சும்மாடு
நமது புகைவண்டி நிலையங்களில் சுமை தூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், அப்பெட்டி அவர்கள் தலையில் அழுத்தாத வண்ணம், தங்கள் மேல்துண்டை வட்டமாகச் சுருட்டித் தலையில் வைத்து, அதன் மேல் பொருள்களை வைப்பதைப் பார்த்திருக்கிறோம்.
நமது புகைவண்டி நிலையங்களில் சுமை தூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், அப்பெட்டி அவர்கள் தலையில் அழுத்தாத வண்ணம், தங்கள் மேல்துண்டை வட்டமாகச் சுருட்டித் தலையில் வைத்து, அதன் மேல் பொருள்களை வைப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வீதிகளில் காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்துகொண்டு விற்றுவருவோர்கூட இவ்வாறு வருவதைப் பார்த்திருக்கலாம். இதுவே "சும்மாடு' ஆகும். கிராமப்புறப் பெண்களானால், தம் முதுகில் நீளமாகத் தொங்கும் முந்தானையின் நுனிப்பகுதியை இவ்வாறு சுருட்டிச் சும்மாடாக வைத்துக்கொள்வர். இதனைச் "சும்மாடு கட்டுதல்' என்பர். இந்தச் சும்மாடு பண்டைக்காலத்தில் "சுமடு' என்று அழைக்கப்பட்டது.
மோர் விற்கும் பெண் ஒருத்தி, மோரினை ஒரு பானையில் ஊற்றித் தூக்கிச் சும்மாட்டில் வைத்து மோர் விற்கப்போகும் அழகைப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் இவ்வாறு விவரிக்கிறார்.
""புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன்மா மேனி'' (பெரும். 157 - 161)
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய, உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, (தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து, அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனி என்பது இதன் பொருள். சுமடு என்ற இலக்கியச் சொல்லையே இன்றைய பேச்சு வழக்கில் சும்மாடு என்று அழைக்கிறோம்.