முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -50

ஒருவனுக்கு நல்ல நட்பு வட்டம் விரிகிறபோது இனிய இந்திரலோகம் எழுகிறது; தீ நட்பு ஏற்படும்போது வாழ்க்கை வெளியேற முடியாத கடுநரகமாகிறது. இதனால்தான் திருவள்ளுவர் வேறு எதனை விடவும் நட்புக் குறித்து நீள நினைந்து நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களைத் தந்துள்ளார்.

Updated On : 6 மார்ச், 2016 at 1:18 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

ஒருவனுக்கு நல்ல நட்பு வட்டம் விரிகிறபோது இனிய இந்திரலோகம் எழுகிறது; தீ நட்பு ஏற்படும்போது வாழ்க்கை வெளியேற முடியாத கடுநரகமாகிறது. இதனால்தான் திருவள்ளுவர் வேறு எதனை விடவும் நட்புக் குறித்து நீள நினைந்து நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களைத் தந்துள்ளார்.

ஒத்த உணர்ச்சியே நட்பின் அடித்தளம். நட்பு இருவகை. ஒன்று கண்டு பழகி வளர்வது; மற்றொன்று கண்டு பழகாமலே மலர்வது. பாரியும் கபிலரும், அதியமானும் ஒளவையாரும், போஜனும் காளிதாசனும் கண்டு பழகி, உற்ற நட்புக்கு இலக்கணமாக விளங்கியவர்கள். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் காணாமலே ஒருவர் மற்றொருவரைப் பற்றிக் கேட்ட அளவில் உயிர் நண்பர்களாகி ஒளிர்ந்தவர்கள். இன்று பலர் கடிதங்களின் வாயிலாகவும் மின்னஞ்சல் வழியாகவும் முகம் பார்க்காமலே நல்ல நண்பர்களாகிவிடுகின்றனர்.

சொல் தேடலில் வாசகர்களுக்கு நல்ல சொற்கள் கிடைத்தனவோ இல்லையோ, எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். கோ. மன்றவாணன், என்.ஆர். ஸத்யமூர்த்தி, கா.மு. சிதம்பரம், சந்திரா மனோகரன், ப.இரா. இராசஅம்சன், ஜோதிர்லதா கிரிஜா முதலியவர்கள் கறுப்பா சிவப்பா என்பதுகூட எனக்குத் தெரியாது. இந்த நிறைவுப் பகுதியை எழுதும்போது இந்தப் பயணத்தில் தோன்றாத் துணையாக அமைந்த அவர்களையும், இந்த நட்பு வட்டம் கிடைப்பதற்கு வழிவகுத்த தினமணி ஆசிரியரையும், தமிழ்மணிப் பகுதித் துணையாசிரியையும் நன்றியோடு போற்றுகிறேன். 'என் தலையல்லால் கைம்மாறிலேனே'!

Advertisement

இப்படி முகம் பார்க்காமல் கடித வாயிலாக உருவாகும் நண்பர்களையே ஆங்கிலத்தில்  penfriends என்று குறிக்கின்றனர். இச்சொல்லைத் தந்த நோக்கம் இதற்கு வழங்கும் சொல்லினும் நல்ல சொல் ஒன்று வேண்டும் என்பதே ஆகும். மலர்விழி மங்கையர்க்கரசி ""பேனா நண்பர் என்ற சொல் வழக்கில் உள்ளதெனினும் என்னைப் போலவே திருப்தியுறாத ஒருவர்தாம் இதனைப் பரிந்துரைத்திருக்க வேண்டும். அதென்ன பேனா நண்பர்? பென்சில் நண்பர் என்று சொல்ல வேண்டியதுதானே'' என்று எழுதியுள்ள குறிப்பு அதனை ஏற்கும் வகையில் அமைந்துள்ளது. பேனா நண்பர் என்பது பேனாவால் உண்டாகும் நண்பர் என்று விரியும்; மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. வேறுவகையாக விரித்தல் பொருந்தாது. இஃது அவருக்காகத் தரப்படும் குறிப்பு.

