சொல் தேடல் -19
நாம் அஞ்சலில் அனுப்பும் பதிவுக் கடிதங்களை அரக்கு முத்திரையிட்டு அனுப்புகிறோம். சில சமயம் அதிகாரிகள் சில கட்டடங்களைப் பூட்டி யாரும் திறக்கக்கூடாது என்று அறிவிக்கும் வகையில் மேலே முத்திரையிட்டுச் செல்கிறார்கள். கடையில் வாங்கும் சில பொருள்கள் தகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மெல்லிய தகடு போர்த்தப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன.
நாம் அஞ்சலில் அனுப்பும் பதிவுக் கடிதங்களை அரக்கு முத்திரையிட்டு அனுப்புகிறோம். சில சமயம் அதிகாரிகள் சில கட்டடங்களைப் பூட்டி யாரும் திறக்கக்கூடாது என்று அறிவிக்கும் வகையில் மேலே முத்திரையிட்டுச் செல்கிறார்கள். கடையில் வாங்கும் சில பொருள்கள் தகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மெல்லிய தகடு போர்த்தப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. ஒரு கடிதத்தையோ அறையையோ பெட்டியையோ யாரும் திறந்து பார்க்க முடியாத வகையில் இடப்படும் அடையாளத்தையே "சீல்' என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கிறது.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், மாதவி கோவலனுக்கு இரு மடல்கள் எழுதியுள்ளாள். முதல் மடல் காதலைக் காட்டுவது; இரண்டாவது மடல் கவலையை உணர்த்துவது. முதல் மடல் கோவலன் பிரிந்த அன்று மாலை தாழைமடலில் செம்பஞ்சிக் குழம்பில் பித்திகை அரும்பைத் தோய்த்து எழுதப்பட்டது. அது திறந்த மடல். அதனை எடுத்துச் சென்றவள் தோழி வசந்தமாலை. இரண்டாவது மடல் கோவலன், கண்ணகியோடு பூம்புகாரை விடுத்துச் சென்றபின் மாதவி தன் துயரத்தைப் புலப்படுத்தி எழுதியது. அதனை எடுத்துச் சென்றவன் அந்தணன் கோசிகமாணி. அது மூடப்பட்ட மடல். அதன்மேல் அவள் கூந்தலால் இட்ட இலச்சினை இருந்தது. அஃது அவளோடு அவன் உறைந்த காலத்தில் பூசிய புழுகுநெய்யின் மணத்தினை அறிவித்துக் காட்டியதால், அதனை மெல்லப் பிரித்துப் படித்து அவள் தீது இல்லாதவள் என்றும் தானே தீது உடையவன் என்றும், தெளிந்தான். அம்மடலை, "மண்ணுடை முடங்கல்' என்றும் அதில் இருந்த இலச்சினையை "மண்பொறி' என்றும் இளங்கோவடிகள் குறித்துள்ளார். இதனால், இப்படி அடையாளம் இடும் முறை நெடுங்காலத்திற்கு முன்பே இருந்துள்ளது தெரிகிறது.
தில்லைப் பொன்னம்பலத்தில் மூவர் முதலிகளின் கை இலச்சினையிடப்பட்ட அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு வரலாறும் உண்டு. இதனால், "சீல்' என்பதற்கு நிகரான பழஞ்சொற்கள் மண்பொறியும் இலச்சினையும் ஆகும். ஆனால், இவை தகரப்பெட்டியில் இடப்படும் சீல் என்பதற்குத் தக்க மொழிபெயர்ப்பு ஆகாது. அதையும் உள்ளடக்கியதாகத் தமிழாக்கம் அமைதல் சிறப்பு.
Advertisement
இச்சொல்லுக்குக் காப்புத்தன்மையை முதன்மைப்படுத்தி, க.பலராமன் உடைபடாக் காப்பு, காப்பு அடைப்பு என்றும், சாயிகிரிதர் தகரிலைக் காப்பு, உணவுநிலை மாறாக்காப்பு என்றும், ச. கிருஷ்ணசாமி காப்புத் தகடு என்றும், சந்திரா மனோகரன் உடைபடாக் காப்பு, புழைகாப்பு மூடி என்றும் தமிழாக்கம் செய்யலாம் என்கின்றனர்.
மூடப்பட்டிருக்கும் இயல்பினைக் கருத்தில் கொண்டு
ச. செந்திலாண்டவன் இலச்சினை மூடி, முத்திரை மூடித்தகடு என்றும், ப. இரா. இராசஅம்சன் மென்மூடு பொருள், மெல்லுறைப் பூட்டு என்றும், கோ. மன்றவாணன் அடைதாழ், அடைதகடு என்றும், எஸ். சுரேஷ், டி.வி. கிருஷ்ணமூர்த்தி, ச. கிருஷ்ணசாமி, தி. அன்பழகன் வெ.ஆனந்தகிருஷ்ணன், ப.மூர்த்தி ஆகியோர் முறையே உள்மூடி, அடைப்பு மூடி, காப்புத் தகடு, அகத் தகடு, மூடு கருவி, மூடுறை, காப்பு மூடி என்றும் குறிக்கலாம் என்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு திருப்பூர் கிருஷ்ணன் ஒரு மின்னஞ்சல் வரக்காட்டியிருந்தார். அஃது அவர் எனக்குத் திருப்பிவிட்டிருந்த அஞ்சல். அதில் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா தகரப் பெட்டியில் இருக்கும் "சீல்' என்பதற்குரிய தமிழாக்கம் குறித்து வினவியிருந்தார். சிலம்பினையொட்டி மூடுபொறி என்னும் சொல்லைக் கருதினேன். ஆனால், பொறி என்பது மயக்கம் தருமோ என்று அஞ்சி, மூடுகுறி என்று குறிக்கலாம் என்று தெரிவித்தேன். அதனைத் தக்க மொழியாக்கம் என்று அவர்கள் இருவரும் மேலெழுத்திட்டார்கள். அதனால் சீல் என்பதற்குரிய தமிழ்ச் சொல்லைப் பலரும் அறியும் வகையில் இந்த வாரத்திற்குரிய சொல்லாகத் தேர்வு செய்தேன்.
கா.மு.சிதம்பரம் என்னைப் போலவே சிந்தித்துச் சிலம்பில் இடம்பெறும் கடிதத்தைத் தெரிவித்ததோடு, கூடுதலாகக் குடவோலை முறை தேர்தல் நடைபெற்ற காலத்தில் அக்குடத்தில் பொறியிடப்பட்டிருந்ததையும் காட்டி ஏமப்பொறி, காப்புப்பொறி, அரணப்பொறி என்னும் மூன்று சொற்களைத் தந்துள்ளார். அச்சொற்களின் முன் மூடுகுறி என்னும் சொல் மின்விளக்கின் முன் வைத்த அகல் விளக்காகிவிட்டது. ஏமப்பொறி, அரணப்பொறி ஆகா! எத்தனை இலக்கியநயமும் செறிவும் மிக்க தமிழாக்கம்! ஏமப்பொறி, "ஏம வைகல் எய்தின்றால் உலகே' என்னும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துத் தொடரை நினைவூட்டுகிறது. ஆதலின், Seal என்பதனை "ஏமப்பொறி' என்று வழங்கலாம். அதனை அரிய இலக்கிய வழக்காகக் கருதினால் "மூடுகுறி' என்பதனைக் கருதலாம். ஆனால், என் வாக்குச்சீட்டு ஏமப்பொறிக்கே.
Seal ஏமப்பொறி அல்லது மூடுகுறி.
அடுத்த வாரத்திற்குரிய சொல் :Doppelganger