முகப்பு
தமிழ்மணி

கஞ்சியிட்ட ஆடை

தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்த செய்தியை நற்றிணை 90ஆவது பாடல் ஒன்று கூறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:55 AM
பகிர்:

தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்த செய்தியை நற்றிணை 90ஆவது பாடல் ஒன்று கூறுகிறது. பாடலை இயற்றியவர் அஞ்சிலஞ்சியார். பரத்தையிற் பிரிந்த தலைமகனால் அனுப்பப்பட்ட பாணன் வாயில் வேண்டி தலைவியிடம் வந்தபோது, அப்பாணன் கேட்குமாறு, தன் தலைவியிடம் ""நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்தன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாலொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீண்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று. அவள் அழுது ஊடினதால்தான் இங்கு வந்தான் போலும்'' என்று வெகுண்டு தோழி கூறியதாகப் பாடல் அமைந்துள்ளது.

""ஆடியல் விழவின் அழுங்கன் மூதூர்

உடையோர் பான்மையின் பெருங்கை தூவா

வறனில் புலத்தி எல்லித் தோய்த்த

புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு

வாடா மாலை துயல்வர ஓடி

பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்

பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்

அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி

நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்

ஊசல் ஊறு தொழிற் பூசல்கூட்டா

நயனில் மாக்களொடு குழீஇப்

பயனின்று அம்மவிவ் வேந்துடை அவையே!''

"புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சியாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி) பழைமையான ஓர் ஊரில் செல்வர்கள் மிகுதியாக வாழ்வதால், அங்குள்ள வண்ணாத்திக்கு வறட்சியும் உழைப்பும் இல்லை. வண்ணாத்தி இரவில் உணவாக்கிய கஞ்சியில் ஆடைகளைத் தோய்த்து உலர்த்துகிறாள். அவ்வாறு கஞ்சியிட்டு உலர்த்திய ஆடையை அணிந்து, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என்கிறது பாடல்.

கஞ்சியிட்டு ஆடை அணியும் வழக்கம் சங்ககாலம் தொட்டே உண்டு என்பதை இப்பாடல் மூலம் அறியமுடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.