உரைநடை இலக்கியத்தில் பேச்சு வழக்கைக் கொண்டுவந்த முன்னோடி எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம். கொங்கு வழக்கின் நயங்களையெல்லாம் தமது "நாகம்மாள்' என்ற நாவலில் கொண்டுவந்து, பேச்சு வழக்கிற்கு இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்தியவர் அவர். பிறகு கி. ராஜநாராயணன் உள்ளிட்ட பலர் அவரவர் வட்டாரப் பேச்சு வழக்கை இலக்கியத்தில் கொண்டுவந்து சாதனை படைத்தனர்.
என்றாலும், எழுத்து மொழியாக வரும்போது இலக்கண வழக்கே சரி என்றும், பேச்சு வழக்கு எல்லோருக்கும் புரியாது என்றும், காலப்போக்கில் நிற்காது என்றும் எதிர்த்தரப்புக் கருத்துகளும் அவ்வப்போது எழுந்தன. அவற்றைப் புறந்தள்ளி வட்டார வழக்கு சார்ந்த உரைநடை இலக்கியம் தமிழில் செழித்தது. இதற்குச் சான்று கூறுபவை இலக்கணம் தப்பாத பல நாட்டுப் பாடல்கள்.
எழுதப்பட்ட செய்யுள் இலக்கியத்தில் பேச்சு வழக்கைப் புகுத்தி சோதனை செய்தவர்களில் முன்னோடிக் கவிஞர், குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர். மேலும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து போன்ற படைப்புகளிலும் ஆங்காங்கே பேச்சு வழக்கின் நயங்களை செய்யுளில் அனுபவிக்க முடியும்.
திரைப்பாடல்களில் சந்தக் கட்டுக்கு உள்பட்டு இலக்கணப் பிசகு ஏற்பட்டுவிடாமல் பேச்சு வழக்கை அதிக அளவில் புகுத்திய முன்னோடித் திரைக் கவிஞர் என்ற பெருமையைப் பெறுகிறார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எளிய விவசாயியான அவர், பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுணர்ந்ததால் அல்ல, இயல்பாகவே அவருக்கு வாய்த்த கவிதை மனத்தால் கவியெழுத வந்தவர்.
ஒருவர் ஒரு செயலைச் செய்யும்போது தன்னிடமிருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி அச்செயலைச் செய்வதுதானே இயல்பானது! பட்டுக்கோட்டையாரின் ஆழ்மனத்தில் இருந்ததெல்லாம் அழகிய பேச்சு வழக்குச் சொற்கள்தான். எனவே, அவற்றில் பல வார்த்தைகளை அப்படியே சீராக மாற்றிச் சீரோடும் சிறப்போடும் பாடல்களைப் புனைந்தது அவரது கவிமனம்.
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சு சோறுபோடுறான்
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறுபோடுறான்
என்று எழுதப் படிக்கத் தெரியாத விவசாயியின் பெருமையைப் பேசிய அவர், படித்தவர்கள் தாங்கள் படித்ததை அனுசரிப்பதில்லை என்கிற தம் கோபத்தையும் பாடல்களில் வெளிப்படுத்துகிறார்.
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணிக் கிழிச்சீங்க
என்ற அவரது வரிகளில், எழுத்தில் எழுதி, பின்னர் அவற்றைப் படித்து ஞானம் பெறுவதில் உள்ள சலிப்பு தென்படுகிறது. அவர் வாய்மொழி இலக்கியத்தையே பெரிதாக நினைத்திருக்க வேண்டும். "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்' என்பார்களே! ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மூத்தோர் தங்கள் ஞானத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது பேச்சின் மூலம் தானே?
பேச்சு சாதாரணமானதல்ல. அதன் அழகு எழுத்துக்கு வராது. பேச்சை எழுத்தாக்கும்போது ஒரு செயற்கைத்தனம் ஏற்பட்டுவிடுகிறது. தொப்புள் கொடியோடு பிறந்த குழந்தை மாதிரி பேச்சு பேச்சாகவே இருக்கும்போது, அதில் ஒரு தனி உயிர்த்துடிப்பு தென்படுகிறது. எனவே, எழுத்தையும் இயன்றவரை பேச்சுக் கூறுகளோடு பதிவுசெய்யலாம் எனப் பட்டுக்கோட்டையார் சிந்தித்திருக்க வேண்டும்.
""காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்'' என்ற அவரது வரிகளை காடு விளைந்து என்ன காதலனே, நமக்குக் கையும் காலும்தானே மீதம் என்று சொன்னால், முன்னதில் உள்ள உயிர் பின்னதில் இல்லை. இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர் பட்டுக்கோட்டை. அதனால்தான் செய்யுள் சார்ந்த வட்டார வழக்கு இலக்கியம் அவரால் தழைத்தது.
பல துறை சார்ந்தவர்கள் செய்யுள் இலக்கியம் படைத்தபோது, தங்கள் துறை சார்ந்தவர்களாக இல்லாமல் கவிஞர்களாகவே இயங்கினார்கள். விவசாயியான பட்டுக்கோட்டை மட்டும், தாம் கவிதை எழுதியபோதும் விவசாயியாகவே இருந்தார். ஒரு விவசாயியின் மொழியிலேயே கவிதை படைத்தார். தமிழ்ச் செய்யுள் இலக்கியம் அந்தப் புதிய போக்கால் நல்ல மகசூல் கண்டது. அவர் பாடல்களைப் பயிலும் தமிழ் அன்பர்கள் வட்டார வழக்கின் இனிய நயங்களை அறுவடை செய்யலாம். பட்டுக்கோட்டையாரின் பாடல்களை மறக்கத்தான் முடியுமா?
இன்று (13.4.1930) பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் 85-ஆவது பிறந்தநாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.