வகையுளியா? சொல்லா?
நிலையாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள். இதனை இவ்வாறே சீர்பிரித்துப் பலரும் பதிப்பித்துள்ளனர். இதில் உறங்குவது என்னும்
""உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு''
என்பது நிலையாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள். இதனை இவ்வாறே சீர்பிரித்துப் பலரும் பதிப்பித்துள்ளனர். இதில் உறங்குவது என்னும் சொல் உறங்கு, வது என்று பிரியுண்டு வகையுளியாய் அமைகிறது. பாட்டின் அடியைச் சொல்நோக்காது இசைநோக்கிச் சீர்பிரித்தல் வகையுளி எனப்படும். பாட்டிற்கு வகையுளி வருதல் அத்துணைச் சிறப்பன்று.
Advertisement
திருக்குறள் பரிமேலழகர் உரையைக் குறிப்புரையோடு வெளியிட்டுள்ள வை.மு. கோபால கிருஷ்ணமாசார்யர் "உறங்கு வதுபோலும்' என்று பிரிக்காமல், "உறங்குவது போலும் சாக்காடு' என்றே சீர்பிரித்துப் பதிப்பித்துள்ளார். இப்படிப் பிரிக்கும்போது "போலும்' என்பதன் முன் "சாக்காடு' என்னும் சீர் அமைந்து, மா முன் நேர் வந்து நேரசைச் சீராகித் தளைதட்டுகிறது. இதனை உணர்ந்த வை.மு.கோ., ""முதலடியில், "போன்றது' என இருப்பின் தளைதட்டாது'' என்று குறிப்பு வரைந்துள்ளார். இது பாடவேறுபாடாக அமையாமல் உரையாசிரியர் கூறும் திருத்தமாக அமைகிறது. இதனை அறிஞர் உலகம் ஏற்பதரிது. ஆனால், இதனால் அவருக்கு வகையுளியாகப் பிரிப்பதில் உடன்பாடில்லை என்பது தெரிகிறது.
1997-ஆம் ஆண்டு புலவர் ச. சீனிவாசன் திருக்குறள் பரமேலழகர் உரையினைப் பதிப்பித்துள்ளார். தம் முன்னுரையில் இக்குறள் பற்றிப் பெரும் புலமையாளராகத் திகழ்ந்த தொண்டைமண்டல ஆதீனத் தலைவர் ஞானப்பிரகாச சுவாமிகளை (முத்து சு. மாணிக்கவாசக முதலியார்) அணுகி, தாம் பெற்ற தெளிவினைத் தெரிவித்துள்ளார்: அவரிடம் சென்று "இக்குறளுக்கு எப்படி அமைதி காண்பது?' என வினவினேன். அவரும் ஒருவாரம் ஆழ்ந்த சிந்தனை செய்து போஒலும் என ஒரு அளபெடை இருக்க வேண்டும் எனவும், பதிப்பில் விடுபட்டது எனவும் தெரிவித்தார்கள். எனக்கும் மனம் ஆறுதலாயிற்று. தம் பதிப்பிலும் இப்பாடத்தினையே கொண்டுள்ளார்.
வகையுளி பாட்டில் இடம்பெறக்கூடாது என்று இலக்கணம் கூறவில்லை. திருக்குறளிலும் சில இடங்களில் வகையுளி இடம் பெற்றுள்ளது. காலத்தி னாற்செய்த நன்றி (102) மனத்து ளதுபோலக் காட்டி (454) கல்லா தவரிற் கடையென்ப (729) ஏமுற் றவரினும் ஏழை (873) உறாஅ தவர்போல் சொலினும் (1096) என்று முதலிரு சீர்கள் வகையுளியாய் வருதல் காணலாம். இவற்றைப் போல "உறங்கு வதுபோலும்' என்பது வந்துள்ளது என்று கொள்ளலாம். ஆனால் இப்பாட்டில், வகையுளி குறளின் அழகினை உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதனை ஓதி உணரலாம். அப்படியானால்
போஒலும் என்னும் அளபெடுத்த பாடத்தைக் கொள்ளல்
வேண்டும். அதற்குத் திருக்குறள் இடமளிக்கிறதா என்பதனைக் காணலாம்.
திருவள்ளுவர் உயிரளபெடைகளைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அவ்வளபெடை இசைநிறை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூவகைப்படும். பாட்டிற்குரிய ஓசையை நிறைக்க வருவது இசைநிறை அளபெடை, துப்பாய தூஉ மழை (12) என்பது போல. பாட்டின் இசைகெடாத போதிலும் இனிய ஓசைக்காக மிகுவது இன்னிசை அளபெடை,
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் (15) என்பது போல. பெயரை வினையெச்சமாக மாற்றுவதற்கு வருவது சொல்லிசை அளபெடை, அசைஇ இருப்பாரை (1040) என்பது போல. திருக்குறளில் 66 இசைநிறை அளபெடைகளும், 29 இன்னிசை அளபெடைகளும் 19 சொல்லிசை அளபெடைகளும் உள்ளன.
திருக்குறளில் வரும் இசைநிறை அளபெடைகளில், ஏரின் உழாஅர் உழவர் (14) உலகம் தழீஇய தொட்பம் (425)
வெரூஉம் புலிதாக் குறின் (599) ஏஎர் உடைத்து (1053) ஈரம் அளைஇப் படிறிலவாம் (91) (இஃது இசைநிறையுமாம்) என்று முறையே ஆகார, ஈகார, ஊகார, ஏகார, ஐகார நெடில்கள் அளபெடுத்துள்ளன. "போஒலும்' என்பது இசைநிறை அளபெடை. இதில் ஓகாரம் அளபெடுக்கிறது. ஓகாரம் பல இடங்களில் அளபெடுத்து வருதலைக் குறளில் (46, 653, 848, 933, 1070, 1088,1179, 1204) காணலாம். இவ்வாறே உறங்குவது போஒலும் சாக்காடு என்று அமைந்தது ஏடெழுதுவோரால் நழுவவிடப்பட்டிருக்கலாம்.
உறங்குவது போஒலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்னும் போது ஓசையினிமை நிறைந்திருப்பது காணலாம். தவத்திரு ஞானப்பிரகாச சுவாமிகள் சிந்தித்துத் தெரிவித்த பாடமே சரியான பாடமாகத் தோன்றுகிறது. அறிஞர் உலகம் சிந்திப்பதாக.