சொல் தேடல் -47
காலம் நம் கையில் இல்லை; காலத்தின் கையில் நாம். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ""ஆறு பருவங்கள் வரும் மீண்டும் போகும், அழகு மதி பரிதி கண்ணாமூச்சி ஆடும்'' என்று அதன் ஓட்டத்தை அழகிய கவிதையாக்கியுள்ளார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
காலம் நம் கையில் இல்லை; காலத்தின் கையில் நாம். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ""ஆறு பருவங்கள் வரும் மீண்டும் போகும், அழகு மதி பரிதி கண்ணாமூச்சி ஆடும்'' என்று அதன் ஓட்டத்தை அழகிய கவிதையாக்கியுள்ளார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். ஒருநாள் வந்தோம்; ஒருநாள் செல்வோம் என்பதுவே வாழ்க்கையின் வாமன வரலாறு. இந்த வாழ்க்கையைப் பல்வேறு பகுதிகளாகப் பகுத்துக் கூறுகின்றனர் அறிஞர்கள்.
பாலனாய்க் கழிந்த காலத்திலும், இளைஞனாய்க் கழிந்த காலத்திலும், மூப்படைந்து கோலனாய்க் கழிந்த காலத்திலும் குறிக்கோள் இல்லாமல் கெட்டதாக "என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்னும் குறிக்கோளோடு வாழ்ந்த ஆளுடை அரசு தம்மைத் தாழ்த்திப் பேசிக்கொள்கிறார். இதில் அவர் வாழ்க்கையைக் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கிழப்பருவம் என்று மூன்றாகப் பகுத்துரைக்கிறார்.
அரங்கனை வணங்குவதற்கு வாய்ப்பு இல்லாத அறிவற்ற குழவிப்பருவம், குறும்பு செய்யும் பிள்ளைமைப் பருவம், சிற்றின்பத்தை நாடும் இளமைப் பருவம், இயலாமை நிறைந்த கிழப் பருவம் இவற்றைக் கொண்ட மனிதப் பிறவியை வேண்டேன் என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். இப்பாட்டு வாழ்க்கைப் பருவம் நான்கு என்கிறது.
Advertisement
தமிழ்ச் சான்றோர்கள் மூன்றாகவும் நான்காகவும் பகுத்துரைக்கும் வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பகுத்துரைக்கிறார் ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர். ""உலகம் நாடக அரங்கம்; அதில் ஆணும் பெண்ணும் ஒருகால் தோன்றி ஒருகால் மறையும் நடிகர்கள். இதில் ஒருவன் புனையும் கோலங்கள்தான் எத்தனை! பிறரை அண்டியிருக்கும் குழந்தையாக, சிணுங்கும் சிறுவனாக, காதற் கவிதை எழுதும் இளைஞனாக, போராடும் வீரனாக, நீதி உரைக்கும் அறவோனாக, தன்னைப் பற்றிய அக்கறையில்லாத முதியவனாக, புலன்கள் ஒடுங்கிய படுகிழவனாகத் தோன்றி மறைகிறான் என்பது "As you like it' ' என்னும் நாடகத்தில் வரும் பேச்சு.
