தமிழ்மணி

கவியரசைக் காத்த புவியரசு

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர்.

இராஜை என். நவநீதகிருஷ்ணராஜா

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர்.

திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவன் இச்சிறுவன். இவனை ஆதரித்து மேலும் இலக்கணப் பயிற்சி அளித்து உயர்நிலை எய்த வைப்பின், தமிழன்னை தரணியில் தழைத்தோங்குவாள். இவனைத் தங்கள் பால் அடைக்கலமாக்குகின்றேன்'' எனக் கூறி அறிமுகம் செய்வித்தார்.

ஜமீன்தார் அவர்தம் வேண்டுகோளை ஏற்று, அண்ணாமலையை அரண்மனையில் தங்கவைத்து, பெரும் புலவர்களிடம் பாடங்கேட்க ஏற்பாடு செய்தார். அரண்மனை வாசம் தொடர்ந்திடினும் அண்ணாமலை, மனம் நிறைவு கொண்டானில்லை. அரண்மனைச் சமையல்காரர்கள் அவனை உபசரிப்பதில் குறுகிய மனம் கொண்டோரானதே அதற்குக் காரணம்.

வாடிய முகமும், சோர்வுற்ற மனமும் கொண்ட நிலையில் அண்ணாமலை நின்றதை ஜமீன்தார் தற்செயலாகக் கண்ணுற்றார். காரணத்தைக் கேட்டார். அண்ணாமலை மறுமொழி கூறும் முகத்தான்,

""வாரையணி நகில் மடவார் மாரனென ஆசை கொளவந்த ரூபா!

சேரைநகர் ஆளவந்த சுந்தரராசேந்திர மன்னா! செப்பக் கேண்மோ!

கீரை யெனும் குழம்பதனால் மனம் குழம்பிச் செமியாமல் கிலேச முற்றேன்

ஆரை நொந்து கொள்வதினி இதுவு மென்றன்தலை விதியாம் அதிட்டமிதானே!

எனும் பாடல் வழியாகத் தம் மனக்குறையைக் கொட்டித் தீர்த்தான். சமையற்காரர்கள் அவனைச் சரியாக உபசரிக்காது நாள்தோறும் கீரைக் குழம்பையே அவனுக்குக் கொடுத்ததை குறிப்பால் உணர்ந்த ஜமீன்தார் பெரிதும் அதிர்ச்சியுற்றார். அவர்களைக் கடுமையாகச் சாடினார். அன்று முதல் அண்ணாமலையைத் தம் அருகில் அமரவைத்து ராஜ உபசாரம் செய்யலானார். தன்னைவிட அகவையில் குறைந்தோராயினும் ஜமீன்தார் தன்மேல் செலுத்திய அளப்பரிய அன்பினை எண்ணியெண்ணி அண்ணாமலை இறும்பூதெய்தினான்(ர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT