முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -40

நம் முன்னோர்கள் உலகம், உயிர், இறைவன் குறித்து எழுதிவைத்துள்ள அரிய செய்திகளைப் படிக்கும்போது இன்று இருப்பதுபோல் சோதனைக் கூடங்களோ, அறிவியல் கருவிகளோ இல்லாத காலத்தில் எவ்வாறு இவர்களால் இவற்றையெல்லாம் இப்படித் துல்லியமாகக் கண்டறிந்து சொல்ல முடிந்தது? எல்லாம் இறையருளால் கிடைத்த உள்ளொளி போலும்! என்று மூக்கின்மேல் விரலை வைக்க வேண்டியிருக்கிறது.

Updated On : 27 டிசம்பர், 2015 at 2:44 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:24 PM

நம் முன்னோர்கள் உலகம், உயிர், இறைவன் குறித்து எழுதிவைத்துள்ள அரிய செய்திகளைப் படிக்கும்போது இன்று இருப்பதுபோல் சோதனைக் கூடங்களோ, அறிவியல் கருவிகளோ இல்லாத காலத்தில் எவ்வாறு இவர்களால் இவற்றையெல்லாம் இப்படித் துல்லியமாகக் கண்டறிந்து சொல்ல முடிந்தது? எல்லாம் இறையருளால் கிடைத்த உள்ளொளி போலும்! என்று மூக்கின்மேல் விரலை வைக்க வேண்டியிருக்கிறது.

இவ்வுலகம் இருபத்துநான்கு உண்மைப் பொருள்களால் (தத்துவங்களால்) உருவாகியது. அவை மூலப்பகுதி ஒன்று; மான் (அறிவு),

முனைப்பு (அகங்காரம்), மனம் என்னும் மூன்று; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் ஐந்து; கை, கால், வாய், எருவாய், கருவாய் என்னும் தொழிலுறுப்புகள் ஐந்து; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் நுண்பொருள்கள் (தன்மாத்திரைகள்) ஐந்து; விண், மண், அனல், புனல், காற்று என்னும் பருப்பொருள்கள் ஐந்து என்பது சாங்கியர் கோட்பாடு. இதனை, 27ஆவது குறளுரையில் பரிமேலழகர் விளக்கியுள்ளார். இவ்வுண்மைப் பொருள்களைச் சைவம் ஆன்ம தத்துவம் என்றும், வைணவம் அசித் தத்துவம் என்றும் குறிக்கின்றன. "இவற்றை ஓதியிடும் நாலாறும் உற்றுஆன்ம தத்துவமென்று ஆதி அருள்நூல் அறையும்காண்' என்கிறார் மனவாசகங்கடந்தார். "இருபத்துநான்கு உண்மைப்பொருள்களால் ஆகியதாய் (சதுர்விம்சதி தத்வாத்மிகையாய்) இருக்கும் உலகம் (ப்ரக்ருதி)' என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

Advertisement

இவற்றுள் ஐம்பருப்பொருள்களின் தன்மைகளைச் சாத்திர நூல்கள் விளக்கும்போது, மண்ணின் இயல்புகளாகத் திண்மை, தாங்கும் தன்மை, நாற்கோண வடிவம், மணம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. இத்தன்மைகளுள் மணம் மண்ணின் நுண்ணிய நிலை என்று கூறுவது வியப்பினை அளிக்கிறது. மண், அம் இரண்டும் கூடி மணம் என்றாகி, மண்ணிலிருந்து புலப்படுவது என்று பொருள்படுகிறது என்கிறார் தொண்டை மண்டல மடத்தின் தலைவர் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள். இதனால்தான் மண்ணிலிருந்து தோன்றும் மலர்களில் பல மணத்தோடு இருக்கின்றன.

