தைப்பூச நன்னாளில் அருட்பிரகாச வள்ளலார் அமைத்தருளிய வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு திரைகளை விலக்கிச் சோதி தரிசனம் காட்டப்படுகிறது. அவையாவன: மனிதர் தம் வாழ்வில் நீக்க வேண்டிய 1.மாமாயை, 2.பேருரு, 3.பரவெளி, 4.சித்துரு வெளி, 5. பொருள் உறுவெளி, 6. மெய்ப்பதி வெளி, 7. கருதனுபவங்கள் ஆகியவற்றை விலக்கினால் வாழ்வில் பரம்பொருளை அடையலாம்.
வள்ளலார் வடலூருக்கு அருகிலுள்ள சித்திவளாகத் திருமாளிகையில் 1874-ஆம் ஆண்டு தை மாதம் 19ஆம் நாள் அன்று, இரவு யோக நிலையில் நின்றார். பெருமானை அடைய வேண்டி நினைந்து நினைந்து நெகிழ்ந்து உருகிக் கண்ணீர் சொரிந்திருந்தார். அந்நிலையில் சிவபெருமான் அவரது கண்மணிப் பாவை வழியாக வள்ளலாரின் இதயத்தில் கோயில் கொண்டார். அப்பேரின்ப நிலை வாய்க்கப்பெற்ற சுவாமிகள், முன்னைவிட அதிகமாக அழுதார். அப்பொழுது "ஏகபோகமாய்க்' கலந்து உள் இருந்த சிவபிரான் ""அன்பனே! முன்பு என்னை அடைய வேண்டும் என்று அழுதாய்; இப்பொழுது இரண்டறக் கலந்த நிலையில் உன் உளக்கோயிலில் எழுந்தருளியுள்ளேனே, இந்நிலையில் முன்பைவிட அதிகமாக ஏன் அழுகிறாய் அப்பா?'' என வினவினாராம். அதற்கு சுவாமிகள்,
""பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி, அருட்
சோதி அளித்து, என் உள்ளத்தே சூழ்ந்து கலந்து துலங்குகிறாய்,
நீதிநடம்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது; என்போன்று இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே!''
என்று அன்புடன் மொழிந்தாராம். அருளாளர்கள் தமக்கென எதுவும் வேண்டாமல், உலக உயிர்கள் அனைத்தும் (ஓரறிவுயிராகிய வாடிய பயிரும்) பரம்பொருளை அடைய வேண்டும் என்றே விண்ணப்பிப்பர். இதுவே அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் தனிப்பெருங் கருணையாகும்!
-முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.