முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -46

இயற்கையின் அமைப்பைக் குலைக்காத வரை அறிவியல் வளர்ச்சி உயிர்க்குலத்தை வாழ்விக்கும் வரம். ஆனால், அதனைக் குலைக்க முற்படும்போது உயிர்க்குலத்தையே பூண்டோடு அழித்துவிடும் வசை. தாயின் மடியாய் இன்பம் தந்த இயற்கை அப்போது பேயின் சீற்றமாய் ஆறாத் துயர்க்கடலில் ஆழ்த்திவிடும்.

Updated On : 7 பிப்ரவரி, 2016 at 3:18 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 9:58 PM

இயற்கையின் அமைப்பைக் குலைக்காத வரை அறிவியல் வளர்ச்சி உயிர்க்குலத்தை வாழ்விக்கும் வரம். ஆனால், அதனைக் குலைக்க முற்படும்போது உயிர்க்குலத்தையே பூண்டோடு அழித்துவிடும் வசை. தாயின் மடியாய் இன்பம் தந்த இயற்கை அப்போது பேயின் சீற்றமாய் ஆறாத் துயர்க்கடலில் ஆழ்த்திவிடும்.

விண், மண், அனல், புனல், வளி ஆகிய ஐந்து பருப்பொருள்களின் கூட்டுக்கலவையால் உருவானவன் மனிதன். இன்று அவன் இரணியன்போல் அவற்றைத் தன் ஆளுகையின்கீழ் கொண்டுவர ஆசைப்படுகிறான்.

மண்ணுக்கு அடியிலும் விண்வெளியிலும் வளிமண்டலத்திலும் நிகழ்த்தப்படும் பல்வேறு சோதனைகள், நாடுகளின் மீது நிகழ்த்தும் குண்டுவீச்சு இவற்றால் இயற்கையின் பேரமைதி குலைகிறது. இதன் விளைவாக நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை, கடுஞ்சூறாவளி, புயல் ஆகியவை உண்டாகின்றன. முன்னாளில் எப்போதாவது நிகழ்ந்த இவை இந்நாளில் அடிக்கடி நிகழ்கின்றன. வருங்காலத்தில் கூடிக் கொண்டே போகும் என்கிறார்கள் அறிஞர்கள். அண்மைக் காலத்தில் இவற்றோடு Firenado  என்பதும் சேர்ந்துள்ளது.

Advertisement

Firenado  கடுமையான வெப்பமும் சீற்றமிக்க காற்றும் தம்மில் ஒன்றுசேர, ஒன்று மற்றொன்றை நோக்கி விரையும்போது உண்டாகிறது. இதன் மையம் (Vortex)  வெப்பத்திலிருந்து வெளிப்படும் பல்வேறு எரியக் கூடிய வளிகளைச் (gases)உறிஞ்சுகிறது. அவ்வளிகள் உயிர்வளி (Oxygen) நிறைந்த காற்றினோடு சேரும்போது தீப்பற்றிக் கொள்ள, தீச்சுழல்கள் வானில் கம்பம்போல் உயரமாக எழும்புகின்றன. இதன் மிகுந்த வெப்பம் சாம்பலைக் கூட மீண்டும் பற்றிக்கொள்ளச் செய்து தீச்சிதறல்களைப் பல மைல் தொலைவு பரப்ப வல்லது.

2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் ஒரு கிடங்கை மின்னல் தாக்கியதால், அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் பீப்பாய் சாராயம் அருகில் உள்ள நீர்நிலையில் சிதறியது. அதன் விளைவாக எழுந்த தீயோடு கடுங்காற்று சேர்ந்துகொள்ளத் தீக்கொழுந்துகள் பல நூறு அடிகள் எழுந்தன. அதன் கோர தாண்டவத்தில் எண்ணற்ற மீன்கள் நொடியில் வெந்து மாண்டன. நல்ல வேளை நிலத்தில் பரவவில்லை. பரவியிருந்தால், பல்லாயிரம் மனிதர்களைக் காவு கொண்டிருக்கும். ஆனால், 1923இல் நிப்பான் நாட்டில் நிலநடுக்கத்தை அடுத்து உண்டான Firenado சில மணித்துளிகளில் ஆயிரக் கணக்கான மக்களை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. இக்கேடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நிப்பான் முதலிய நாடுகளில் அதிகமாக நிகழ்கிறது.