இப்படி இவர்கள் வெவ்வேறாகப் பிரித்தாலும் எல்லாவற்றிலும் இளமையும் முதுமையும் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் பதின்மூன்றிலிருந்து பத்தொன்பது வயதுவரை உள்ள இளைஞர்களை teenager என்பர். இதற்குக் காரணம் இவ்வெண்கள் எல்லாம் teen என்று முடிவதேயாகும். இளமை மகிழ்ச்சி மிகுந்த பருவம். இதற்கு எதிரான பருவம் முதுமைப் பருவம். அது வாழ்க்கையின் மாலைக்காலம். அலுவலகத்தில் பணிபுரியும் பலர் ஓய்வுக்குப்பின் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதுபோல் சோர்ந்துவிடுவர். இதனாலேயே அவர்களில் பலர் ஓய்வுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரோ பின்னரோ இறந்து விடுகின்றனர் என்றும், பணி ஓய்வு என்பது இல்லாத தொழிலாளிகளும், உழவர்களும் வழக்குரைஞர்களும் நெடிது வாழ்கின்றனர் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாறாக முதியவர் சிலர் மூப்பினையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டு அதன் நன்மைகளை எண்ணி மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழிக்கின்றனர். ""நான் ஒரு "சீனேஜர்'. நான் பதின்ம வயதில் விரும்பியதை எல்லாம் அறுபது ஆண்டுகளுக்குப்பின் பெற்றிருக்கிறேன். யான் பள்ளிக்கோ பணிக்கோ போக வேண்டுவதில்லை. எனக்குக் கைச்செலவுக்குப் பணம் (ஓய்வூதியம்) இருக்கிறது. என்னோடு பழகுவதற்குப் பெண்கள் தயங்குவதில்லை'' என்று முதுமையை உடன்பாடாகப் பார்க்கும் ஒரு கட்டுரைகூட வெளிவந்துள்ளது. இத்தகையவர்களைக் குறிக்கும் வகையில் உருவாகியிருக்கும் புதிய சொல்லே seenager இச்சொல், senior என்பதனோடு teenager என்பதனை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தோடு இதற்குரிய தமிழாக்கத்தைக் காணலாம். இச்சொல்லின் பொருண்மையைப் புரிந்துகொண்டு மூவரே தக்க சொற்களைப் பரிந்துரைத்திருக்கின்றனர் என்பதே இது மிகுதியாகப் பழக்கத்திற்கு வாராத சொல் என்பதனைக் காட்டும்.
என்.ஆர். ஸத்யமூர்த்தி மூப்பு இளமையர், முதிர் இளைஞர், மீள் இளமையர் முதலிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். இவற்றுள் முதிர் இளைஞர், மீள் இளைஞர் இரண்டும் சிறப்பாக உள்ளன. இவற்றினும், சந்திரா மனோகரன் குறித்துள்ள மூப்பிளைஞர், முதுநிலை இளைஞர், முதிர் இளைஞர், முதிர் விடலை, முதுவிடலை என்னும் சொற்களில் விடலை என்று முடியும் இருசொற்கள் மேலும் சிறப்பாக உள்ளன.
முதிர்இளைஞர் என்பதனினும் முதிர்விடலை என்பது எழுச்சியோடு இருப்பதனைக் காட்டும்.
கோ. மன்றவாணன் மூப்பிளைஞர், மீள் இளைஞர், முதுவிடலை, முதிர் விடலையர், மீள்பதினர், மீள்பதின் அகவையர் போன்ற சொற்களைக் குறித்துள்ளார். இவற்றுள் முதிர் விடலையர் என்பதனோடு மீள்பதின் அகவையர் என்னும் மற்றொரு தக்க சொல்லும் இடம்பெற்றுள்ளது.
Ten பத்து (பதின்) என்றும், teen பதின்ம என்றும் பொருள்படும். ஆதலின் பதினர் என்பதைவிடப் பதின்ம அகவையர் என்பது தெளிவாக அமையும். Teenager என்பதனைப் பலரும் பதின்ம வயதினர் என்று வழங்கி வருவதால், இதனைப் பின்பதின்ம வயதினர் என்று குறிக்கலாம். மீள் என்பதனினும் பின் என்பது மூப்படைந்த நிலையினைக் குறிப்பாகக் காட்டுவதாய் அமைகிறது. அகவையினரினும் எளிமையானது வயதினர். ஆதலின் பின்பதின்ம வயதினர் என்றோ, முதிர் விடலையர் என்றோ வழங்கலாம்.
Seenager - பின்பதின்ம அகவையர் அல்லது முதிர் விடலையர்.
அடுத்த வாரத்திற்குரிய சொல் : Tread Mill
சொல் தேடல்-49க்கான (28.2.16) சொல்: Charisma. இச்சொல்லுக்கான பொருளையும் வரும் வியாழக்கிழமைக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.