இலக்கண நூலான "நன்னூலை' இயற்றிய பவணந்தி முனிவர், அந்நூலின் இறுதியில்,
""பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே''
முற்காலத்துள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்தில் இறத்தலும், முற்காலத்து இல்லன சில பிற்காலத்தில் இலக்கணமாதலும் வழுவல்ல என்றார். இவ்விதி அளவைக் கருவிகளுக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் நீட்டல் அளவைக் கருவிகளுள் ஒன்றாக "வில்' இருந்துள்ளது. இதற்குச் சில இலக்கியச் சான்றுகள் உள்ளன.
மணிமேகலை, மலர் கொய்ய தன் தோழி சுதமதியுடன் உவவனம் செல்கிறாள். இதை எட்டிக் குமரன் மூலம் அறிந்த உதயகுமரன் மனமகிழ்வெய்தி மேகத்தைக் கிழித்துக்கொண்டு செல்லும் மதியம் போல் தேரில் வருகிறான்.
தேர் ஒலி கேட்ட மணிமேகலை, ""சுதமதி! முன்பு ஒருநாள் என் தாய் மாதவியிடம், வயந்தமாலை, "உன் மகள் மணிமேகலையை அடைய உதயகுமரன் விரும்புகிறான்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்; அவன் தேர் ஒலி கேட்கிறது'' என்றாள்.
சுதமதி உடனே, ""இதோ தெரிகிறதே பளிக்கறை மண்டபம், அதனுள் புகுக'' என்று கூறி ஒளிய வைத்து, மண்டபத்து அறையைத் தாழிட்டாள். தாழிட்டு விட்டு மண்டபத்திற்கு வெளியே எத்தனை அடி தொலைவில் நின்றாள் சுதமதி என்பதைக் குறிப்பிடும் சீத்தலைச் சாத்தனார்,
""ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை
நீங்காது நின்ற நேரிழை'' (பளிக்கறை: 89,90)
பளிக்கு மண்டபத்திலிருந்து ஐந்துவில் தொலைவில் நின்றாள் நேரிழையாகிய சுதமதி என்றார். இதனால் நீட்டல் அளவைக் கருவியாக "வில்' இருந்துள்ளது என்று அறிய முடிகிறது.
வில்லிபாரதத்திலும் "வில்' அளவுகோலாகவும் இருந்த செய்தி வருகிறது. கர்ணன் தன்னிடமிருந்த நாகக் கணையை விசயனுடைய கழுத்திற்கு இலக்காக எய்தான். துளப மாலையணிந்த மாயனாகிய கண்ணன், தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்தில் புதையும்படி அழுத்தினான். அதனால் அந்தப் பாம்புக் கணையானது விசயனுடைய மகுடத்தில் மட்டும் மோதி வீழ்த்திச் சென்றது. அப் பாம்புக் கணை "மீண்டும் ஒருமுறை என்னை உன் வில்லில் வைத்து ஏவுக' என்று அலறியது! "என் தாய் குந்தியிடம் ஒரு முறையே நாகக் கணையை ஏவுவேன்' என்று உறுதி கூறினேன்; அதனால் "மறு கணை தொடேன்' என்றான் கர்ணன்.