தட்பவெப்ப நிலை இயல்பாக இருக்கும்போது மண்ணின் மணம் வெளிப்படுவதில்லை. ஆனால், கடுங் கோடைக் காலத்தில் நிலம் சூடேறிக் கிடக்கும் வேளையில் முதல் மழை பெய்யும்பொழுது மண்ணிலிருந்து மணம் வீசுகிறது. அது தலைப்பெயல் தரும் இனிய மணம். இந்த மணத்தையே ஆங்கிலத்தில் டங்ற்ழ்ண்ஸ்ரீட்ர்ழ் என்பர். இவ்வரிய சொல் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரமுதலியில் இன்னும் இடம் பெறவில்லை. வாசகர்கள் கொடுத்துள்ள தமிழாக்கம் வருமாறு:

என். ஆர். ஸத்யமூர்த்தி மழைத்துளி மணம் என்றும், பா. இரா. இராசஅம்சன் உலர்மண் மழைவாடை என்றும், சந்திரா மனோகரன் முதல்மழை வாசம் என்றும் எஸ். சுரேஷ் மண்மணம், கல்மணம் என்றும் கூறலாம் என்கின்றனர். இவற்றுள் வாடை இந்நாளில் கெட்ட நாற்றத்தைக் குறிக்கிறது. வாசம் வடசொல். கா.மு. சிதம்பரம், "பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்து' என்ற பெரும்பாணாற்றுப்படைத் தொடரையும், "பெய்கின்ற மழை தூற்றலால் நிலத்தின்கண் எழுந்த ஆவி சூழ்ந்த மலை' என்று நச்சினார்க்கினியர் உரையையும் காட்டிப் பொழிவுப் புகை அல்லது தூறல் மணம் எனலாம் என்கிறார். பொழிவும் தூறலும் மழையையே குறிக்கும். இது புகையன்று. கோ. மன்றவாணன் மழைமணம், முதல்மழை மணம், மழைதரு மண்மணம் என்னும் சொற்களையும், ஆசுகவி ஆராவமுதன் மழைமணம், மண்மணம், கோடை மழைமணம் ஆகிய சொற்களையும் தந்துள்ளனர். கோ. தமிழரசன் மழைமணம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு சொல்லின் எல்லாத் தன்மையும் புலப்படுமாறு தமிழாக்கம் செய்ய இயலாது. இம்மணம் மலையைவிட மண்ணிலிருந்தே பெரிதும் வெளிப்படும். மண்ணிலிருந்து வந்தாலும் மழைபெய்தால் மட்டுமே உண்டாகும். அதுவும் முதல்மழையின் போதுதான் எழும். ஆதலின் கல்மணம், மண்மணம் என்பவற்றை விடுத்து, மழையை முதன்மையாகக் கொண்டு மழைமணம் எனலாம். மழைமணம் என்பது மழையால் உண்டாகிய மணம் என்று விரியும். அதன் விளக்கமே மழைதரு மண்மணம், உலர்மண் மழை வாடை என்பன.

இந்த மணத்தைப் பற்றிய அரிய குறிப்பு பரிபாடலில் (20) காணப்படுகிறது. ""கருமேகம் மலைத்தொடரைச் சூழ்ந்தது; கடல் குறையும்படி உண்ட நீரை மலை சிதறும்படி இடிமுழக்கத்தோடு பொழிந்தது. புலியோடு போரிட்டு அதனைக் கொன்ற யானையின் கொம்புகளில் படிந்திருந்த குருதிக்கறையைக் கழுவியது. காலையில் கடலில் படிந்து, கதிரவன் மறைந்த மாலையில் மலையைச் சார்ந்து, மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இரவில் பொழிந்த மழையால் மரங்களில் இருந்த மலர்கள் மணம் வீசின; செடிகொடிகளில் பூத்த தேன்மலர்கள் மணம் வீசின; மரக்கிளைகளிலிருந்து உதிர்ந்த கனிகள் மணம் வீசின. கொடிய வெயிலையும் கடுங்காற்றையுமுடைய காட்டிலிருந்து ஒருவகை மணம் வீசியது. அந்த மழையையும் பல்வேறு மணத்தையும் சேர்த்துக்கொண்டு வந்து மதுரை மக்களுக்கு வழங்குகிறது வைகை'' என்கிறார் நல்லந்துவனார்.

இங்கே காடு தந்த மணம், "செறுவெயில் உறுகால கான்ஆற்றும் கார்நாற்றம்' என்று குறிக்கப்படுகிறது. இதற்கு உரை எழுதியவர்கள் இந்த நாற்றத்தை வெங்கார் மணம் என்று குறித்துள்ளனர். கார் நாற்றம் என்பது இலக்கிய வழக்கு. அதனினும் எளிய வழக்கு வெங்கார் மணம் என்பது. ஆதலின் வெங்கார் மணம் எனலாம்.

Petrichor- வெங்கார் மணம் அல்லது மழை மணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.