உலகம் விளம்பரத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினாலும் மிகையாகாது. மனித வாழ்வில் விளம்பரம் அந்த அளவிற்கு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சங்க காலம் முதற்கொண்டே விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதனைச் சான்றுகள் காட்டுகின்றன. அந்த வகையில் விளம்பரம் மட்டுமன்றிப் பல துறைகளின் வளர்ச்சிக்கான அடித்தளமாகச் சங்க இலக்கியங்கள் இருந்து வருகின்றன.
நடு கற்கள்
போர்களில் வீர மரணம் எய்திய வெற்றி வீரர் பெயரையும் சிறப்புகளையும் கல்லில் பொறித்து, அதனை நாட்டி வழிபடும் வழக்கம், பழந்தமிழ் நாட்டில் இருந்துள்ளதைத் தொல்காப்பியமும் பாட்டு, தொகை நூல்களும் குறிப்பிடுகின்றன. நடுகல்லில் வீரனின் பெயர், உருவம், வீரத்தின் சிறப்பு பற்றி எழுதிப் பிறருக்குத் தெரியப்படுத்துவது என்பதும் விளம்பரத்தின் ஒரு கூறாகக் கொள்ளலாம். தனக்குத் தெரிந்த ஒரு செய்தியைப் பிறருக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருப்பதே விளம்பரம்தான் எனலாம். எனவே நடுகல்லின் மூலம் வீரனின் பெருமைகளைத் தெரியப்படுத்துவதும் விளம்பரத்திற்கான அடிப்படைதான் எனலாம். இது குறித்துத் தொல்காப்பியமும் (தொல். பொருள். இளம்.புறத்.நூ.5), அகநானூறும் (அகம். 131.10-11), புறநானூறும் (புறம்.264) குறிப்பிடுகின்றன.
பறை
ஆரியக் கூத்தர் கழையிற்கூடியக் கயிற்றின் மேல் நின்று ஆடும்போது கொட்டப்படுகின்றப் பறையைப் போல, மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுக்கள் ஒலிப்பதற்கு இடமாகிய பாலை நிலத்தை கடந்து செல்லும் தலைவன் காலில் வீரக்கழல்கள் உள்ளன. தலைவி சிலம்பு அணிந்துள்ளாள். இவர்கள் இரங்கத்தக்கவர்கள் என்பதை,
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல்.. ... ... ...
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கு
எனும் இக்குறுந்தொகைப் (7:2-4) பாடலில் பறை அறிவிக்கும் செய்தியும், கயிற்றின்மேல் ஆரியக் கூத்தர் ஆடுவதை விளம்பரப்படுத்துவதாக உள்ளது விளம்பரத்திற்கான கூறே எனலாம்.
ஆற்றுப்படை நூல்களில் விளம்பரக் கூறுகள்
பத்துப்பாட்டினுள் ஐந்து பாட்டுக்கள் ஆற்றுப்படை பற்றியன. இவற்றுள் பொருநராற்றுப்படை கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியர் பாடியது. பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படையில் பாணன் தன் கூட்டத்தாருடன் நடந்து செல்வது, விறலியின் வறுமை, பாலை வழியின் வெம்மை, மூவேந்தர்கள் வலிமை குன்றியது, ஏழு வள்ளல்களும் இல்லாத நிலை, நல்லியக் கோடன், அவன் நகரான மாவிலங்கையின் சிறப்பு, ஈகை, வீரம், அவனைப் பாட வேண்டிய முறை பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசில் பெற்ற சிறுபாணன் ஒருவன் பரிசில் பெற விழைகின்ற சிறுபாணனை ஆற்றுப்படுத்துவது விளம்பரம் உருவாவதற்கான அடிப்படைக் கூறே எனலாம்.
முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி என்பது பிணங்களை ஓரிடத்தில் திறந்த வெளியில் இட்டு வைத்து சதைகள் அழிந்த பின் எலும்புகளைத் தாழியில் இடுவர் என்பதும், பிணங்களை எரித்து எஞ்சிய சில எலும்புகளைத் தாழியில் இடுவர் என்பதும் ,
சுட்டசாம்பலின் ஒரு பகுதியைத் தாழியில் இடுவர் என்பதும் அகழ்வாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. இருப்பினும், மிகவும் வயோதிகர்களை இறுதி நாள்களில் உயிருடனே தாழியில் இருக்கச் செய்து உணவும் தண்ணீரும் வைப்பர் என்ற மரபுவழிச் செய்திகளும் நிலவுகின்றன. நற்றிணை, மா இருந்தாழி (271) என்றும், அகநானூறு, ஓங்கு நிலைத்தாழி (275) என்றும், புறநானூறு, கண்ணகள் தாழி (228) என்றும் முதுமக்கள் தாழி குறித்தத் தொடர்களைக் கொண்டுள்ளன. முதுமக்கள் தாழி வனைவோர் "கலம் செய்கோ' எனப்பட்டனர். இவர்களுள் ஒருவர் "மூதூர்க்கலம் செய்கோ' எனப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டார் என்பதையும் இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்பதையும் முதுமக்கள் தாழியில் வைக்கப்படுவோர் காட்டப்படுகின்றனர். இவரது நிலையை உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவிப்பாக, செய்தியாக இது அமைந்துள்ளது. எனவே, இதையும் ஒரு விளம்பரக் கூறாகக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.