முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -48

இந்திய இளைஞர்களுக்கு எஃகு நரம்பும் இருப்புத் தசையும் வேண்டும் என்றார் வீரத்துறவி விவேகானந்தர்.

Updated On : 21 பிப்ரவரி, 2016 at 1:48 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:05 PM

இந்திய இளைஞர்களுக்கு எஃகு நரம்பும் இருப்புத் தசையும் வேண்டும் என்றார் வீரத்துறவி விவேகானந்தர். ஆனால், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் வலிமையின்றி நோஞ்சான்களாகவே காணப்படுகின்றனர். அவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறுவதிலும் பொருளைத் தேடுவதிலும் நாட்டமாக இருக்கிறார்களே தவிர, உடல்நலத்தில் அக்கறை காட்டுபவர்களாக இல்லை. உடல்நலம் பொருள்வளம் இரண்டிலும் சிறந்தவர்களே வாழ்க்கையில் முழுவெற்றி அடைவர்.
 ÷இந்நாளைய மருத்துவ வசதிகளில் ஏதும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமானுசர் நூற்றிருபது ஆண்டும், அவர்தம் மாணவர் கூரத்தாழ்வான் நூற்றெட்டு ஆண்டும் வாழ்ந்துள்ளனர். மருத்துவ வசதி பெருகியுள்ள இக்காலத்தில் பலர் புதிய புதிய நோய்களால் துன்புற்று மடிகின்றனர். காரணம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உடலுழைப்பைக் குறைத்து மனிதர்களைச் சோம்பேறிகளாக்கிவிட்டது.
 ÷நலவாழ்வு உணவிலும் உடற்பயிற்சியிலும்தான் இருக்கிறது. வேலை செய்யும் நேரத்தில் வேலை; விளையாடும் நேரத்தில் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்பவர்களுக்கே வாழ்க்கை இனிக்கிறது. ஒவ்வொருவரும் அன்றாடம் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
 ÷"ஆரோக்கியம் என்பது ஆறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது; போய் எடுத்துக்கொள்' என்பது மருத்துவர்கள் சொல்லும் புதுமொழி. உடற்பயிற்சிகளுள் நடைப்பயிற்சி எளியது; எல்லோராலும் செய்யக் கூடியது. யோகப் பயற்சி உடலுக்கு நலம் தருவது எனினும் இளமையிலிருந்து செய்துவர வேண்டும். வயதான காலத்தில் அப்பயிற்சிக்கு முற்றிய எலும்புகளும் இறுகிய தசைகளும் வளைந்து கொடுக்காமல் துன்பம் விளைவிக்கும்.
 ÷இந்தியா அதிலும் குறிப்பாகத் தென்னகம் நடைபயிற்சிக்கு உகந்த தட்பவெப்ப நிலை கொண்டதாக இருப்பது நமது பேறு. இங்குப் புலர்காலையும் அந்திமாலையும் நடைப்பயிற்சிக்கு ஏற்ற பொழுதுகளாக உள்ளன. பெரும்பாலோர் இவ்வேளைகளிலேயே நடக்கின்றனர். குளிர் நிறைந்த பிற நாடுகளில் இப்படி முடியாது. அங்கே எப்பொழுது இதமான வெயில் காய்கிறதோ அப்பொழுது நடைப்பயிற்சி செய்கிறார்கள். மேலும் மழையோ பனியோ கொட்டும் காலத்தில் வெளியே நடக்க இயலாது. இருள் கவிந்த நேரத்தில் நடக்கும்போது திருடர்களாலும் பகைவர்களாலும் ஆபத்து நேரலாம். இத்தகைய நேரத்திலும் வீட்டிலேயே நடைப்பயிற்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கருவியே Tread mill.
 ÷தொடக்கத்தில் சிறைச்சாலையில் கைதிகளுக்குத் தண்டனை கொடுக்கப் பயன்பட்ட இக்கருவி சில மாற்றங்களைப் பெற்று நடைப்பயிற்சி செய்வதற்கும் மருத்துவமனையில் இருதயத்தின் செயற்பாட்டை அளவிடுதற்கும் பயன்படுவதாக மாறியுள்ளது. மின்சாரத்தால் இயங்கும் அதன் பட்டையில் ஏறி நின்று, பொத்தானை அழுத்தினால் பட்டை நமக்கு எதிர்த்திசையில் சுற்றத் தொடங்கும். நாம் நிற்கும் இடத்திலேயே நின்றவாறு கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு மாற்றி மாற்றி அடிகளைப் பதிக்கலாம். நம் வசதிக்கேற்பப் பட்டை இயங்கும் வேகத்தையும் அது கிடக்கும் நிலையையும் மாற்றிக் கொள்ளலாம். இருதயக் கோளாறு உள்ளவர்களால் சில மணித்துளிகளுக்கு மேல் நடக்க இயலாது. அதுகொண்டு இருதயத்தின் நிலையை மருத்துவர்கள் கணக்கிட்டு அறிவார்கள்.
 ÷இதன் மருத்துவப் பயன்பாட்டை மட்டுமே கருத்தில்கொண்டு கா.மு. சிதம்பரம் "நடைத்திறன் அளவை' என்று குறிக்கலாம் என்கிறார். என்.ஆர். ஸத்யமூர்த்தி மருத்துப் பயன்பாட்டையொட்டித் 'துடியக ஆய்வி' என்றும், பொதுநிலையில் "காலாட்டி' என்றும் குறிக்கலாம் என்கிறார். காலாட்டி என்பது பாம்பாட்டி போல ஆளைக் குறிப்பதாக அமைந்துவிடுகிறது. எல்லாப் பயன்பாட்டையும் குறிக்கும் வகையில் சொல் இருத்தலே சிறப்பு.
 செக்கினோடு தொடர்புபடுத்தித் தி.அன்பழகன் மிதி செக்காடல் என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், சந்திரா மனோகரன், ப.இரா. இராசஅம்சன் ஆகியோர் மிதிசெக்குருளை என்றும் குறிக்கலாம் என்கின்றனர். செக்கு கீழ்மேலாக அன்றிப் பக்கவாட்டில் சுற்றுவதால் அச்சொற்கள் பொருத்தமாக அமையவில்லை. மாறி மாறிப் பட்டையை மிதிப்பதால் "மிதிபொறி' என்று குறிப்பது பொருத்தமாக அமையும்.
 ÷இராம. மலர்விழி மங்கையர்க்கரசி குறிக்கும் நின்ற சீர்நடை யோட்டக் கருவி, க. சங்கர் தெரிவிக்கும் பாதப் பயிற்சி எந்திரம், என். சுரேஷ் சுட்டும் நடைப் பயிற்சி இயந்திரம் ஆகியனவும் வேறு சிலர் தரும் ஓரிட நடைபழகு பொறி, நடையோட்ட உடற்பயிற்சிக் கருவி போன்றனவும் தொடர்களாக உள்ளன. இவற்றினும் சுருக்கமாகக் கோ. மன்றவாணன் நடை நகர்வி, நடைப்பொறி என்னும் சொற்களையும், ஆசுகவி ஆராவமுதன் நடைப்பொறி என்னும் சொல்லையும் குறித்துள்ளார்.
 Tread என்பது நடத்தல், மிதித்தல் என்றும் mill என்பது இயங்கும் பொறி என்றும் பொருள்படுவதால் Tread mill என்பதனை நடைப்பொறி அல்லது மிதிபொறி என்று குறிக்கலாம். நடைப்பொறி - நடைக்குப் பயன்படும் பொறி. மிதிபொறி - மிதிக்கின்ற பொறி.
 Tread mill - நடைப்பொறி அல்லது மிதிபொறி.

அடுத்த வாரத்திற்குரிய சொல் : Charishma
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.