அப்போது தேரோட்டியாகிய சல்லியன் உள்ளம் நொந்து கர்ணனைப் பார்த்து, ""அரு மார்பு இலக்காக நாகக் கணையை எய்க' என்று கூறினேன். என் பேச்சைக் கேட்கவில்லை; நாகக் கொடியை உடைய துரியோதனன் உன் துணை கொண்டு பாராள இனி முடியாது'' என்று கூறித் தேரிலிருந்து இறங்கி விட்டான். கர்ணன் பரசுராமரது சாபத்தை நினைத்து மெலிந்தான்; வலிமை குறைந்தது. வேறு தேர் ஏறி விசயனுடன் போர் செய்தான் கர்ணன். வலிமை குறைதலைக் கண்ட கண்ணன் விசயனிடம் போரை நிறுத்துமாறு கூறி, வேதியர் வடிவத்துடன் கர்ணனிடம் செல்லும் காட்சியை ஓவியமாகக் காட்டும் வில்லிபுத்தூரார்,
""அத்தவெற்பு இரண்டு விற்கிடை எனப் போய்
ஆதவன் சாய்தல் கண்டருளி
முத்தருக் கெல்லாம் மூலமாய் வேத
முதல் கொழுந்தாகிய முகுந்தன்
சித்திரச் சிலைக்கை விசயனைச் செருநீ
ஒழிக எனத் தேர்மிசை நிறுத்தி
மெய்த்தவப் படிவ வேதிய னாகி
வெயிலவன் புதல்வனை அடைந்தான்''
(வில்லி. 17-ஆம் போர்: 237)
"மாலை நேரம் கதிரவன் மேற்குத் திசையில் மறையும் காலம். மலைக்கும் கதிரவனுக்கும் இடைவெளி இன்னும் "இரண்டு வில்' நீளத் தொலைவே உள்ளது. அப்போது முத்தியுலகத்தை அடைந்தார் யாவர்க்கும் முதற்கடவுளாகிய - வேதங்களின் சிறந்த கொழுந்தாகிய கண்ணன், அழகிய வில்லேந்திய கையை உடைய அருச்சுனனை நோக்கி "நீ சற்றே போரை நிறுத்துவாயாக' என்று சொல்லி, தேரின் மேல் அவனை நிற்கச் செய்தான். தான் உண்மையான தவ வடிவையுடைய அந்தண வடிவம் எடுத்து, வெயிலவன் புதல்வனாகிய கர்ணனை அடைந்தான்' என்றார். இங்கே மறைய உள்ள சூரியனுக்கும் மலைக்கும் இடையே உள்ள தூரத்தை "இரண்டு விற்கிடை' (இரண்டு வில் கிடக்கும் தூரம்) என்றார் வில்லிபுத்தூரார்.
சீவகசிந்தாமணியில் வில் அளவுகோலை இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார் திருத்தக்க
தேவர். அவற்றுள் ஒரு பாடல் வருமாறு:
""உருக்கமைந்து எரியும் செம்பொன்
ஓர் ஐவில் அகல மாகத்
திருக்குழல் மடந்தை செல்லத்
திருநிலம் திருத்திப் பின்னர்
விரைத்தகு நான நீரால்
வெண்ணிறப் பொடியை மாற்றிப்
பரப்பினர் பாடுவண்டு ஆர்ப்பப்
பன்மலர் பக்க மெல்லாம்'' (சீவக.616)
மடந்தையாகிய காந்தருவதத்தை நடந்து செல்லும் பாதையாகிய நிலத்தைப் பொன்னால் ஐந்து வில் அகலமாகத் திருத்தி, பின்பு மணம்மிக்க புழுகாலும் பனிநீராலும் நிலத்திலிருந்து எழுந்த புழுதியை மாற்றிப் பக்கமெல்லாம் வண்டுகள் ஆர்க்கும்படி மலரைப் பரப்பினர் காந்தருவதத்தையின் தோழிகள் என்பார் திருத்தக்க தேவர்.
இப்பாடலில் வரும் ஐந்து வில் பற்றி விளக்கும் டாக்டர் உ.வே.சா., ""ஓர் ஐ வில் அகலம்' - ஓர் ஐந்து விற்கிடை அகலம். எட்டுச் சாண் கொண்டது ஓர் வில் அளவு. இவ் அளவுப் பெயரின் விளக்கத்தைச் சைன நூல்களில் பரக்கக் காணலாம்'' என்பார்.
நீட்டல் அளவைக் கருவிகளுள் ஒன்றாக ஆறடி (எட்டுச் சாண்) நீளம் கொண்ட வில் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை மேற்கண்ட பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.