முகப்பு
தமிழ்மணி

எல்லை - எல்லி - எல்லு!

"எல்' என்ற சொல், ஒளி, பகல், கதிரவன் ஆகிய பொருள்தரும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பழந்தமிழர், "எல்' என்ற இச்சொல்லை வேர்ச் சொல்லாகக்கொண்டு, நாளின் முப்பொழுதுகளுக்கும் பெயர்களை வழங்கியுள்ளனர். பகற்பொழுதைக் குறிக்க, "எல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்தியமையை,

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

"எல்' என்ற சொல், ஒளி, பகல், கதிரவன் ஆகிய பொருள்தரும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பழந்தமிழர், "எல்' என்ற இச்சொல்லை வேர்ச் சொல்லாகக்கொண்டு, நாளின் முப்பொழுதுகளுக்கும் பெயர்களை வழங்கியுள்ளனர். பகற்பொழுதைக் குறிக்க, "எல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்தியமையை,

எல்லை சென்றபின் மலருங் கூம்பின'(நற்.385:1)

எல்லை கழிய முல்லை மலரக் (குறு.387:1)

எல்லையு மிரவு மென்னாது கல்லென (அக.20:14)

எல்லையு மிரவும் வினைவயிற் பிரிந்த (அக.299:1)

எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி (பெரு.279)

என இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

"எல்லி' என்ற சொல் இரவுப்பொழுதின் ஒரு கூறான அதாவது, கதிரவன் மறைந்து இருள் சூழத்தொடங்கிய பொழுதைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளதை,

""எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு

பரியல் வாழி நெஞ்சே (நற்.121:6) என நற்றிணைச் செய்யுளில், தேர்ப்பாகன் தலைவனிடம் உரைத்த கூற்று பதிவாகியுள்ளது. அதாவது, "வேந்தன் எல்லிப் பொழுதில் தலைவனை அவன் ஊருக்குச் செல்லுமாறு விடுத்தமையால், கதிரவன் மறையும் பொழுதுசாய்ந்த அவ் எல்லிப் பொழுதிற்குப் பின் தம் ஊருக்குச் செல்வதுவும் தலைவியைக் காண்பதுவும் இயலக்கூடியது அன்று' எனத் தலைவன் வருந்தி நின்றான். அவன் நிலையைக் கண்ட தோழனான தேர்ப்பாகன் குதிரைகளைக் கான்யாற்றங்கரை வழி மிக விரைவாகச் செலுத்தி, எவ்விருந்து (உயர்ந்த விருந்து) அயரும் தலைவியிடம் இரவே கொண்டு சேர்ப்பேன் என ஆறுதல் கூறுகிறான். "எல்லி' என்பது இருள்சூழத் தொடங்கிய பொழுது என்பதை இவ்வடிகள் உணர்த்துகிறது.

மேலும், வேறு ஒரு நற்றிணைச் செய்யுள், "எல்லியு மிரவு மென்னாது கல்லெனக்' எனக் குறிப்பிட்டு, எல்லியும் இரவும் வெவ்வேறு பொழுதுகள் என்ற செய்தியை உணர்த்துகிறது.

எல்லி மலர்ந்த பைங்கொடி யதிரல் (அக.157:5)

பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே (மலை.416)

என்னும் செய்யுளடிகளும் "எல்லி' என்பது கதிரவன் சாய்ந்த பொழுது என்பதைக் காட்டுகின்றன. அவ்வாறெனில் தமிழர் இரவுப்பொழுதைக் குறிக்க எச்சொல்லைப் பயன்படுத்தினர்? எல் எனும் சொல் இரவு எனும் பொருளில் எங்கேனும் கையாளப்பெற்றுள்ளதா? ஆம்!

எல்லுமுய லெறிந்த வேட்டுவ னஞ்சுவல (நற்.59:3)

எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர் (அக.340:19)

எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம் (புற.16:7)

என்னும் பாடலடிகள் மூலம் இரவுப்பொழுதைக் குறிக்கப் பழந்தமிழர், எல்லு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளமையை அறியமுடிகிறது. வேட்டுவன் இரவில் முயல் வேட்டைக்குச் சென்ற நிகழ்வையும், பரதவர், இரவில் மீன் வேட்டைக்குக் கடலுக்குச் சென்ற நிகழ்வையும் கூறும் சொற்றொடர்களும், வேந்தன் பகை நாட்டைத் தீயிட்டுக் கொளுத்தியமையால் இரவின் இருள் கெடுமாறு சுடுதீ விளக்கம் காணப்பெற்ற நிகழ்வைக் கூறும் செய்யுளடியும் எல்லு என்ற சொல் இரவுப்பொழுதுக்கான பழந்தமிழ்ப் பெயரீடு என்பதையும் முறையே காட்டுகின்றன.

மேலும், இரவு நேரங்களில், கடைத்தெருக்களில் விளக்குகள் பல ஒளிபரப்பிய காட்சியானது "எல் உமிழ் ஆவணத் தன்ன' என அகநானூற்றில் (227:21) பதிவு செய்யப்பெற்றுள்ளது. எல் எனும் சொல்லை இரவு விளக்குகள் உமிழ்ந்த ஒளியைக் குறிக்கவும், பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளமையை இவ்வடி தெரிவிக்கிறது. ஊரே துயில்கொள்ளும் நள்ளிரவு வேளையில், எவ்வித விளக்கு ஒளியும் இன்றி ஊரடங்கிக் காணப்பெற்ற நிலையை "எல்லும் எல் இன்று' என்ற தொடரால் பல இடங்களில் புலவர்கள் விளக்கியுள்ளனர். அவற்றுள் சில அடிகள்:

எல்லும் எல்லின்று ஞமலியு மிளைத்தன (குறு.179:2)

எல்லும் எல்லின்று பாடுங் கேளாய் (குறு.390:1)

எல்லும் எல்லின்று அசைவுமிக வுடையேன் (அக.110:10)

ஆக, பழந்தமிழகத்தில் பகற்பொழுதைக் குறிக்க எல்லை என்ற சொல்லும், கதிரவன் மறைந்து இருள்சூழத் தொடங்கிய பொழுதினைக் குறிக்க எல்லி என்ற சொல்லையும், இரவுப்பொழுதைக் குறிக்க எல்லு என்ற சொல்லும் பயன்படுத்தப்பெற்றுள்ளன என்பதை அறியமுடிகிறது.

-முனைவர் வாணி அறிவாளன்

முழு கட்டுரையைப் படிக்க →