தமிழ்மணி

கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி!

கபிலர் பாண்டிய நாட்டு மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். திருவாதவூர்க் கல்வெட்டுகள்  தென் பறம்பு நாட்டு வாதவூர் என்று குறிக்கின்றன. இப்பறம்பு நாடு வேள்பாரி என்ற வள்ளலுக்கு உரியதாய் இலங்கியது.

வீ. மோகன்

கபிலர் பாண்டிய நாட்டு மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். திருவாதவூர்க் கல்வெட்டுகள்  தென் பறம்பு நாட்டு வாதவூர் என்று குறிக்கின்றன. இப்பறம்பு நாடு வேள்பாரி என்ற வள்ளலுக்கு உரியதாய் இலங்கியது. புலவர் கபிலர் வேள்பாரியிடம் நெருங்கிய நட்பு கொண்டவராய் விளங்கினார். அவன் இறந்த பின்பு அவன் மக்களை அழைத்துச் சென்று மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்க்கு மணம் முடித்து வைத்தார். பாரிமகளிரை மணம் செய்து தந்த பின்பு திருக்கோவலூரின் அருகில், ஓடும் பெண்ணை ஆற்றின் கரையில் அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார் என்பது வரலாறு. அவ்விடத்தில் இன்று ஒரு கற்பாறை உள்ளது. திருக்கோவலூர்க் கல்வெட்டு இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.

கபில் பாடியவை மொத்தம் 278 பாடல்களாகும். பன்னிரு பாட்டியலில் இவர் பெயரோடு சில நூற்பாக்கள் உள்ளன.

கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி

ஒரு பாடலினுள் பொதிந்துள்ளக் கருத்துகளை வெளிப்படுத்துவதாக, புலப்படுத்துவதாக அமைவதைப் புலப்பாட்டு நெறி எனக் கொள்ளலாம். அந்த வகையில் கபிலர் பாடல்களில் அமைந்துள்ள புலப்பாட்டு நெறியினைக் காண்போம்.

அவன் வாரேன் என்று சொல்லான்

குறத்தி அடுப்பில் சந்தனமரத்தை எரித்ததால் அருகில் மலைச்சாரலில் இருக்கும் வேங்கையின் பூக்கொம்பில் சூழும். பறம்புமலை இப்படிப்பட்ட இயல்புடையது. பாடிய புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததால் அனைத்து ஊர்களையும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டான். எஞ்சியிருப்பது அவன் மட்டுமேயாகும். எவரேனும் இரந்து கேட்டால் தன்னையும் தந்து அவன் ஆணைப்படி நடப்பான் என்பது பாடலாகும். இப்பாடலில் சந்தனமரம் மட்டுமே பறம்புமலையில் உள்ளதால், குறத்தி அம்மரத்தை அடுப்பில் வைத்து எரித்தாள்; பகைவர் சுடும்புகை அங்கு இல்லை; பாரியைப் பகைவர் வெல்வது அரிது என்பதால் இரவலராக வந்து அவனையே பரிசிலாகப் பெற்றனர். அவனும் இரவலர்க்கு இல்லை என்று கூறாத அறம் உள்ளவராதலால் அவர் பின் சென்று கொலையுண்டான் எனும் கருத்துகள் இப்பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை,

.. அரும்புகை அயலது

சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்

பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின்

வாரேன் என்னான் அவர்வரையன்னே (புறம். 108)

எனும் பாடல் புலப்படுத்தியுள்ளது.

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

மூவேந்தர்கள், பாரி மகளிர் இருவரையும் பெண் கேட்க, பாரி தராததால் அவமானமுற்று ஒருவர் பின் ஒருவராக வந்து போரிட்டுத் தோற்றனர். அப்போது கபிலர் பறம்புமலை உழவரால் உழப்படாமல் இயற்கையில் மூங்கில், நெல், பலாக்கனி, வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை விளைவதால் மக்கள் அவற்றை உண்டு, அனைவரும் போருக்கு வருவர். பாரியைப் படைபலத்தால் வெல்ல இயலாது. நீங்கள் உங்கள் அரசு கோலத்தைக் கைவிட்டு இரவலராய் வந்து, யாழை வாசித்து, நல்ல மணம் கமழும் கூந்தலையுடைய உம் மகளிர் விறலியர் கோலம் கொண்டு பின்வர ஆடுவோரும் பாடுவோருமாகச் சென்றால் அவன் தன் நாட்டையும் குன்றையும் ஒருங்கே உங்களுக்குத் தருவான்.

பல படைகளை உடையவராக, வலிமையான வீரர்களை உடையவராக இருந்தாலும் பாரியை வெற்றிபெற முடியாது. அவன் கொடையாகத் தன்னையும் தருபவன். போர் மூலம் பெறமுடியாததை அவனது கொடையின் மூலம் பெறலாம் எனும் கருத்து இப்பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளது. இதை,

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொளி கூந்தல்நம் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே (புறம். 109)

எனும் பாடல் காட்டுகிறது.

அக்காலத்தின் பறம்புமலை, பறம்பு நாடு எவ்வாறு செழிப்பாக இருந்தன, தான் காண்கின்ற இயற்கையை எப்படி பாரியோடு இணைத்துக் கண்டுள்ளார் என்பனவெல்லாம் கபிலரின் பாடல்களில் புலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT