முகப்பு
தமிழ்மணி

பாறையில் ஊறிய நீர்

பண்டைக் காலத்தில் தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை பெண்ணுக்கு இருந்திருக்கிறது. இளநங்கை ஒருத்தி அடலேறு ஒருவனைக் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள்.

Updated On : 23 ஜூன், 2013 at 1:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM

பண்டைக் காலத்தில் தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை பெண்ணுக்கு இருந்திருக்கிறது. இளநங்கை ஒருத்தி அடலேறு ஒருவனைக் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். இருவரும் சில நாள் பகற்பொழுதில் ஊருக்கு வெளியே தினைப்புனத்தில் யாருக்கும் தெரியாமல் சந்தித்து மகிழ்கின்றனர். பின்னர்ச் சில நாள் இரவுப் பொழுதில் ஊர் உறங்கும் வேளையில் தலைவன் அவள் இல்லத்தின் அருகில் வர இருவரும் கூடி இன்புறுகின்றனர். இந்நிலையில், பெற்றோர் தன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்ட மாட்டார்கள் என்பதனைத் தெரிந்துகொள்கிறாள் தலைவி.

அவள் தன் பெற்றோர் மீது மிகுந்த அன்புடையவள். தன்னை அவர்கள் நேசிப்பது போலவே தானும் அவர்களை நேசிக்கிறாள். ஆயினும், அந்த அன்பினும் தலைமகன் மீது கொண்ட காதல் பலமடங்கு வலியதாய் உள்ளது. காதலுக்குமுன் எந்த உறவுதான் குறுக்கே நின்று தடுக்க முடியும்? அவள் அவனோடு புறப்பட்டுச் சென்று இல்லறம் நடத்தத் துணிகிறாள்.

ஒருநாள் நள்ளிரவில் தன் இல்லத்திற்கு அருகில் வந்து காத்திருந்த தலைமகனோடு அவள் புறப்பட்டுவிடுகிறாள். இதனை அவள் உயிர்த்தோழி மட்டுமே அறிவாள். கல்லும் முள்ளும் நிறைந்த பாலை நிலத்தில் கால்பதித்து நடக்கிறாள். அனிச்சமலரும் நெருஞ்சிமுள்ளாய் உறுத்தும் அவள் பாதங்களுக்கு எப்படி இந்த வலிமை வந்தது? காதலுக்கு முன்னே மலைப்பாதையும் மலர்ப்பாதை ஆகாதோ?

Advertisement

அதுவோ கற்களையும் கனலாக்கும் கடுங்கோடைக் காலம். உச்சி வெயில் கொளுத்துகிறது. அவள்மீது அவன் பொழியும் அன்பு, அவன்மீது அவள் வீசும் குளிர்ந்த பார்வை இவற்றால் வெயில் தந்த வேதனையும் தெரியாமல் நடக்கின்றனர். பொழுது சாயத் தொடங்குகிறது. ஓர் ஊரை நெருங்குகின்றனர். அவ்வூர் எயினரும் எயிற்றியரும் இருக்கும் இடம். அவர்கள் ஆறலைத்தும் சூறையாடியும் வாழ்பவர்கள்; முரடர்கள்; திருடர்கள். எனினும், காதலர்களின் நிலையைக் கண்டு இரக்கம் கொள்கிறார்கள். அருகில் வேறு ஊர் இல்லை, கதிரவன் மறைந்து இருள் பரவத் தொடங்கி விட்டது; தலைமகள் மென்மை நிறைந்த இளம்பெண்; கடந்து செல்லும் பாதை அரியது மட்டுமன்றி நெடியது என்று நான்கு காரணங்களைக் காட்டித் தங்குமாறு வேண்டுகிறார்கள். ""மலர்மாலை அணிந்த மார்பினையுடைய இளைஞனே, எங்கள் ஊரைத் தவிர மற்றோர் ஊர் அருகில் இல்லை. வெப்பமான கதிர்களை வீசிய கொடிய சூரியனும் மறைந்தான். இந்தப் பெண்ணோ இளமையானவள்; மென்மையானவள். பெரிய மலையில் உள்ள பாதைகளோ அரிய பாதைகள்; நெடிய பாதைகள். ஆதலால், எங்கள் ஊரில் தங்கி நாளை செல்வாய்'' என்கிறார்கள்.

""எம்ஊர் அல்லது ஊர்நணித்து இல்லை

வெம்முரண் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்

சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப

இளையள் மெல்லியல் மடந்தை

அரிய சேய பெருங்கல் ஆறே!'' (சிற்றட்டகம்)

அவர்கள் தாழ்ந்த மக்களாயினும் பண்பாடு பேச்சில் உயர்ந்து நிற்கிறது. இந்த விருப்பத்தை இருவரையும் விளித்துத் தெரிவிக்காமல் தலைமகனை நோக்கித் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்குப் புதிதாக இளைஞன் ஒருவனோடு வந்துள்ள பெண்ணிடம் முன் அறிமுகமில்லாத தாங்கள் பேசுவது நாகரிகமன்று என்று தெரிந்திருக்கிறது. வறண்ட பாலைநிலத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் நெஞ்சில் ஈரப்பசை இருக்கிறது. அவர்கள் காட்டும் பரிவு பாறையில் ஊறிய குளிர் நீர் போன்றது.

இப்பாடல் நூற்பெயர் இன்றி அகப்பொருள் விளக்கம் 182-ஆம் நூற்பா உரையில் இடம் பெற்றுள்ளது. சங்கப் பாடல்களையே பெரிதும் எடுத்துக்காட்டும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் "பொழுதும் ஆறும்' என்னும் தொல்காப்பிய அகத்திணை நூற்பா உரையில் இதனைச் "சிற்றட்டகப் பாடல்' என்னும் குறிப்போடு எடுத்துக்காட்டுவது சங்கப் பாட்டினை நிகர்த்த இதன் சிறப்பினைக் காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.