சுருங்கையும் புழையும்
பழந்தமிழர்கள் நனிநாகரிகம் மிக்கவர்களாக இருந்தனர் என்பது வெறும் வாய்ச்சொல் அன்று. நன்னீரும் கழிவுநீரும் வீடுகளுக்குள் வரவும் வெளியேற்றவும் தொழில்நுட்பத்துடன் கூடிய பல ஏற்பாடுகளைப் பழந்தமிழர்கள் செய்திருந்தனர்.
பழந்தமிழர்கள் நனிநாகரிகம் மிக்கவர்களாக இருந்தனர் என்பது வெறும் வாய்ச்சொல் அன்று. நன்னீரும் கழிவுநீரும் வீடுகளுக்குள் வரவும் வெளியேற்றவும் தொழில்நுட்பத்துடன் கூடிய பல ஏற்பாடுகளைப் பழந்தமிழர்கள் செய்திருந்தனர்.
இன்று மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற "பாதாளச் சாக்கடை' முறைமை பழந்தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதனை இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.
மணிமேகலை, தன் தாயாகிய மாதவியையும், தோழியாகிய சுதமதியையும், ஆசிரியராகிய அறவண அடிகளையும் காண விழைந்து, காஞ்சி நகர் செல்கிறாள். அவள் செல்லும் வழியில் உள்ள,
Advertisement
""சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்
கருங்குழல் கழீஇய கலவைநீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
கந்தமில் ஆடிய சாந்துகழி நீரும்'' (மணி.28:5-8)
ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறாள். இதற்கு உரை எழுதும் உ.வே.சா., "சுருங்கை - நீர் செல்லுதற்குக் கற்களால் கரந்துபடுத்தது. தூம்பு - சலதாரை' எனப் பொருள் கூறுகிறார். கழிவு நீரானது மறைவாகச் செல்லும் இம்மாதிரியான அமைப்புகள் வீடுகளில் இருந்தமையைப் பரிபாடல் (16:20, 20:15, 104) காட்டுகிறது. மேலும், கல்லால் அடைக்கப்பட்ட இவ்வழிகள் இருந்தமையைப் "பாருடைத்த குண்டகழி' (புறம் 14:5), "கல்லகழ் கிடங்கு' (மலை.91), "கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கு' (மதுரைக்.730) முதலிய தொடர்களும் வலியுறுத்துகின்றன. இவ்வாறு கழிவுநீர் வெளியேற்றம் இன்றைய பாதாளச் சாக்கடை முறைமை போன்று இருந்தமை புலப்படுகிறது.
வைகையில் பெருக்கெடுக்கும் நீரின் ஆரவாரம் வீடுகளில் கேட்கிறது என்ற குறிப்பு, "உயர் மதிலில் நீரூர் அரவத்தாற் துயில் உணர்வு எழீஇ' (பரி.20:14-15) என்ற தொடரால் அறியப்படுகிறது. மேலும், இதே பாடலின் இறுதியில் நெடிய - பெரிய சுருங்கையின் வழியே வரும் புனல் மதுரையிலுள்ள மதிலில் சொரியும்பொழுது, அப்புனல் யானைகள் துதிக்கையில் தூக்கிடும் நீரை ஒத்துள்ளது (பரி.20:104-107) என்ற குறிப்பு வருகிறது. இதன்வழி நன்னீர்ப் பங்கீடும் சுருங்கைகள் வழி இருந்தன என்பதனை அறிய முடிகிறது.
"புழை' என்ற சொல் "துளை' என்ற பொருள்படும். வீடுகளில் "புழை' எனப்படும் துளைகள் அமைத்தனர் என்பதைப் பட்டினப்பாலை வழி (ப.பாலை. 287) அறிய முடிகிறது.
"சில்காற்றிசைக்கும் பல்புழை நல் இல்' (மதுரைக் 358) என மதுரைக் காஞ்சி, காற்று வருவதற்குரிய துளைகளோடு கூடிய வீடுகள் அமைந்திருந்தமையைக் காட்டுகிறது.
வீடுகளுக்குள் காற்று வருமாறு பலகணிகள் பலவற்றை அமைத்திருந்தனர் என்பதை "வேனிற் பள்ளித் தெண்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளை' (நெடுநல்.61-62) என்ற தொடர் உணர்த்துகிறது.
இவ்வாறு காற்றும் நீரும் வருமாறும், வெளியேற்றுமாறும் வீடுகளைப் பழந்தமிழர் கட்டியிருந்தமை அவர்களது தொழில்நுட்ப அறிவின் - நாகரிக வாழ்க்கையின் அடையாளம்தானே!
-யாழ் சு.சந்திரா