அதோளி, இதோளி, உதோளி, எதோளி -பாண்டிய நாட்டு வழக்காறுகளே!
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் தொகைமரபில் இடம்பெற்றுள்ளது கீழ்க்காணும் நூற்பா.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் தொகைமரபில் இடம்பெற்றுள்ளது கீழ்க்காணும் நூற்பா.
''சுட்டுமுத லாகிய இகர இறுதியும்
எகரமுதல் வினாவின் இகர இறுதியும்''
இடப்பொருள் உணர்த்தும் சொற்களுக்கான புணர்ச்சி விதிகளைக் கூறும் நூற்பா இது. அ, இ, உ என்ற எழுத்துகள் உயிரினங்களையோ, பொருள்களையோ அல்லது இடங்களையோ சுட்டிக் கூறுவதற்கு வழங்கப்பெறும் சொற்களின் முதலெழுத்துகளாக அமைபவை. (எ.கா. அவன், அவள், இது, உது, அங்கு, இங்கு என்பன போன்ற சொற்கள்). அதனால் அ, இ, உ என்ற மூன்று எழுத்துகளையும் சுட்டு என இலக்கணிகள் மொழிவர் (தொல்.எழுத்து.31). இச்சுட்டுக்களை முதலாகவும் இ என்ற எழுத்தை இறுதியாகவும் உடைய, தம் காலத்தில் வழங்கப்பெற்ற இடப்பொருள் குறித்த பெயர்களையே தொல்காப்பியர் முதலடியில் மேற்காணுமாறு குறித்துள்ளார். அதனை அடுத்த அடி, எ என்ற எழுத்தை முதல் எழுத்தாகவும் இகரத்தை அதாவது இ என்ற எழுத்தை இறுதியாகவும் கொண்ட இடப்பொருண்மை குறித்த வினாவாக வழங்கப்பெறும் பெயர் எனக் குறிப்பிடுகிறது.
இளம்பூரணர், இத்தொல்காப்பிய நூற்பாவிற்குரிய தம் உரையில், நூற்பாவின் முதலடி உணர்த்தும் சுட்டுப்பெயர்களுக்குரிய எடுத்துக்காட்டுகளாக அதோளி, இதோளி, உதோளி என்ற சொற்களையும், வினாப்பெயராக எதோளி என்ற சொல்லையும் தந்துள்ளார். (இச்சொற்களின் இறுதி உயிர்மெய்யான 'ளி'யை ள்+இ எனக் கொள்வதே இலக்கண முறை என்பதால் இகரத்தை இறுதியாக உடைய சொற்களாகக் கூறப்பெறுகின்றன.) இளம்பூரணரைத் தொடர்ந்து நச்சினார்க்கினியரும் இச்சொற்களையே எடுத்துக்காட்டுகளாகக் காட்டியுள்ளார். மேலும், 'அதோளி - அவ்விடமென்னும் பொருட்டுப்' பயின்று வந்துள்ளதாகப் பொருளும் கூறியுள்ளார்.
தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், அதோளி, இதோளி, உதோளி என்னும் சுட்டு முதலாகிய இகர இறுதிச் சொற்கள் கடைச்சங்க காலத்திலேயே வழக்கற்று வீழ்ந்தன எனச் செய்யுளியலில்(80) குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், இச்சொற்கள் கடைச்சங்க காலத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களில் எடுத்தாளப்பெறவில்லை. பேராசிரியரின் இக்குறிப்பை மனத்திற்கொண்டு, தொல்காப்பியமானது சங்க இலக்கியங்கள் எழுதப்பெற்ற கடைச்சங்க காலத்திற்கு மிகவும் முற்பட்டது என்றும், இடைச்சங்க காலத்தைய நூல் என்றும் நிறுவ முயலும் அறிஞர்கள் (மா.இராசமாணிக்கனார் தொட்டு இக்கால அறிஞர் வரை) இச்சொற்களைத் தகுந்த சான்றாகக் காட்டி வருகின்றனர். ஆனால், கலித்தொகையில், முல்லைக்கலியின் இறுதிப் பாடலில், ஓரிடத்தில் மட்டும் 'ஈதோளி' என்ற சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு:
''முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்து ஆயின் - ஈதோளிக் கண்டேனால்''
(கலி.117:12-13)
கலித்தொகைக்கு உரை எழுதியுள்ள நச்சினார்க்கினியர், ஈதோளி என்ற அச்சொல்லிற்கு இவ்விடம் எனப் பொருள் உரைத்துள்ளார். (இதோளி என்ற சொல்லின் முதலெழுத்து நீட்சி பெற்றுள்ளது) இடைச்சங்க காலத்தைச் சார்ந்த இச்சொற்கள் கடைச்சங்க காலத்தில் வழக்கிழந்ததாயின், கடைச்சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்ட இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றது எவ்வாறு? அதற்கான விளக்கம் பின்வருமாறு:
தொல்காப்பியர் காலம்வரை வழக்கிலிருந்த இச்சொற்கள் பின்னர் வழக்கிறந்தன என்பது தவறான கூற்று. ஏனெனில், இச்சொற்கள் தென்பாண்டிய நாட்டுப் பகுதிகளான திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்களால் இன்றும் வழங்கப்பெற்று வருகின்றன என்பதே உண்மை. ஆம், இவை பாண்டிய நாட்டிற்கே உரிய திசைச்சொல் வகையைச் சார்ந்த சொற்கள் ஆகும்.
