தமிழரின் வீர விளையாட்டுகள்
அறுவடைத் திருநாளான "பொங்கல் திருநாளை' தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
அறுவடைத் திருநாளான "பொங்கல் திருநாளை' தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இத்திருநாளுக்கு அடுத்த நாள் வேளாண்மைக்கு உறுதுணையாக விளங்கும் பசுக்களையும், எருதுகளையும், விவசாயக் கருவிகளையும் வழிபடுகிறோம். அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற வீரவிளையாட்டுகளும் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் தொன்றுதொட்டு "ஜல்லிக்கட்டு' என்ற காளையை அடக்கும் வீரவிளையாட்டுகள் நடைபெற்றன என சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. கலித்தொகையில் இது "ஏறு தழுவல்' எனக் (முல்லைக்கலி 101 - 107) குறிக்கப்படுகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையிலும், சீவகசிந்தாமணியிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. எருது விளையாட்டு தொடர்பாக நடுகற்களும் காணப்படுகின்றன.
வீரத்திற்கு அடையாளமாக விளங்கும் நடுகற்கள் தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஊரின் நன்மைக்காகப் போராடி இறந்த வீரனின் வீரத்திற்கு அடையாளமாக நடுகற்கள் விளங்குகின்றன. நடுகற்களை முதன்மையாக வைத்து அதன் சிறப்பினை அறிந்துகொள்ள வரலாற்றுக் காட்சியகம் தர்மபுரியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பல நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எருது விளையாடி இறந்த வீரனுக்காக ஒரு நடுகல் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. "கவுரிச்சங்கன்' என்பவன் கருவந்துறை என்ற இடத்தில் நடைபெற்ற எருது விளையாட்டில் இறந்தான். அவனுக்கு அவன் மகன் நடுகல் (சங்கன் மகன் நட்டகல்லு) நட்டதை அதில் காணும் கல்வெட்டு கூறுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் "கூத்தப்பாடி' என்ற ஊரிலும் எருது விளையாடி இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் "பெருமாள் மலை' அருகே சாலை ஓரத்தில் காளையை அடக்கும் கோலத்தில் 16-ஆம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று காணப்படுகிறது.
Advertisement
இதுபோன்று சேவல் போரும் - சண்டையும் முக்கிய இடம்பெற்று விளங்குகிறது. சேவல் போர் பற்றி புறப்பொருள் வெண்பா மாலை "கோழிவென்றி' என்ற தலைப்பிலும், நன்னூல், குறுந்தொகையிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் கோழிச்சண்டையில் இறந்த சேவல்களுக்காகவும் நடுகற்கள் காணப்படுவது சிறப்பு. விழுப்புரம் அருகே "அரசலாபுரம்' என்ற இடத்தில் காணப்படும் சேவல் உருவம் பொறித்த நடுகல்லில் ""முகையுரு மேற்சேரிடுயாடிகருகிய கோழி'' என்ற கல்வெட்டு பொறிப்பு காணப்படுகிறது. முகையூர் என்ற ஊரில் நடைபெற்ற கோழிப்போரில் வென்று (இறந்துபட்ட) சேவலுக்கு நினைவுச்சின்னமாக எடுக்கப்பட்ட நடுகல்லாகும் இது. இதேபோன்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே இந்தளூர் என்ற ஊரிலும் சேவலுக்காக எடுக்கப்பட்ட நினைவுக்கல் வழிபாட்டில் உள்ளது. இக்கல்லில் ""கீழச்சேரி கோழி பொடு கொத்த'' என்ற தொடர் கல்வெட்டாகக் காணப்படுகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்றுச் சிறப்பும் உடைய இத்தகைய நடுகற்களைப் போற்றிப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அத்தகைய வீர விளையாட்டுகளைக் காலந்தோறும் நடைமுறைப்படுத்தி, வாழவைக்கவும் செய்வோம்!