சூளுரைத்த குறளன்; மகிழ்ந்த கூனி!
சங்க காலத்தில் ஓர் அரசனது அரண்மனையில் குற்றேவல் செய்யும் கூனி ஒருத்தியும், குறளன் (குறுகிய உருவம் உடையவன்) ஒருவனும் இருந்தனர். அவ்விருவரும்
சங்க காலத்தில் ஓர் அரசனது அரண்மனையில் குற்றேவல் செய்யும் கூனி ஒருத்தியும், குறளன் (குறுகிய உருவம் உடையவன்) ஒருவனும் இருந்தனர். அவ்விருவரும் அவ்வரண்மனையின் புறத்தே ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் கூடி இன்பம் காண விரும்பினர்.
பொதுவாகவே, குற்றேவல் புரிபவர்களின் இன்பம் உயர்ந்த "ஐந்திணை' ஒழுக்கமாக இராது. தாழ்ந்த இன்பங்களுள் ஒன்றான "பெருந்திணை' ஒழுக்கமாகவே இருக்கும். அவ்வகையில் அந்தக் கூனியும், குறளனும் நிகழ்த்தும் உரையாடல்களும், நடவடிக்கைகளும் மருதனிளநாகனார் என்ற புலவரால் (மருதக்கலி:29) நகைச்சுவை தோன்றப் புனையப்பட்டுள்ளது.
ஒருநாள், அந்தக் குறளன் அரண்மனையின் ஓரிடத்திலிருந்தான். கூனியோ, வேறு ஏதோ வேலையாய்ச் செல்பவள் போல, அவனிருக்கும் அவ்வழியே வந்தாள். உடனே, குறளன் அவளை இகழ்ச்சியுடன் நோக்கி,
""எந்நோற் றனை கொல்லோ
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை''
என்றான். அதாவது, "கரையிலிருக்கும் பொருளின் நிழல் நீருக்குள்ளே நெளிந்து தோன்றுவது போல, உருவம் குறுகி நெளிந்து நடக்கும் கூனியே! சற்று நில்! உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்; அவ்வாறு நான் உரையாடுவதற்கு நீ ஏதோ நல்வினை செய்தாய் பார்!' என்றான்.
அவனும் தானே ஒரு குள்ளனாய் இருந்துகொண்டு, இவ்வாறு தன்னைக் "கூனி' என்று பழிக்கிறானேயென தன் மனத்துள் அவனை இகழ்ந்தாள் கூனி. அவனை எதிர்த்துப் பேசவும் தொடங்கிய அவள், "கண்ணால் பார்க்கவே சகிக்க முடியாதவாறு "ஆண்டலை' என்ற பறவையின் குஞ்சு போல அருவருப்பான தோற்றம் உடையவனே! நான் உனக்கு இசைவேன் என்ற எண்ணத்தில் என்னை மேலும் போகவிடாமல் தடுத்தாய்! உன்னைப் போன்றக் குறளனால் என் உடலைத் தீண்டவும் முடியுமோ?' என்று கேட்டாள்.
அதற்குப் பதிலுரைத்த குறளன், "கலப்பையில் பொருத்தப்படும் கொழுவைப் போல, ஓரிடத்தில் கூனாகவும், ஓரிடத்தில் முன்னே வளைந்தும், வலிய முறித்து விட்டாற் போன்ற உனது உடலழகால் நீ எனக்குத் தாங்கவொணாக் காம நோயைத் தந்துவிட்டாய்! அதனால், இனி நான் பொறுத்திருக்க மாட்டேன். நீ எனக்கு இரங்கினால் மட்டுமே நான் உயிருடனிருப்பேன்; உன் மனத்திலுள்ளதைக் கூறு!' என்றான்.
அதைக் கேட்ட அவள், "இவனது ஆசையைப் பாராய் நெஞ்சே!' என்று தனக்குள் கூறிக் கொண்டாள். சற்று நெருங்கியவள், "மேடு பள்ளங்களை உடைய நெத்தப் பலகையை எடுத்துத் தூக்கி நிறுத்தினாற் போன்ற விகார உருவம் உடையவனே! மகளிரைக் கூடும் முறையைக் கல்லாத குறளனே! மக்கள் நடமாட்டமில்லாத உச்சிவேளையில் எனது வீட்டிற்கு வா எனச் சொன்னாலென்ன? உனக்கு நெருங்கிய வேறு சில பெண்டிரும் அங்குளரோ?' எனக் கேட்டாள் கேலியாக. உடனே அக்குறளன்,
""நல்லாய் கேள், உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாய்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின்
அக்குளுறுத்தும் புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது''
Advertisement
என்று கூறிய பதில் சுவையானது. அதாவது, "நல்லவளே! உரித்த கொக்குப் போன்று வளைந்த உடலினை உடையவள் நீ. அத்தகைய உன்னை நான் மார்போடு வைத்துத் தழுவுவேனாயின், அக்கூன் என் நெஞ்சிலே முட்டும்; முதுகுடன் வைத்துத் தழுவுவேனாயின் உன்னுடைய கூன் அக்குளுக் காட்டும் (கிச்சுக்குச்சு மூட்டும்). ஆதலால், உன்னைக் கூடுதலேயன்றி, முயங்குதலையும் செய்ய மாட்டேன்' என்றவன், சற்று நெருங்கி வருமாறு அவளை அழைக்கிறான்.
இதைக் கேட்டுக் கோபமுற்ற கூனி, "சீச்சீ! கெட்டவனே! என்னை விட்டு நகர்வாய்!' என்றாள். மேலும், "ஒரு மனிதனின் பாதி உருவமே உடைய குள்ளனே! வளைந்த மரத்தையும் பற்றிப் படரும் பூங்கொடி போல, என்னைப் போன்று கூனுடம்பு இல்லாதிருந்தும், "உம்மைத் தழுவிப் பாதுகாப்பேன்' என்று கூறுவோரும் பலர் உள்ளனர். உன்னுடைய குள்ளமான பிறப்பைவிட எனது கூன் பிறப்புத் தாழ்ந்ததோ? என்று கேட்டாள்.
உடனே, அவன் தன் மனத்துள், "நான் அவளைப் பின்தொடர்ந்து சென்றபொழுது மனம் ஒத்துவராத கூனி, சற்றுத் தொலைவு தள்ளிச் சென்று தானே வளைந்து நெளிந்து குழைகிறாளே' என எண்ணிக் கொண்டான்; வெளிப்படச் சொல்லவும் செய்தான்.
அது கேட்ட கூனி, "தரையில் ஊர்ந்து செல்லும் ஆமையை எடுத்து நிறுத்தி வைத்தாற் போன்று, கைகளிரண்டையும் விலாவுக்குள்ளே வீசி, யான் விரும்பாமலே வந்து என்னைத் துன்புறுத்தும் காமனின் நடவடிக்கையைப் பாராய் நெஞ்சே!' என்றாள்.
குறளன் உடனே, "ஒருவரைத் தழுவுவதற்குக் காரணமான மலர்க் கணையினை உடையவனும், சாமனின் அண்ணனுமாகிய காமனின் நடையைப் பாரேன்!' என்று அவளின் முன் நடந்து ஒருவிதம் காட்டினான். அவளும் மகிழ்ந்தாள். உடனே அவன், "நாமிருவரும் கூடி மகிழ்வதற்கு இன்னின்ன இடம் உகந்ததென்று நமக்குள்ளே பேசி உரையாடுவோம் வா!' என்றான்.
மேலும், இனிமேல் நான் உன்னைக் "கூனி'யென்று ஒருக்காலும் இகழ்ந்து கூறமாட்டேன் என்பதற்கு நமது அரசனின் அடியைத் தொட்டு இப்பொழுதே சூளுரைக்கிறேன்' என்றும்
கூறினான்.
அவளும் "அப்படியே ஆகட்டும்! இனிய மார்பினை உடையவனே! நானும் இனி உன் உடம்பைப் பார்த்து இகழ மாட்டேன். இந்த அரண்மனையில் உள்ளோர் நம்மிருவரையும் பார்த்து இகழ்ந்து பேசுவதற்கு இடந்தரமாட்டேன். அழகான பொன்னுருவம் படைத்தவனே! இந்த அரண்மனைக்குப் புறத்தேயுள்ள சோலைக்கு வருவாயாக! என்கிறாள். இக்காட்சியை வருணித்துச் செல்லும் சங்கப் புலவர்,
""... அகடாரப் புல்லி முயங்குவேம்
துகள்தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடுகாப் பியாத்துவிட் டாங்கு''
என்று பாடி முடிக்கிறார். அதாவது, "சோலைக்குச் சென்று, அறிவுடைய அரசவைச் சான்றோர் ஓலைச் சுவடியை இறுகக்கட்டி, அதன் மேல் எவ்வாறு அரக்கு இலச்சினை பொறிப்பார்களோ அதுபோல, நமது வயிற்றுப் புறம் ஒன்றோடொன்று மிக நெருங்குமாறு இறுகத் தழுவிக் கூடி மகிழ்வோம்' என்று அவள் கூறுகிறாள். இருவரும் இவ்வாறு மகிழ்கின்றனர் என்று நாம் உய்த்துணரும் வகையில் புலவர், நகைச்சுவையும், காதற் சுவையும் வெளிப்படப் பாடியுள்ளார்.