குறிப்பிட்ட இடங்களுக்குரிய வழிகளைக் கூறும்போது அதோளிப் போ, இதோளிப் போ என்றும், வழியை அறியாதவர்கள் குறிப்பிட்ட இடத்தைக் கூறி எதோளிப் போக வேண்டும் என்று வினவுவதும் இன்றும் அவ்விரு மாவட்டங்களில் வழக்கில் உள்ளன. அதாவது அதுவழி, இதுவழி, எதுவழி என்ற சொற்களே மருவிக் காலப்போக்கில் அதோளி, இதோளி, எதோளி என மாறியிருக்க வேண்டும். முன்னொட்டுகளாக உள்ள அது, இது, எது என்பன குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் வழியிலுள்ள இடைப்பட்ட இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பெற்ற சொற்களாகும்.
இம்மூன்று சொற்களிலும் உள்ள இறுதி எழுத்தின் மெய்யான ளகரத்திற்குப் பதில் டகரமும் பயன்படுத்தப் பெறுவதுண்டு. அதாவது அதோடிப் போ, இதோடிப் போ, எதோடிப் போகவேண்டும் என்றவாறும் பேசப்படுவதுண்டு. இவற்றைப் போன்று அந்தாள, அதோட, இதோட என்றவாறான சுட்டுச்சொற்கள் பல பாண்டிய நாட்டுக்கே உரியனவாக இன்றும் வழங்கப்பெற்று வருகின்றன. (எ.கா.) அந்தாளப் போனவன் இன்னும் வரவில்லை. அதாவது அந்த அளவில் என்பதன் திரிபே அந்தாள என்பதாகும். அவ்வாறே அத்துடன், இத்துடன் என்ற சொற்கள் பேச்சுவழக்கில் அதோடப் போய்விடு, இதோடப் போய்விடு என்றவாறெல்லாம் பேசப்பட்டு வருகின்றன.
இங்கு இரு செய்திகளைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாதது. ஒன்று: தொகைமரபில் இச்சொற்களை எடுத்துக்காட்டாகக் கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் பயின்றுவந்துள்ள ஈதோளி என்ற அச்சொல்லுக்கு உரை கூறுமிடத்து, இவ்விடம் எனப் பொருளைக் கூறியுள்ளாரே தவிர, அச்சொல் வழக்கிறந்த சொல் என்றவாறான குறிப்பை எங்கும் தரவில்லை.
பேராசிரியருக்குரிய செய்யுளியல் உரையைக் கொண்டு, இச்சொற்களைக் கால ஆராய்ச்சிக்குரியதாகக் கொள்வதோ வாதிடுவதோ தவறு. மேலும், பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியர் உரைப் பதிப்புகளில், பின் நான்கு இயல்களான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகியன நச்சினார்க்கினியரால் எழுதப்பெற்றன அல்ல. அவை பேராசிரியர் என்பார் எழுதியது என்ற செய்தியை 1902இல் வெளிவந்த செந்தமிழ் இதழில் ரா. இராகவையங்கார் (கட்டுரையில்) வெளியிட்டுள்ளார். இக்கருத்து தமிழுலகம் ஏற்றுக்கொண்ட ஒன்று. எனவே, நச்சினார்க்கினியர் முரண்பட்டுக் கூறியதாக எண்ணுவது தவறு. பாண்டிய நாட்டினரான நச்சினார்க்கினியரும், சோழ நாட்டினராகக் கருதப்படும் இளம்பூரணரும் தொல்காப்பியம் தோன்றிய பாண்டிய நாட்டில் வழங்கப்பெறும் வழக்குகள் என்பதைத் தெரிந்தே அச்சொற்களை எடுத்துக்காட்டுகளாகப் பதிவு செய்துள்ளனர். பேராசிரியர், பாண்டியநாட்டுத் திசைச்சொற்களான அச்சொற்களை அறியாத நிலையில், அவை வழக்கில் இருந்து மறைந்தவையாகச் செய்யுளியலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இரண்டு: அதோளி, இதோளி, உதோளி, எதோளி என்பன இன்றும் பாண்டிய நாட்டில் வழக்கிலுள்ள சொற்களே.
'வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி', 'நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து' தம் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய பாண்டிய நாட்டினரான தொல்காப்பியர், தென்பாண்டி நாட்டிற்கே உரிய இத்திசைச் சொற்களை நூற்பாவாகத் தந்ததில் வியப்பில்லை.
-முனைவர் வாணி அறிவாளன்