முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -30

அந்தத் திருமடத்தில் புலவரவை கூடியது. அதில் கடைமடை என்னும் ஊரிலிருந்து புலவர் ஒருவர் கலந்துகொள்ள வந்தார். அவர் சரியான நேரத்திற்கு வாராமல் சற்றுப் பிற்பட்டு வந்தார். அவரிடம் சிறிது கல்விச்செருக்கும் உண்டு. அதனால், அவரை மட்டம்தட்டும் போக்கில் குத்தலாக 'வாரும் கடைமடையரே' என்றார் மடத்தின் தலைவர்.

Updated On : 18 அக்டோபர், 2015 at 12:46 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:29 PM

அந்தத் திருமடத்தில் புலவரவை கூடியது. அதில் கடைமடை என்னும் ஊரிலிருந்து புலவர் ஒருவர் கலந்துகொள்ள வந்தார். அவர் சரியான நேரத்திற்கு வாராமல் சற்றுப் பிற்பட்டு வந்தார். அவரிடம் சிறிது கல்விச்செருக்கும் உண்டு. அதனால், அவரை மட்டம்தட்டும் போக்கில் குத்தலாக "வாரும் கடைமடையரே' என்றார் மடத்தின் தலைவர்.

கடைமடையர் என்பது கடைமடை என்னும் ஊரைச் சார்ந்தவர் என்பதனோடு "அடிமுட்டாள்' என்னும் பொருளையும் காட்டும். அதற்குப் புலவர், "வருகிறேன் மடத்தலைவரே' என்றார். மடத்தின் தலைவர் என்பதனோடு "முட்டாள் தலைவர்' என்னும் பொருளும் அதில் அடங்கியிருக்கிறது. எந்த வேகத்தில் அடி விழுந்ததோ அதே வேகத்தில் எதிரடி!

ஆங்கில நாட்டின் தலைமையமைச்சராய் இருந்தவர் சர்ச்சில். சிறந்த நாடகாசிரியராய்த் திகழ்ந்தவர் பெர்னாட் ஷா. இருவரும் கிண்டலுக்கும் குத்தல் பேச்சுக்கும் பெயர் பெற்றவர்கள். பெர்னாட் ஷா தமது நாடகமொன்று அரங்கேறியபோது, சர்ச்சிலுக்கு இரண்டு நாடகச் சீட்டுகள் அனுப்பினார், ஒரு குறிப்போடு. "ஒன்று உங்களுக்கு; மற்றொன்று உங்கள் நண்பருக்கு, அப்படி ஒருவர் உங்களுக்கு இருந்தால்...' என்பதே அக்குறிப்பு. அதனைப் பெற்ற சர்ச்சில், "இம்முறை நாடகத்தைப் பார்க்க வர இயலாது. அடுத்த முறை வருகிறேன், அப்படி மறுமுறை நாடகம் நடந்தால்...' என்று மாற்றம் தந்தார். பெர்னாட் ஷாவின் சொற்களில் எவ்வளவு குத்தல் இருந்ததோ அவ்வளவு சர்ச்சிலின் சொற்களிலும் குத்தல்!

Advertisement

சட்டசபையில் அண்ணாவைப் பார்த்து மாற்றுக்கட்சியைச் சேர்ந்த விநாயகம், ""உங்கள் வாழ்நாள் எண்ணப்பட்டுவிட்டது'' (Your days are numbered)  என்றார். சிரித்துக்கொண்டே, ""அதனால்தான் நிதானமாக நடக்கிறேன்'' (My steps are measured) என்றார் அண்ணா. ஆத்திரத்தை அமைதியாக அறிவால் வென்று புறங்கண்ட விடை இது!

"காப்பியத்தின் இலக்கணம் என்ன?' என்றால், நீண்ட விளக்கம் தாராமல் இலியட் போன்றிருப்பது என்று திறனாய்வாளர்கள் தெரிவிப்பார்கள். அதுபோல மேலே காட்டியவைபோல் அமைவது Repartee எனலாம். அஃது உடனடிப் பதிலாக வரும் அறிவுநுட்பத்தைக் காட்டும்; நெற்றியடிபோல் தாக்கும். கிரிக்கெட் ஆட்டத்தில் வேகமாக வீசப்பட்ட பந்தினை அதே வேகத்தில் திருப்பி எல்லைக் கோட்டைக் கடந்து செல்லும்படி திறமையாக அடிப்பதுபோல அமைவதாகும்.

