முகப்பு
தமிழ்மணி

சொல் வேட்டை- 48

கிரேக்க மொழியில் "மறைக்கப்பட்ட' என்ற பொருள் கொண்ட சொல் க்ரிப்டீன் kryptein ஆகும். இலத்தீன் மொழியில் இதே பொருள் கொண்ட சொல் க்ரிப்டா crypta ஆகும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கிரேக்க மொழியில் "மறைக்கப்பட்ட' என்ற பொருள் கொண்ட சொல் க்ரிப்டீன் kryptein ஆகும். இலத்தீன் மொழியில் இதே பொருள் கொண்ட சொல் க்ரிப்டா crypta ஆகும். எனவே, இச்சொற்களின் அடிப்படையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பூமிக்குக் கீழே, பொதுவாக, இறந்தவர்களைப் புதைக்கும் இடமாகவோ, பாதாள அல்லது ரகசிய அறையாகவோ பயன்படுத்தப்படும் இடத்தை க்ரிப்ட் crypt என்று ஆங்கிலத்தில் குறிப்பிடத் தொடங்கினர். சில சமயங்களில், ஞானிகளின் சமாதிகளின் மேல் தேவாலயங்கள் எழுப்பப்பட்டன. ஜெருசலம் நகரில் உள்ள தூய ஹெலனாவின் க்ரிப்ட் மிகப் புகழ் பெற்றதும், பிரபலமானதும் ஆகும். காரணம், எந்தச் சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்டாரோ, அச்சிலுவையை தூய ஹெலனா அந்த இடத்தில் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு முன்பே அரசர்களும், ஒற்றர்களும் மற்றும் காதலர்களும், சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் சங்கேத மொழியில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் குறியீடுகளின் மூலமும், சங்கேதமாகவும் வேதங்கள் சொல்லிய காரணத்தால், அவை "மறைமொழி' எனப்பட்டன.

க்ரிப்ட் என்ற சொல்லிலிருந்துதான் "க்ரிப்டோகிராஃபி' cryptography என்னும் கலை (அல்லது அறிவியல்) பிறந்தது. வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பில், கிரேக்க நாட்டில் ஸ்பார்டா நகரில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் முதன்முதலில் க்ரிப்டோகிராஃபி முறையில் செய்திகளைக் கழிகளின் மேல், வளையம் வளையமாகச் சுற்றப்பட்ட துணிகளின் மேல் அல்லது பட்டைகளின் மேல் எழுதி, அத்துணிகளையோ பட்டைகளையோ சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பும் பழக்கத்தை உருவாக்கினர். அப்பட்டைகளைப் பெறும் நபர், அதே விட்டமுள்ள கழியில் அப்பட்டையை வளையம் வளையமாகச் சுற்றும்போது, அவருக்கு அனுப்பப்பட்ட செய்தி விளங்கும். க்ரிப்டோகிராஃபிக்கான முதல் நூல் 1379-இல் காப்ரியல் த லாவிண்த (Gabriel de Lavinde) என்பவராலும், க்ரிப்டோ அனாலிசிஸ் (crypto Analysis) பற்றிய முதல் தொகுப்பு 1474-இல் சிக்கோ சிமோனெட்டா (Sicco Simonetta) என்பவராலும் எழுதப்பட்டது.

ஆனால், இரண்டாம் உலகப்போரின்போது, படைவீரர்களுக்குள் ரகசியத் தகவல் பரிமாற்றத்திற்காக ஜெர்மானியர்கள் எனிக்மா Enigma என்ற இயந்திரத்தையே உருவாக்கி, இக்கலையை போர்க்கலை ஆக்கினர். இந்த வரலாற்று நிகழ்வுக்குப்பின், மனிதகுலத்தின் மேல் கணினிகளின் படையெடுப்பு தொடங்கியது. அதன்பின், தகவல்களும், செய்திகளும் அனுப்பும் விதமும், அவை செல்லும் வழியும், சேரும் இடமும், முப்பரிமாணங்களைக் கடந்தபோது, தொழில் ரகசியங்களைக் காக்கக் குறியீடுகள் தேவைப்பட்டன. அப்போது க்ரிப்ட் மற்றும் க்ரிப்டோகிராஃபி, சற்று உருமாற்றம் பெற்று, என்க்ரிப்ட் மற்றும் என்க்ரிப்ஷன் என்றாகின. என்க்ரிப்ட் என்ற சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி தரும் பொருள் "தரவு அல்லது செய்திகளைக் குறியீடுகளாக மாற்றி அனுப்புவது' என்பதாகும். இவற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

கோ.மன்றவாணன் இச்சொல்லுக்கு, குழுஉக்குறி (சங்கேதம்), குறிமொழி (பரிபாஷை), சொற்குறி, மறைவுரு, மறைக்குறி, மறைக்குறிமம், மறைமம் (மருமம் போல), குறியாக்கம், குறியேற்றம், தரவொளிப்பு, மறையாக்கம், மறைக்குறியாக்கம், மறைக்குறியீட்டாக்கம், மறைமுகக் குறியீடு என்றும், பா.ஜம்புலிங்கம், மறைவான குறியீடு, மறைகுறி, மறைகுறி வெளிப்பாடு என்றும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி, மறையாக்கு, குறிமறை (குறியால் மறை) என்றும், அ.கு.மான்விழி, மாற்று நிலை, மாற்றுக்குறி, நிலைமாற்றுக் குறியீடு, மறைக்குறிப்பு, சங்கேதச் சொல், சங்கேதக்குறியீடு என்றும், ப.கோபி பச்சமுத்து, தரவு மறையாக்கம் என்றும், வே.ப.பாலசுப்ரமணியன், குறியீட்டுச்செய்தி என்றும் பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

சிவ.தணிகாசலம், குறிமானம் எனக் கூறலாம் என்றும், என்கிரிப்ட் என்பது ஒரு வினைச்சொல் ஆதலால், அதற்குக் குறிமானித்தல் என்பதே சாலப்பொருந்தும் என்றும், மேலும் ஒரு வினைச்சொல்லாக அதைப் பயன்படுத்த, குறிமானித்தனர், குறிமானிக்கப்பட்டது எனச் செய்வினை, செயப்பாட்டுவினைச் சொற்றொடர்களில் இடம்பெற எளிதாகக் கையாள, இயல்பாக ஏற்றது இச்சொல் என்கிறார்.

இச்சொல் தோன்றிய வரலாற்றையும், ஆங்கில அகரமுதலிகள் இச்சொல்லுக்குத் தரும் பொருளையும் கூர்ந்து கவனித்தால், என்க்ரிப்ட் என்ற சொல்லுக்குள் மறைத்தல், குறியீடு ஆகிய பொருள்கள் உள்ளடங்கி இருப்பது தெரியும். எனவே, இச்சொல்லுக்கான இணைச்சொல்லும் இவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே, என்க்ரிப்ஷன் என்ற சொல்லுக்கு மறைக்குறியாக்கம் என்பதும், என்க்ரிப்ட் என்ற சொல்லுக்கு மறைக்குறியாக்கு என்பதும் பொருந்தும். எனவே, டிக்ரிப்ட் (decrypt) என்ற சொல்லுக்கு மறைக்குறி நீக்கு என்ற சொல்லையும் உருவாக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →