முகப்பு
தமிழ்மணி

பெஞ்சமினுக்கு முன்பே சொன்னவர் சேக்கிழார்!

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அமெரிக்காவில் வாழ்ந்த பன்முகப் பேரறிஞர். அரசியல் வல்லுநர், பத்திரிகையாளர், அமெரிக்க நாட்டில் ஆட்சிச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் உறுப்பினர், அறிவியல் ஆராய்ச்சியாளர்

Updated On : 5 பிப்ரவரி, 2017 at 1:15 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அமெரிக்காவில் வாழ்ந்த பன்முகப் பேரறிஞர். அரசியல் வல்லுநர், பத்திரிகையாளர், அமெரிக்க நாட்டில் ஆட்சிச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் உறுப்பினர், அறிவியல் ஆராய்ச்சியாளர் என இவர் பன்முகத் திறமை பெற்றவர்.
வானத்து மின்னலில் மின்சாரம் உள்ளது, அது பூமிக்குப் பாய்கிறது என்ற உண்மை உணரப்படாத 17-ஆம் நூற்றாண்டில் (1706-1790) வாழ்ந்தவர். இவர் மழைமேகக் காலத்தில் வானத்தில் பட்டம் (காற்றாடி) ஒன்றைப் பறக்கவிட்டார். அப்போது விண்ணில் மின்னல் ஒன்று பிறந்தது. அது பட்டத்தின் மீது பாய்ந்தது. அதை இணைத்துக் கொண்டிருந்த நூலின் வழியாக அது கீழை இறங்கியது.
அப்போது மரணத்தைச் சந்திக்க வேண்டிய ஃபிராங்க்ளின் எப்படியோ உயிர் தப்பினார். மின்னலின் மின்சாரம் பற்றி அறிந்தார் - உலகுக்கும் அறிவித்தார்.
மின் என்ற மின்னலின் சாரமே, மின்சாரம் என்ற தமிழ்ச்சொல் உணர்த்தும். மின்னலில் மின்சாரம் இருப்பதை அறிவியல் பார்வை பெற்றிருந்த தமிழன் உணர்ந்திருந்தான். ஆகவே, அதற்கு "மின்சாரம்' என்று அந்த அற்புத சக்திக்குப் பெயர் சூட்டினான் (அரபிய சொல்லான "அன்பெர்' என்பது கிரேக்க மொழியில் "எலக்ட்ரான்' என்று மருவியது. இதில் - அன்பெர்' என்ற பொருளில் ஓர் அற்புத சக்தி இருப்பது தெரிந்தது. ஆகவே, கிரேக்க எலக்ட்ரானிலிருந்து "எலக்ட்ரிக்' என்ற சொல் பெறப்பட்டது).
திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமான் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஏனாதிநாதருக்கும் அதிசூரனுக்கும் நடைபெற்ற போரை இவர் தன் பெரியபுராணத்தில் வருணித்துள்ளார். இவர் தம் பாடல் ஒன்றில் மேகக் கூட்டத்தில் பிறக்கும் மின்னலையும் இடியையும் உவமையாகக் காட்டியுள்ளார்.
"போர் வீரர்கள் மேகக்கூட்டம் போல் திரண்டுள்ளனர். அவர்கள் வாள் வீசுகின்றனர். அப்போது அந்த வாள்கள் ஒளிவீசுகின்றன. அவை மின்னலைப் போல் தோன்றுகின்றன. கேடயங்கள் மோதுகின்றன; அது இடியோசை போல் உள்ளது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் பிறக்கின்றன. ஒளி வேகமாகப் பாயும்; ஒலி மெதுவாக வரும். மேகத்தில் மின்னல் தோன்றும், அந்த மின்சாரம் கிழே பாயும். உடன்பிறந்த இடியோசை, சற்று நேரம் கழித்தே கேட்கும் என்ற உண்மையைச் சேக்கிழார் தன் பாடலில் அறிவித்துள்ளார். முன்னதாக மின்னலைச் சொல்லி, அதற்குப் பிறகு இடியை அவர் கூறியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிராங்க்ளின் அறிந்த அறிவியல் உண்மையை, சேக்கிழார் 12ஆம் நூற்றாண்டிலேயே தெரிவித்துவிட்டார். அப் பாடல் வருமாறு:

""மேக வொழுங்குகள் முன்கொடு
மின்னரை தம்மிடையே கொடு
மாக மருங்கினு மண்ணினும்
வல்லுரு மேறெதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குல
மாள்வினை வாளுடைய யாடவர்
காக மிடைந்த களத்திரு
கைகளின் வந்து கலந்தனர்''

-முனைவர் மலையமான்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.