குறையே நிறை!
சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும்.
சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும். சொல்லாமல் விட்டுச் சுகம் காணச் செய்த கவிஞர்களின் மூன்று கவிதைகளைக் காண்போம்.
திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது,
""கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை'' (57-10)
என்பார். "நிலக்கு' எனும் சொல் தமிழ் வழக்கில் இல்லை எனலாம். ஆனால், வள்ளுவர் வலிந்து "நிலக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். இதன் நுட்பத்தைக் கற்போர் அறிய விட்டுவிட்டார்.
நிலத்துக்குப் "பாறை' என்றே சொல்ல வேண்டும். ஆனால் "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம், கடுங்கோலன் ஆட்சியே இந்த நிலத்திற்குப் பாரம் எனக் கூறவந்தவர், "அத்து' எனும் கூடுதல் சொற்பாரத்தை விட்டாலே கடுமையான ஆட்சியின் பாரத்தை நாம் அறிய இயலும் எனச் சொல்லாமல் சொல்வதற்காகத்தான்!
கம்பர், மந்தரை சூழ்ச்சிப் படலத்தில், ""எனக்கு நல்லையும் அல்லை நீ'' (65) என்ற பாடலின் கடைசி வரியில் ""மனக்கு நல்லன சொல்லிலை மதியிலா மனத்தோய்'' என்று, மந்தரையிடம் கைகேயி கூறுவதாகக் கம்பர் கூறுவார். "மனக்கு' எனும் சொல்வழக்கு தமிழில் இல்லை என்றாலும், கம்பர் வலிந்து "மனக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். ஆம் "மனத்துக்கு' எனச் சொல்ல வேண்டியவர், "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம் என்ன?
மந்தரையின் சூழ்ச்சியில் ஆட்பட்டு தசரதன் உயிர் துறக்கப் போவதும் உறுதி. அதனால், கைகேயி தாலி இழக்கப் போவதும் உறுதி என்பதைக் கற்போர் அறிய வேண்டி, கைம்பெண்ணை "அத்துக் கெட்டவள்' எனக் கூறுவதைக் குறிப்பால் உணர்த்தவே "அத்து' எனும் சாரியையைக் குறைத்து "மனக்கு நல்லன சொல்லினை' எனக் கூறியுள்ளார்.
திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில், திருக்குற்றால மலைச்சிறப்பைக் குறத்தி மூலம் ""வானரங்கள் கனிகொடுத்து'' (பா.1) என்ற பாடலின் வழி விளக்குவார். அதில் ஆறாவது வரியில் ""செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்'' என்பார். இங்கே, "வழுக்கும்' எனும் சொல்லிருக்க, "வழுகும்' எனும் சொல்லைக் கவிராயர் வலிந்து கையாள்கிறார்.
அருவியின் நீர்ப்பெருக்கால் வானத்தில் செல்கின்ற கதிரவனின் தேர்ச்சக்கரங்களும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளும் வழுக்குகின்றன எனச் சொல்லும் பொழுதே "வழுக்கும்' எனும் சொல்லில் உள்ள "க்' "வழுக்கியதாம்' எனக்கூறாமல் கூறியதை அறிந்தால், கவிஞர்களின் "குறையில் கூட நிறை' காணமுடிகிறதன்றோ!