* அ. கோவிந்தன் - அறிவார்ந்த பதில், செம்மைசேர் பதில்

* எஸ். சுரேஷ் - ஏற்கத்தக்க பதிலுரை, ஏற்கத்தக்க பேச்சு.

* ராஜசிம்மன் - சாதுர்ய பேச்சு

* டி.வி. கிருஷ்ணசாமி - துல்யமான பதில்

* வ.ம. கோட்டிஸ்வரன் - ஆன்ற விடை, பக்குவ பதில்.

* கா.மு. சிதம்பரம் - பிடித்தெறி மொழி, பிடித்தோச்சு மொழி

* ப.இரா. இராச அம்சன் - உடனெதிர் மொழி, நுண்மாண் மறுமொழி

* சந்திரா மனோகரன் - உடனெதிர் மொழி, உடனெதிர் பதில்

* மன்றவாணன் - மடக்குரை, வெட்டுரை, எதிர் வாதுரை

* சோலை கருப்பையா - தக்கபதிலடி

* என்.ஆர். ஸத்யமூர்த்தி - பதிலடி, விடையடி, மறுவடி, எதிரடி

* சோ.முத்துமாணிக்கம் - கூர்அறிவு விடை, திறன்சார் விடை

* சி.இராமச்சந்திரன் - உடன்பதில், தக்கபதில்

* வெ. ஆனந்த கிருஷ்ணன் - உடனெதிர் மொழி, எதிருரை.

போன்ற சொற்களால் இதனைக் குறிக்கலாம் என்கின்றனர். இவற்றில் அறிவார்ந்த பதில், நுண்மாண் மொழி என்பவை அப்பேச்சு அறிவார்ந்தது என்பதையும் பிடித்தெறி மொழி, பிடித்தோச்சு மொழி, உடனெதிர் மொழி என்பவை உடனடியாகத் தரப்படும் மாற்றம் என்பதையும் மடக்குரை, வெட்டுரை, எதிரடி என்பவை அதன் கடுமையையும் முதன்மைப்படுத்துகின்றன. இம்மூன்று தன்மைகளில் கடுமை மேலோங்கியிருத்தலே அதன் தனித்தன்மை ஆகும்.

மலையாள அகரமுதலி இதனை மறுமொழி (ப்ரத்யுத்தரம்) சரியான பதில் (தக்கனாய உத்தரம்) சுட்ட மறுபடி என்று குறிக்கிறது. நெடுநாள்களுக்கு முன் இதுகுறித்து எழுதப்பட்டிருந்த ஒரு மலையாளக் கட்டுரையில் இதனைத் "தாக்குத்தரம்' என்று அதன் ஆசிரியர் மொழியாக்கம் செய்திருந்தார். அம்மொழியாக்கம் மடக்குரை, வெட்டுரை, எதிர் வாதுரை ஆகிய அனைத்தின் பொருளையும் காட்டுவதாய் அமைந்துள்ளதால், அதனையொட்டித் "தாக்குரை' எனலாம். இல்லையெனில் பதிலடி, எதிரடி இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டுக்கும் பொருள் ஒன்றே. பதிலடி என்பதனினும் எதிரடி நல்ல சொல். எதிரடி என்னும் சொல்லில், "எதிர்' என்பது ஒருவர் சொன்னதற்கு எதிராக அமைவது என்பதையும், "அடி' என்பது கடுமையான சொல் என்பதையும் காட்டி இதன் இரு தன்மைகளைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறது. "பாட்டுக்கு எதிர்ப்பாட்டு' என்றும், "அவன் பேச்சுக்கு இவன் பேச்சு செம அடி' (செம்மையான அடி) என்றும் குறிக்கும் வழக்கம் உள்ளது. ஆதலின் எதிரடி என்றும் குறித்தல் தகும்.

Repartee- தாக்குரை அல்லது எதிரடி

அடுத்த வாரத்திற்குரிய சொல் : சாலைகளில் பதித்து

வைத்திருக்கும் ஒளிரும் பொருளைக் குறிக்கும்  Reflector

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.