இத்தகவல்களோடு இச்சொல்லுக்குரிய தமிழாக்கத்தைக் காணலாம். வெ. ஆனந்தகிருஷ்ணன் தீச்சுழி புயல் என்றும், ஆசுகவி ஆராவமுதன் தீப்புயல், தீச்சுழற்புயல், தீப்பேய்த்தேர் என்றும் குறித்துள்ளனர். புயல் என்னும் சொல் மழையையும் மேகத்தையுமே குறிக்கும். அதனால்தான் திருமாலைப் புயல்வண்ணன் என்பர். கடுங்காற்றைப் புயற்காற்று என்பதற்குக் காரணம் அது மழையோடு வீசுவதே. அதுவே புயல் என்று சுருங்கியது. ஆதலின் புயல் என்று முடியும் சொற்கள் பொருந்தா. பேய்த்தேர் கானல் நீரைக் குறிப்பதாகும்.

தி.அன்பழகன் எரிசுவாலை, எரிக்கொழுந்து என்றும், சந்திரா மனோகரன் நெருப்புத் தூண், தீப்பேய் என்றும் குறித்துள்ளனர். இவற்றில் காற்றின் சேர்க்கை பற்றிய குறிப்பு இல்லை. கா.மு.சிதம்பரம் சிவனின் ஓங்கிய தீ வடிவத்தைச் சிதம்பர புராணம், "நாக்கு முக்கூப்பீடு வளர்ந்து' என்று குறிக்கும் அரிய குறிப்பைத் தந்து, அதற்கு மூன்று "கூப்பீடு தூரம் தீ உயர்ந்து' என்பது பொருள் என்று காட்டி, நாக்கு என்ற சொல்லுடன் சுழன்றுயர் என்பதை இணைத்துச் "சுழன்றுயர் நாக்கு' எனலாம் என்கிறார். நாக்கு என்பது நடுப்பகுதி, (வாயில் உள்ள) நாவு என்றே பொருள்படும். அது தீயைக் குறிக்காது. மணிநா, தீநாக்கு என்றால்தான் மணியின் நாக்கையும் தீயின் நாக்கையும் குறிக்கும். எனவே, சுழன்றுயர் தீநாக்கு என்று வேண்டுமானால் கூறலாம்.

ப.இரா. இராசஅம்சன் குறித்துள்ள தீச்சுழலோட்டம், சுடுசூறாவளி; என்.ஆர்.சுரேஷ் காட்டியுள்ள பொங்கு சுழல்தீ, பொங்கு சுழலெரி ஆகிய சொற்களினும் தக்க சொற்களை என்.ஆர். ஸத்யமூர்த்தியும் கோ.மன்ற வாணனும் குறித்துள்ளனர். என்.ஆர். ஸத்யமூர்த்தி குறித்துள்ள பேய்த்தீ, சூறாவளித்தீ, சூறைத்தீ, தீச்சுழல் என்னும் சொற்களிலும் கோ. மன்றவாணன் அளித்துள்ள தீத்தாண்டவம், தீத்தூண், சூறைத்தீ, தீச்சுழல் என்னும் சொற்களிலும் இடம்பெற்றுள்ள சூறைத்தீயும் தீச்சுழலும் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் உள்ள எளிய சொற்கள். அவை முறையே சூறைக்காற்றோடு கூடிய தீ, தீயோடு கூடிச் சுழல்வது என்று பொருள்தரும். தீச்சுழல் என்பதனைத் தீச்சுழலி என்று இகர விகுதி சேர்த்து வழங்கினால் இன்னும் சிறப்பாக அமையும்.

Firenado - சூறைத்தீ அல்லது தீச்சுழலி.

அடுத்த வாரத்திற்குரிய சொல் :

அண்மைக்காலமாக வழங்கிவரும் Seenager

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.