சேத்தூர் அரண்மனையில் (காவடிச் சிந்து) இளைஞனான அண்ணாமலை உறைந்து, தமிழ்ப்பாடங் கேட்ட நாள்களில் அவனுக்கு முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயரின் தொடர்பு கிட்டியது. பல்வேறு இலக்கியங்களை அண்ணாமலைக்குப் போதித்தவரும் அவரே. பிறவிக் கவிஞரான அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ணுற்ற அவர், அண்ணாமலையை மேலும் உயர்நிலை எய்திடச் செய்ய பேரவாவுற்றார். அண்ணாமலை பயில்வதற்குத்தக்க தலமான திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு அண்ணாமலையை அழைத்துச் சென்று, ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் அறிமுகம் செய்வித்தார். அண்ணாமலையும் நன்மாணாக்கருக்குரிய இலக்கணப்படி தேசிகரிடம் பணிவுடன் வணங்கி நின்றான். பின்பு பல்துறை மேதையான தேசிகரின் பெருமைகள் அண்ணாமலையின் உள்ளத்தில் அலைபாய அவர்மீது,
""அரசனக ராதியர் முன்போற்ற வடவாலர் மந்த அமலா! தென்பால்
அரசனக ராவை வென்ற விடை மதிச் செஞ்சடைக் கரத்திவ் வனிபோற்ற
அரசனக ரார்ந் தொளிர் சுப்பிரமணிய குருமணியே - அடிமையே நான்
அரசன ராக மகலக் கக்கண் கருணை புரிந்தருள்வாய்!
எனும் தான் இயற்றிய பாடலைப் பாடி மனநிறைவுற்றான். சிறுவன் அண்ணாமலையின் பாடலைச் கேட்ட தேசிகரும், குழுவிலிருந்த புலவர் பெருமக்களும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
இப்பாடலின் முதல் மூன்று அடிகளில் வருகின்ற "அரசன்' எனும் சொல்லின் பொருளினைத் தேசிகரும், புலவர் பெருமக்களும் நன்கு அறிந்து கொண்டனர். ஆயினும் தன்னையே "அரசன்' என இறுதி அடியில் கூறியதன் பொருள் விளங்காது அவர்கள் தடுமாறித் தவித்தனர். அறிவாற்றல் மிகுந்த தேசிகர் கூட பொருள் புலப்படாது திகைத்தார். எனவே மீண்டும் அக்கவியினைப் பாடுமாறு பணித்தார். அண்ணாமலை அக்கவியினை இருமுறை திரும்பப் பாடியும், தேசிகரும், அவையோரும் அவ்வடியின் பொருள் நுட்பத்தினை உணரவியலாது தவித்தனர்.
பின்னர் ஆதீனம் ""உன் பாடலின் இறுதி அடியில் குறிப்பிட்ட வண்ணம் நீ எங்ஙனம் அரசனாவாய்?'' என வினவினார். அதற்கு அண்ணாமலை, ""ரசன் எனுஞ் சொல் ரசனை உடையவன் என்பதாகும். அ+ரசன் எனப் பதம் பிரித்துச் சொல்லும்போது அதற்கு எதிர்மறான ரசனையற்றவன் எனும் பொருளை உணர்த்துகின்றது. எனவே, தன்னையே ரசனையற்றவன் எனக் குறிப்பிட்டதாகச் சாதுர்யமாகப் பதிலிறுத்தான்.
இளங்கவி அண்ணாமலையின் மதிநுட்பத்தை நன்கு மெச்சிய அறிவுச்சுடர் ஆதீனம், ""நீ சாதியிலும் ரெட்டி, புத்தியிலும் ரெட்டி'' எனப் புகழ்ந்தார். மேலும் பட்டுப் பீதாம்பரம் அணிவித்துப் பலபடப் பாராட்டி அகமிக மகிழ்ந்தார் என்பது வரலாறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.