முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -28

கல்வியே மனிதனுக்குக் கண். காக்கைக்கு இரவில் கண்தெரியாது; கூகைக்குப் பகலில் கண்தெரியாது; கல்லாதவனுக்கோ இருவேளைகளிலும் கண்தெரியாது என்று கல்லாமையின் புன்மையைத் தெரிவிக்கிறது

Updated On : 4 அக்டோபர், 2015 at 12:55 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:22 PM

கல்வியே மனிதனுக்குக் கண். காக்கைக்கு இரவில் கண்தெரியாது; கூகைக்குப் பகலில் கண்தெரியாது; கல்லாதவனுக்கோ இருவேளைகளிலும் கண்தெரியாது என்று கல்லாமையின் புன்மையைத் தெரிவிக்கிறது ஒரு வடமொழிக் கவிதை. விண்ணுக்கு அணிகலன் வெண்ணிலா; பெண்ணுக்கு அணிகலன் நற்கணவன்; மண்ணுக்கு அணிகலன் மாமன்னன்; மற்றையோர்க்கு அணிகலன் கல்வி என்று கல்வியின் நன்மையைப் போற்றுகிறது மற்றொரு கவிதை.

நம் முன்னோர்கள் கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தார்கள். அதனால், ஆசிரியர்களைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்கிறார் அதிவீரராம பாண்டியர். முன்னாளில் கல்விச்சாலைகளைத் தோற்றுவித்தல் ஓர் அறமாகப் போற்றப்பட்டது. ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் என்று செல்வர்கள் தங்கள் உடைமைகளைக் கல்வி நிலையங் களுக்குக் கொடையாக எழுதிவைத்துச் சென்றார்கள். ஆனால், இன்றைய கல்விநிலை என்ன?

திரையரங்குகளையும் சாராயக்கடைகளையும்விட எளிதில் பணம் பண்ணலாம் என்ற கருத்தில் பலர் கல்வி நிலையங்களைத் தோற்றுவித்துள்ளனர். இன்று புனித கல்விக்கூடங்கள் பொருளீட்டும் வணிகக் கூடங்களாகிவிட்டன. ஆசிரியர் நியமனத்தில் பல இலட்சம்! மாணவர் சேர்ப்பில் பல கோடி! இதை யார்க்கு எடுத்துரைப்பது? யாரொடு நோவது? எல்லாம் ஊரறிந்த இரகசியம்.  Capitation Fee  எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் வரை! எம்.பி.பி.எஸ்ஸுக்கும் எம்.டிக்கும் ஒருகோடிக்கு மேல். கோடிக்கணக்கில் கொட்டி பட்டம் பெறுபவர்கள் எப்படி நேர்மையாக இருக்க முடியும்? செலவிட்ட பணத்தை வட்டியும் முதலுமாகப் பிடிக்க வேண்டாமா? நாளைய ஊழலுக்கு இன்றைய கல்விச் சாலைகளில் நடவு வேலை நடக்கிறது!

Advertisement

இந்த ஆதங்கம் பலர் உள்ளங்களில் கனன்று கொண்டிருப்பது சில மொழியாக்கத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. Capitation Fee என்பதை என். ஆர். ஸத்யமூர்த்தி கல்விக் கொள்ளை, கல்வி ஊழல் என்றும், ப.இரா. இராசஅம்சன் தகுதிக்கொலை வரி, நற்கூறு அழிப்புக்கொடை என்றும் குறித்துள்ளனர். இவை உணர்ச்சியின் வெளிப்பாடு; இக்கட்டணத்தால் விளையும் கேடுகளைப் புழுக்கத்தோடு சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இச்சொற்களைப் பயன்படுத்தல் இயலாது. இத்தொகையினைக் கல்விநிலையங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களுக்கு மேலாக மாணவரைச் சேர்த்துக்கொள்வதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வாங்கும் கட்டணம் என்று 2010இல் இயற்றப்பட்ட சட்ட வரைவு தெரிவிக்கிறது.

*இரா. வேதநாயகம் - முதலீட்டுக்கட்டணம்

* ராஜசிம்மன் - தனிநபர் கல்விக்கட்டணம்

* நா. கிருஷ்ணவேலு - நபர் வரிக்கட்டணம்,

  சீரான கட்டணம்.

* ப.இரா.இராசஅம்சன் - நுழைவுக்கட்டணம்

* கா.மு. சிதம்பரம் - தலைக்கட்டுவரி, நன்னெறிக்

  கட்டணம், உற்றுழிக்கட்டணம்.

* சந்திரா மனோகரன் - தலைவரி, ஆள்வரி, தலைவரிக்

  கட்டணம்.

*கோ. மன்றவாணன் - தலைக்கட்டணம், முதல்

  கட்டணம், ஆள்கட்டணம்.

* வெ.ஆனந்தகிருஷ்ணன் - தலைவீதக் கட்டணம்

என்பன இச்சொல்லுக்கு வாசகர்கள் தந்துள்ள தமிழாக்கங்கள். அரசாங்கம் விதிப்பதும் அதற்குச் செலுத்த வேண்டுவதும் வரி. அதனால் இதை வரி என்பதனினும் கட்டணம் என்பதே சரி. யாரும் மனமுவந்து கொடுக்காத இதனை நன்கொடை என்பது காராட்டை வெள்ளாடு என்பதுபோல் மங்கல வழக்காகவே அமையும்.

இது கல்வி நிலையங்களில் சேர்வதற்கு முன்னே முதலாவதாகச் செலுத்தப்படும் கட்டணம். இதன் பின்னே எத்தனையோ கட்டணங்கள் பருவங்கள்தோறும் தொடர்ந்து செலுத்த வேண்டும். அதனால், இதைத் தலைக்கட்டணம் என்றோ, கல்விநிலையத்தில் நுழைவதற்கு முன்னே வசூலிக்கப்படும் கட்டணம் என்பதால் வாயில் கட்டணம் அல்லது நுழைவுக் கட்டணம் என்றோ குறிக்கலாம் என்று முடிவுசெய்திருந்தேன். இம்முறை ப. இரா. இராசஅம்சனும் கோ. மன்றவாணனும் அச்சொற்களையே பரிந்துரைத்து, என் பணியை எளிமையாக்கிவிட்டிருக்கிறார்கள். தலைவரி, தலைக்கட்டு வரி என்பனவும் இத்தமிழாக்கத்திற்கு உறுதிசேர்க்கின்றன.

 Capitation Fee  - தலைக்கட்டணம் அல்லது நுழைவுக்கட்டணம்

அடுத்த வாரத்திற்குரிய சொல்: Bull dozer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.