கா.மு. சிதம்பரம், ""ஆங்கிலத்தில்  Herculian, Ceasarian, Narcissism போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் தனிமனிதப் பெயரில் அமைந்துள்ளன. தமிழிலும் பகீரதப் பிரயத்தனம், எட்டப்பத்தனம், நல்லதங்கா துயரம் போன்ற சொற்கள் தனிமனிதர் பெயரில் அமைந்துள்ளன. அதே போன்று நேரில் சந்தித்துக் கொள்ளாமலேயே தங்கள் நட்பை வளர்த்துக் கொள்பவர்களைப் பிசிராந்தையர் எனலாம்'' என்கிறார். இது நல்ல மொழியாக்க உத்தி. இந்த வகையில் யானும் எண்ணிப்பார்த்தேன். நட்பு இருதலைத் தொடர்பல்லவா? பிசிராந்தையாரை மட்டும் போற்றினால் பிள்ளைகளால் மனம் நொந்து வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ் சோழனை நாமும் கைவிட்டவராகி விடுவோமோ என்று அஞ்சி அச்சொல்லாக்கத்தை விடுத்தேன்.

இராஜசிம்மன் பேனா நண்பன் என்றும், துரை. தனபாலன் தூவல் நண்பர் என்றும், கோ. முத்துமாணிக்கம் தூவல் தோழன் என்றும், மீனா.கண்ணன், டி.வி.கிருஷ்ணசாமி, பி.சுப்பிரமணியன் எழுதுகோல் நண்பர் என்றும், உ.தேவதாசு மடல் நண்பர் என்றும், தி.அன்பழகன், வெ.ஆனந்தகிருஷ்ணன் மடல் வழி நண்பர் என்றும், அறிவுத்தொகையன் தூவல் துணை என்றும் குறிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இவற்றினும் சிறப்பாக, pen என்பது எழுத்து, கடிதம் ஆகியவற்றின் குறியீடு என்பதனை உணர்ந்து என்.ஆர். ஸத்யமூர்த்தி எழுத்து நண்பர் என்றும், சோலை. கருப்பையா கடித நட்பாளர் என்றும், ஆசுகவி ஆராவமுதன் எழுத்து நண்பன், கடித நண்பன் என்றும், மலர்விழி மங்கையர்க்கரசி எழுது தோழர், கடிதவழி நண்பர் என்றும், செ.சத்தியசீலன் எழுத்து நண்பர், அஞ்சல்வழி நண்பர் என்றும், க. சங்கர் மடலவர்கள் என்றும் தமிழாக்கம் செய்துள்ளனர். எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் க.ஹரிசங்கர் தந்துள்ள சொற்கள் அஞ்சல் அன்பன், மடல் நண்பன் என்பனவாகும்.

இவ்வகை நண்பர்கள் இடத்தால் ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பவர்கள். அதனைக் கருத்தில் கொண்டு கா.மு. சிதம்பரம் தொலைவுறை தோழர், ஒட்டுறையா ஒத்துணர்வினர் என்று

குறிக்கலாம் என்கிறார். எஸ். சுரேஷ் அயலக நண்பர்கள் எனலாம் என்கிறார்.

இந்த நட்பின் சிறப்புத் தன்மைகள் இரண்டு. ஒன்று, நேரில் சந்தித்தறியாத நட்பு; மற்றொன்று மடல்வழி வளரும் நட்பு. இவற்றைக் கருதிப் பேனா நண்பர் என்பது போல ஒலிக்கும் "காணா நண்பர்' என்றும், அவர்கள் ஒருவர் திருமுகத்தை மற்றொருவர் காணாவிட்டாலும் எழுதும் திருமுகத்தால் நட்பை வளர்த்துக் கொள்பவர்கள் ஆதலின், "திருமுகத் தோழர்' என்றும் இருசொற்களை உருவாக்கி வைத்திருந்தேன். திருமுகம் என்பதற்குக் கடிதம் என்பது பொருள். ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் க. மன்றவாணன் மடல் நண்பர், அஞ்சல் நண்பர் முதலியவற்றோடு "பேனா நண்பர் என்பது போலக் காணா நண்பர்' எனலாம் என்றும் குறித்திருந்ததைப் படித்தபோது எனக்குப் பெருவியப்பு! திருமுகத் தோழர் என்பது கடித நண்பர் என்பதன் பிறிதோர் இலக்கிய வடிவமே.

அன்பான திருமுகத் தோழர்களே! எங்கெங்கோ எந்தெந்தத் துறையிலோ இருக்கும் உங்கள் பயன்கருதாத் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. உங்கள் தினமணி உறவு தொடர்வதாக. வணக்கம்.

Penfriend - திருமுகத் தோழர் அல்லது காணா நண்பர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.