்பான், உணர்வுறுத்தி, உணர்ச்சியூட்டி, நுகர்விப்பான், நுகர்வூட்டி, புலன் தாங்கி (மின், காந்தம்) புலன் கடத்தி, புலன் செலுத்தி முதலிய சொற்களுள் ஏதாவது ஒன்று பொருந்தலாம் என்கிறார்.

கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் பொறியியற்றுறைக் கலைச்சொல் அகரமுதலியில் "ஆன்டெனா' என்ற சொல்லுக்கு உணர்சட்டம், உணர்கொம்பு என்று பொருள் தரப்பட்டுள்ளது என்றாலும், ஆன்டெனாவின் பல்வகை அமைப்பினை நோக்க உணரி, உணர்கலன் ஆகியவற்றுள் ஒன்று ஏற்புடைத்தாய் அமையும் என்று கருதுவதாகவும், "சென்சார்' என்ற சொல்லுக்கு "உணரி' என்ற பொருள் பொருந்தி வரினும், ஒரு சொல்லுக்கு பல் பொருள் வழங்கலும், பல சொற்களுக்கு ஒரு பொருள் வழங்கலும் தமிழ் மொழியில் இயல்பே என்பதால், "உணரி' என்று பொருள் கொள்ளலாம் என்றும் புலவர் சி.செந்தமிழ்ச்சேய் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு உணர் கொம்பு, பூச்சி வகையில் உணர்ச்சி உறுப்பு, செடி வகைகளில் ஊருதல் தரும் அமைவு, வான் அலை வாங்கி, கம்பியில்லாத் தந்தியில் வான் அலை வாங்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஆன்டெனா என்ற சொல் (1) தாவரவியல், (2) விலங்கியல், (3) மின்னியல் அல்லது மின்னணுவியில் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுவது தெரிகிறது. முன் இரு துறைகளிலும் உணர்வுகளைப் பெறும் உறுப்புகளைக் குறிக்கவும், மின்னியல் துறையில் அலைகளைப் பெறும் கருவியைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது. அதனால், பல்கலைக்கழக அகர முதலி உணர்கொம்பு என்ற சொல்லைத் தாவர மற்றும் விலங்கியல் துறைகளுக்கும், வானலைக் கொடி என்ற சொல்லை மின்னியலுக்கும் பயன்படுத்தியுள்ளது மிகப் பொருத்தம்தான். ஆனால், தாவரங்களும், விலங்குகளும்கூட சுற்றியுள்ள நிகழ்வுகளையும், அதிர்வுகளையும், மற்றவற்றையும் அலைகளாகவே உணரும் காரணத்தால் அலையுணரி என்ற சொல் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தி வரும் பொதுச் சொல்லாகத் தெரிகிறது. எனவே, ஆன்டெனா என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் அலையுணரி.

முழு கட்டுரையைப் படிக்க →