தமிழ்மணி

போர் முனையில் மணமகன்!

வெற்றிணையில் உள்ள நக்கீரர் பாடல் ஒன்றில் (197), தலைவன் திருமணத்தை இடை வைத்து, அதுவும் திருமணநாள் குறித்த பின் போருக்குச் சென்றுள்ளான்.

சிவஞானம் கலைமகள்

வெற்றிணையில் உள்ள நக்கீரர் பாடல் ஒன்றில் (197), தலைவன் திருமணத்தை இடை வைத்து, அதுவும் திருமணநாள் குறித்த பின் போருக்குச் சென்றுள்ளான். குறித்த அத்திருமண நாளும் வந்தது. ஆனால், தலைவன் வரவில்லை. இதையறிந்த தலைவி, ""என்னுயிர் போக இருக்கிறதே'' என அழுகிறாள். அவளை, "அழாதே' என்று தோழி தேற்றுகிறாள்.

""தோளே தொடி நெகிழ்ந் தனவே நுதலே

பீரிவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே

கண்ணும் தன்பனி வைகின அன்னோ

தெளிந்தன மன்ற தேயர்என் உயிரென

ஆழல் வாழி தோழி நீநின்

தாழ்த்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு

வண்டுபடு புதுமலர் ஒண்துறைத் தரீஇய

பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல்

பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள்

இன்னிசை முரசின் இரங்கி மன்னர்

எயிலூர் பல்தோல் போலச்

செல்மழை தவழும் அவர் நன்மலை நாட்டே''

""என் தோள்களில் உள்ள தொடிகள் நெகிழ்ந்தன. நுதலோ பிர்க்க மலரின் நிறத்தை ஒத்துப் பசப்பூர்ந்தது. கண்களிலும் நிரந்தரமாகக் கண்ணீர் தங்கிவிட்டது. இனி நான் உயிர் வாழமாட்டேன் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது'' என்று தலைவி அழுகிறாள்.

அதற்குத் தோழி, ""தலைவியே நீ அழாதே!உன் திருமணத்திற்காகப் பெருமடமகளிர் (கட்டுக்கழுத்தியர் அல்லது சுமங்கலிகள்) குளிர்ச்சி பொருந்திய நீர்த் துறையிலிருந்து வண்டுகள் மொய்க்கும் புதுமலர்களைக் கொண்டுவந்து, கீழ்வரை தாழ்ந்து தழைத்து வளர்ந்துள்ள உன்னுடைய கூந்தலினைத் தன் முன்கையிலுள்ள சிறுகோல் கொண்டு சீவி, திருமணத்திற்காகக் கால் எடுத்துச் சடை பின்னலிடுவர். அப்படிப் பின்னியதால் நீண்டு வீழ்ந்த உன் சடையில் புது பூ தைப்பர். அப்படி அவர்கள் திருமணத்திற்காக அலங்கரிக்கும்போது, அவர்கள் கைகளில் அணிந்துள்ள பொன்வளையல்கள் உன் கரிய கூந்தலின் பின்புலத்தில் மின்னல் போல மின்னும். உன் கூந்தலின் மேலிருந்து கீழாக அவர்கள் சீவும்போது வலையல்கள் ஒளிவீசுவது கரிய மேகத்தில் வளைந்து நெளிந்து மின்னல் மின்னுவது போல மின்னும்.

தலைவன் சென்றுள்ள நாட்டிலும் இடத்திலும் கார்காலம் தோன்றி கரிய மேகக் கூட்டங்களின் பின்புலத்தில் மின்னல் மின்னும் (அது தலைவனுக்குத் தாம் கார்காலத்தில் திருமணம் செய்வதாகக் குறித்துவிட்டு வந்த மணநாளை நினைவூட்டி அந்த மணநாளில் பெண்கள் உன் கூந்தலை அலங்கரிப்பது நினைவுக்கு வரும்). திருமண இன்னிசை முரசு போன்று மேகம் இடி இடித்து ஒலிக்கும் (அதனால் தலைவனுக்குத் திருமண நாளில் மண முரசு ஒலிப்பது நினைவுக்கு வரும்); பகை அரசரின் மதில்களைக் காவல் காக்கும் வீரர்கள் மதிலின் மேலிருந்து கேடயங்களை வைத்துக்கொண்டு இருப்பர்.

நம்முடைய ஊரில் கார்காலம் வந்தது போல நம் தலைவன் முற்றுகையிட்டுள்ள நாட்டிலும் அக்கேடயங்கள் போன்று கார்காலத்தைக் குறிக்கும் மழை மேகங்களும் தவழ்ந்து, அங்கும் கார்காலமும் வரும். அதனால், தான் குறித்துச் சென்ற திருமண நாள் நினைவுக்கு வந்து, தலைவன் விரைவில் வந்துவிடுவான்'' என்று தேற்றுகிறாள்.

இவ்வாறு, திருமணத்திற்கு நாள் குறித்துவிட்ட பின் போர் முனையில் இருக்கும் தலைவனின் மனநிலையையும், அதனால் தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தையும், அத்துன்பத்திலிருந்து தலைவி விடுதலை பெற்று மன அமைதி

பெற வேண்டும் என்ற தோழியின் ஆறுதல் மொழிகளையும் இப்பாடல் வழி அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

SCROLL FOR NEXT